இந்திய ஏற்றுமதியாளர்கள் சங்கம், கடந்த 2017-18-ஆம் நிதி ஆண்டில் சரக்குகள் ஏற்றுமதி இலக்கை 32,500 கோடி டாலராக நிர்ணயித்து இருந்தது. ஆனால் அந்த ஆண்டில் 30,284 கோடி டாலர் அளவிற்கே ஏற்றுமதி இருக்கிறது. எனினும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக ஏற்றுமதி 30,000 கோடி டாலரை தாண்டியது. அதற்கு முன் 2014-15-ஆம் ஆண்டில் ஏற்றுமதி 30,000 கோடி டாலருக்கும் அதிகமான அளவில் இருந்தது.
நடப்பு நிதி ஆண்டில் (2018-19) சரக்குகள் ஏற்றுமதி 35,000 கோடி டாலராக அதிகரிக்கும் என ஏற்றுமதியாளர்கள் சங்கம் மதிப்பீடு செய்தது. இந்த இலக்கை எட்ட முடியும் என மத்திய அரசும் நம்பிக்கை தெரிவித்து இருந்தது. சென்ற நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது (30,284 கோடி டாலர்) இது ஏறக்குறைய 20 சதவீத வளர்ச்சியாக இருக்கும்.
இந்நிலையில், இந்த நிதி ஆண்டில் சரக்குகள் ஏற்றுமதி 33,000 கோடி டாலர் முதல் 34,000 கோடி டாலர் வரை இருக்கும் என எதிர்பார்ப்பதாக வெளிநாட்டு வர்த்தக துறை தலைமை இயக்குனர் அலோக் சதுர்வேதி கூறி இருக்கிறார். நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் (ஏப்ரல் -செப்டம்பர்) நாட்டின் சரக்குகள் ஏற்றுமதி 12.5 சதவீதம் அதிகரித்து 16,400 கோடி டாலராக உள்ளது.
சரக்குகள், சேவைகள்
சரக்குகள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் 2015-2020 வெளிநாட்டு வர்த்தக கொள்கையை மத்திய அரசு மறுஆய்வு செய்துள்ளது. இதில், 2020-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் ஒட்டுமொத்த சரக்குகள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை 90 ஆயிரம் கோடி டாலராக (சுமார் ரூ.65 லட்சம் கோடி) உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.