புதுடெல்லி,
சமூக வலைத்தளங்களில் வெளி வரும் சில செய்திகளை மக்கள் சிலர் கண்மூடித்தனமாக நம்புகின்றனர். 2022 ஆம் ஆண்டாவது முன் எச்சரிக்கையாக இருக்கிறீர்களா...? சரி, மீண்டும் யோசியுங்கள்; கடந்த ஆண்டில் நீங்கள் படித்த போலி செய்திகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
காதலிக்காக தனது பற்களால் செய்யப்பட்ட நகையைப் பரிசாக வழங்கினார் காதலன்...? ஒரு மணமகள் பாராகிளைடிங்கில் பறந்து தவறான திருமண இடத்திற்கு சென்றதும், அங்கு வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொண்டதைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், இதுபோன்ற செய்திகளை நாம் உண்மை என்று நினைத்திருப்போம்.
யாஷ் சூறாவளியின் போது பீகாரின் தர்பங்காவில், உயிரினம் வானில் இருந்து தரையிறங்குவது முதல் மங்களூர் கடற்கரையில் அழும் தேவதையைக் கண்டது வரை, 2021 ஆம் ஆண்டில் விசித்திரமான மற்றும் வினோதமான போலி செய்திகள் வெளிவந்துள்ளன. இது மக்களை பெரிதும் குழப்புகிறது.
கொரோனாவின் பல வகைகளைப் போலவே, தவறான தகவல்களும் வெவ்வேறு வடிவங்களிலும் வண்ணங்களிலும் வந்தன. போலிச்செய்திகள் மூலம் சிலர் உங்களை மகிழ்விக்க அல்லது குழப்பத்தில் ஆழ்த்தினாலும், மற்றவர்கள் வெறுக்கத்தக்க வகையில் தகவல் வெளியிட்டு இருந்தனர்.
பல்வேறு உண்மை சரிபார்ப்பு நிறுவனங்களின் உண்மை சரிபார்ப்பு கட்டுரைகளின் களஞ்சியமான கூகுள் பேக்ட்(Google Fact) செக்கரை பயன்படுத்தி இதனை சரிபார்த்தோம்.
யாஸ் சூறாவளியின் போது பீகாரின் தர்பங்காவில் "தவழும் உயிரினம்" வானத்திலிருந்து விழுந்ததைப் பற்றிய வித்தியாசமான கதையை சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் கிட்டத்தட்ட நம்பினர். ஆனால் அது நீக்கப்படுவதற்கு முன்பே ஆயிரக்கணக்கான பகிர்வுகளைப் பெற்றது. அது இத்தாலிய கலைஞரால் உருவாக்கப்பட்ட சிலிக்கான் பொம்மை ஆனால் அது ஒரு வேற்றுகிரக உயிரினமாக கதை விடப்பட்டது.
மங்களூர் கடற்கரையில் அழும் கடற்கன்னி, உண்மையில் இலங்கையில் படமாக்கப்பட்ட கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வீடியோவாகும்.
பாராகிளைடிங்கில் பறந்து தவறான திருமண இடத்திற்கு சென்றதும், அங்கு வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொண்ட கதை, குவாலியரில் ஒரு மணமகள் ஒரு தவறான திருமண இடத்திற்குள் பாராகிளைடிங்கில் பறந்து, வேறு நபரை திருமணம் செய்து கொண்ட இந்த வினோதமான கதையை கண்டு பல முக்கிய ஊடகங்கள் தடுமாறின. நையாண்டி இணையதளத்தில் வெளியான கற்பனை கதை இது.
ஒரு மனிதன் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இன்ஜினில் இருந்தபடி பயணம் செய்துள்ளார் என்ற செய்தி மிக அதிக அளவில் மக்களிடம் போய் சேர்ந்தது, உண்மை என நம்ப வைத்தது. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தங்கள் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்த நேரத்தில் அங்கிருக்கும் மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு எப்படியாவது வெளியேற வேண்டும் என்ற முயற்சியில் விமானத்தில் தொங்கியபடி எல்லாம் பயணித்தனர் என செய்திகள் வெளிவந்தன. அதன் ஒரு பகுதியாக தான் இந்த வீடியோவும் இணையத்தில் உலா வந்தது. உண்மையில் அது வியட்நாம் நாட்டை சேர்ந்த ஒரு கிராபிக் டிசைனரின் கைவண்ணமே என்பது ஆய்வு செய்த போது தெரிய வந்தது.
மேலும், ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்கள் தங்கியிருந்த அறைகளில் அவர்களின் படுக்கைகள் பாலியல் உறவு வைத்துக்கொள்ள முடியாத வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருந்தன என்ற செய்தி அதிகம் பகிரப்பட்டது. உண்மையில் கொரோனா பெருந்தொற்றுக்கு முன்னரே இந்த படுக்கை வடிவமைக்க பட்டுவிட்டது.
உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு முஸ்லிம் நபர் வழக்கமாக பள்ளிவாசலில் தொழுகைக்காக ஒலிக்கப்படும் புனித பாடலுக்கு பதிலாக, அவர் தனது மொபைல் போனை ஒலி பெருக்கியுடன் தவறுதலாக கனெக்ட் செய்து, அதில் டைனமைட் பாடலை ஒலிபரப்பினார். இதன் காரணமாக கைது செய்யப்பட்ட அவருக்கு ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டது. இது முற்றிலும் கட்டுக்கதை என்பதே உண்மை. அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை.
ஐஐடியில் தங்கப் பதக்கம் பெற்ற ஒரு மாணவர் சமஸ்கிருத மொழியில் குறுஞ்செய்தி அனுப்பும் செயலியை உருவாக்கி உள்ளார் என வலம் வந்த செய்தியும் பொய்யானது ஆகும்.
சி.என்.என் செய்தி நிறுவனம் தலீபான்கள் சண்டையிடும் போதும் முகக்கவசம் அணிந்துள்ளதை பாராட்டி எழுதியிருந்தது என்பதும் பொய்யான செய்தி ஆகும்.
அமெரிக்க அரசு கொரோனா தடுப்பூசி செலுத்தாத பொதுமக்களை முகாம்களில் தனிமைப்படுத்தி வைத்துள்ளது என்பது தவறான செய்தி ஆகும்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் தெருவோரக் கடைக்காரர் ஒருவர் சிறுநீரை உணவுடன் கலந்து விற்றுள்ளார் என்ற செய்தி பலரால் உண்மை என நம்பப்பட்டது. ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. அந்த செய்தி உண்மை என நினைத்து அந்த நபருக்கு சாதிச்சாயம் பூசினர் சிலர்.
காதலனின் பல்லால் ஆன நகையை விரும்பி அணிந்து கொண்ட காதலி என செய்தி வெளிவந்தது. நிஜமாகவே, அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் அந்த காதலனின் நிலைமை தான் என்ன்....? இளம் வயதிலேயே பற்களை தானம் செய்துவிட்டு பல்செட்டுடன் அலைவாரா...?
ஒரு மனிதர் தன் மர்ம பகுதியில் கொரோனா தடுப்பூசியை செலுத்திகொண்டு உள்ளார் என்ற தவறான செய்தியும் அதிகம் பேரால் நம்பப்பட்டது. அறிவியல் பூர்வமாக இது சாத்தியமற்ற முயற்சியாகும்.
கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட சிலருக்கு உடலில் காந்தசக்தி ஏற்பட்டுள்ளது என்ற செய்தி அனைத்து செய்தி ஊடகங்களிலும் பகிரப்பட்டது. ஆனால் அது போலியாக உருவாக்கப்பட்ட செய்தி ஆகும்.
மியூகர்-மைகோசிஸ் பாதிப்பை ஏற்படுத்தும் பயங்கரமான கருப்பு பூஞ்சை, வெங்காய தோலின் அடிப்பாகத்தில் அதிக அளவில் உள்ளன என்ற செய்தி இல்லத்தரசிகள் பலரால் நம்பப்பட்டது. ஆனால் அது உண்மையல்ல.
இப்போது நீங்கள் வானிலிருந்து உயிரினம் விழுந்தது, தடுப்பூசி செலுத்திக் கொண்டால் காந்தசக்தி ஏற்படும், வெங்காயத்தில் கருப்பு பூஞ்சை உள்ளது என்பன போன்ற செய்திகள் எல்லம் முற்றிலும் பொய்யானவை என்பதை அறிந்து கொண்டீர்கள்.
இந்த ஆண்டிலிருந்து போலி செய்திகளை பரப்புவோர் இன்னும் ஏதாவது வித்தியாசமாக சிந்தித்து நம்பும்படியான செய்திகளை உருவாக்குகிறார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம். ஒருபுறம் கொரோனா வைரஸ் தான் உருமாற்றங்கள் அடைந்து ஒமைக்ரான் போன்று வித்தியாசமாக உலகை அச்சுறுத்துகிறது என்றால், இன்னொருபுறம் போலிச் செய்திகளும் உலகை அச்சுறுத்தி வருகின்றன.
அதிகரித்து போன சமூக வலைத்தள பயன்பாடு இதற்கு முக்கிய காரணம். சமூக வலைத்தளங்களில் வலம் வரும் செய்திகள் எல்லாம் உண்மை என கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.