கண்ணாடி தொட்டிகளில் வண்ண மீன்களை பொழுது போக்கிற்காகவும், மனம் அமைதி பெறுவதற்காகவும் வளர்க்கின்றனர். நாம் மனச்சோர்வு அடையும்போது வீட்டில் உள்ள வண்ண மீன் தொட்டியின் முன்பு 20 நிமிடங்கள் அமர்ந்து வண்ண மீனின் செயல்களை உற்று நோக்கிக்கொண்டிருந்தால், சோர்வு நீங்கி மனம் உற்சாகமடையும். மன ஆரோக்கியத்தின் மூலம் உடல் ஆரோக்கியத்தையும் காப்பாற்ற முடியும்.
வண்ண மீன்கள் வளர்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அவைகளுக்கு ஏற்படும் நோய்கள் பற்றி தெரிந்திருப்பதில்லை. கண்ணாடி தொட்டிகளில் வளர்க்கப்படும் பொன் மீன் வகைகள், கோய்கெண்டை வகைகள், மோலி வகை மீன்களுக்கு நோய் தாக்கம் ஏற்படுவது வழக்கம். அது போல விலை மதிப்புமிக்க அரவனா மீன், பூங்கொம்பு மீன், பிளவர் ஹார்ன் மீன்களுக்கும் நோய்த்தாக்கம் ஏற்படும். பொதுவாக வண்ண மீன்களை தாக்கும் நோய்களையும், அவற்றை குணப்படுத்தும் முறையையும் காண்போம்.
நங்கூரப் புழு மற்றும் மீன் பேன்
கண்ணாடித் தொட்டிகளில் வளர்க்கப்படும் வண்ண மீன்களை நங்கூரப் புழு மற்றும் மீன் பேன் போன்ற ஒட்டுண்ணிகள் தாக்குவது உண்டு. புதிய மீன்களை வெளியில் இருந்து வாங்கி வந்து, கண்ணாடித் தொட்டியில் உள்ள மற்ற மீன்களுடன் விடும்போது இந்த வகை நோய்கள் தாக்குவதுஉண்டு. புதிய மீன்கள் ஏற்கனவே நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தால் மற்ற மீன்களுக்கும் பரவிவிடும். எனவே வெளியில் இருந்து வாங்கி வரும் மீன்களை நன்றாக பரிசோதித்து வாங்க வேண்டும். ஒருவேளை நோய்த் தாக்கம் இருந்தால் அவைகளை மற்ற மீன்களோடு கண்ணாடித் தொட்டிக்குள் விடக்கூடாது. 1 லிட்டர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் அளவு கல் உப்பை கரைத்து அதில் நோய் தாக்கப்பட்ட மீன்களை சிறிது நேரம் நீந்தவிட்டு, பிறகு வளர்ப்புத் தொட்டியில் விடுதல் வேண்டும்.
நங்கூரப் புழு மற்றும் மீன் பேன் போன்றவை பெரும்பாலும் தொட்டியில் உள்ள பொன் மீன் வகைகளையும், கோய்கெண்டை மீன் வகைகளையும் இதர சிறியரக மீன்களையும் தாக்கும். நங்கூரப்புழு தாக்குதல் இருந்தால் முதலில் மீனின் உடல் பகுதியில் சிவப்புநிற புள்ளி ஏற்பட்டு, பிறகு ரத்தம் கசிவு ஏற்படும். பின்பு ஒட்டுண்ணி வளர்ச்சி அடைந்து நங்கூரம் போன்ற தன்னுடைய முட்களை மீனின் உடலில் ஒட்டி மீனின் உடம்பில் இருந்து ரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழும். இது போன்ற ஒட்டுண்ணிகள் இருந்தால் இடுக்கி அல்லது கைவிரல் நகத்தினால் சிலர் பிடுங்குவது வழக்கம். ஆனால் இதற்கு செலவிடும் நேரம் அதிகம்.
நோய்த் தாக்கம் அதிகமாக இருந்தால் அனைத்து ஒட்டுண்ணிகளையும் நீக்குவது கடினம். ஒட்டுண்ணி தாக்கம் உள்ள மீன்களை குணப்படுத்த தற்போது டைகுளோராவாஸ் சோடியம் என்கிற மருந்து பயன்படுத்தப்படுகிறது. 1 லிட்டர் தண்ணீரில் ஒரு சொட்டு மருந்தை விட்டு நன்றாக கலக்க வேண்டும். கலக்கும்போது, கைக்கு கறையுரை போட்டுக்கொள்ள வேண்டும். பிறகு பாதிக்கப்பட்ட மீன்களை 5 முதல் 10 எண்ணிக்கையில் எடுத்து இந்த நீரில் நீந்த விட வேண்டும். அந்த மருந்து நீரில் காற்று புகுத்தியால் காற்றை செலுத்த வேண்டும். 5 முதல் 10 நிமிடம் வரை நீந்திய பிறகு மீனை கண்ணாடித் தொட்டியில் விடவேண்டும். இது போன்று 2 அல்லது 3 நாட்கள் சிகிச்சை அளித்தால் மீன் உடம்பில் ஒட்டியுள்ள நங்கூரப்புழு கீழே விழுந்து விடும். முழுவதும் கீழே விழுந்த பின்பு, மீனின் பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள புண் குணமடைய 25 லிட்டர் தண்ணீருக்கு 250 மில்லி கிராம் ஆக்சிடெட்ராசைக்லின் மாத்திரையை கரைத்து விட்டால் 2 அல்லது 3 நாட்களில் புண் குணமடைந்து விடும். இது கண்ணாடித் தொட்டியில் வளர்க்கப்படும் மீன்களுக்கான சிகிச்சை.
ஒட்டுண்ணி தாக்கம் பெரிய சிமெண்டு தொட்டியில் உள்ள மீன்களுக்கு ஏற்பட்டாலும் இதே போன்ற மருந்து அளவுமுறை போதுமானது. சிமெண்டு தொட்டியில் உள்ள மீன்கள் அனைத்தையும் பிடித்து சிகிச்சை அளிக்க முடியவில்லை என்றால் மருந்தை சிமெண்டு தொட்டியில் கலந்து 10 முதல் 15 நிமிடம் மீனை நீந்தவிட்டு பிறகு மீனை வேறு தொட்டிக்கு மாற்றிவிடவேண்டும். இதே போல் 2 அல்லது 3 நாட்கள் சிகிச்சை அளிக்க வேண்டும்.
பிறகு மருந்து கலந்த சிமெண்டு தொட்டியை நன்றாக கழுவிவிட வேண்டும். இது போல் நங்கூரப்புழு தாக்கப்பட்ட மீன்களுக்கு சிகிச்சை அளித்தால் மிக விரைவில் குணமடையும். சிமெண்டு தொட்டிகளில் மீன்களை இருப்பு செய்வதற்கு முன் தொட்டியை சுண்ணாம்பு கரைசலை கொண்டு உட்புறம் பூச வேண்டும். சுண்ணாம்பு தடவிய 2 நாட்கள் கழித்து நீர் விட்டு மறுநாள் மீனை தொட்டியில் விட வேண்டும். இவ்வாறு செய்வதால் ஓரளவு நோய் தாக்கம் குறையும்.
மீன் பேன்
அக்குலஸ் என்று கூறப்படும் மீன் பேன், ஒட்டுண்ணி வகையை சேர்ந்தது. இந்த ஒட்டுண்ணியானது புதிதாக தொட்டியில் செடிகள் வைத்தாலோ அல்லது புதிதாக மீன்கள் தொட்டியில் விட்டாலோ பரவக்கூடியது. மீன் பேனானது சிறிய அளவில் வட்ட வடிவத்தில் அல்லது முட்டை வடிவத்தில் பச்சை நிறத்தில் காணப்படும். நோய் தாக்கப்பட்ட மீன் உள்ள தொட்டியில் இருக்கும் ஒட்டுண்ணியானது ஒரு மீனில் இருந்து மற்றொரு மீனுக்கு நீரில் நீந்திச்சென்று ஒட்டிக்கொள்ளும். கண்ணாடித்தொட்டியில் இதன் செயல்பாடுகளை காண முடியும். இந்த ஒட்டுண்ணி பெரும்பாலும் பொன் மீன் மற்றும் கோய்கெண்டை மீன்களின் மேல் காணப்படும். இந்த ஒட்டுண்ணிகளுக்கு மீனின் உடலில் ஒட்டிக்கொள்ள வசதியாக சிறிய முட்கள் போன்ற கால்கள் உண்டு. இந்த முட்களைகொண்டு மீனின் உடலில் உள்ள ரத்தத்தை உறிஞ்சி மீன்பேன் உயிர் வாழும்.
மீன் பேன் தாக்கப்பட்ட மீன்களை முதலில் கண்ணாடித்தொட்டியில் இருந்து அப்புறப்படுத்தி, நீர் நிரப்பப்பட்ட பக்கெட்டில் விட வேண்டும். நங்கூரப்புழு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் டைகுளோ ரோவாஸ் சோடியம் மருந்தையே பயன்படுத்த வேண்டும். மருந்து உபயோகிக்கப்படும் அளவு மேற்கூறப்பட்டது போல் இருக்க வேண்டும். மீன் பேன் தாக்கப்பட்ட மீன்களை சிகிச்சைக்கு உட்படுத்தப்படும்போது மீன் பேனானது மருந்தினால் நீரில் சுருண்டு விழுவதை கண்கூடாக பார்க்க முடியும். இந்த சிகிச்சை மூலம் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் மீன் பேனை முழுமையாக நீக்கிவிடலாம். மீனில் ஏற்பட்ட புண்ணை குணப்படுத்தவும் நங்கூரப் புழுவுக்கு அளிக்கப்பட்டது போன்ற சிகிச்சையை செய்ய வேண்டும்.
- தொடரும்.
கட்டுரை: பேராசிரியர்கள் குழு, தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம்.