அல்சைமர், டிமென்சியா போன்ற முதுமைக்கால நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, குறிப்பிட்ட கிராமம் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் மெட்ரோ வான்கூவர் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள இக்கிராமம், வருகிற ஜூலை மாதம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கிராமத்தில், மாடிகள் அற்ற கட்டிடங்கள், வீடுகள், கடைகள், சமூக மையம் எனப் பல்வேறு வசதிகள் உள்ளன.
சுற்றிலும் பாதுகாக்கப்பட்டுள்ள இக்கிராமத்தில் இருந்து வெளியேறுவதற்கு ஒரு வழி மட்டுமே இருக்கும். இவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், ஞாபகமறதி உள்ளவர்கள் தவறுதலாக வெளியே சென்று, திரும்பி வருவதற்கு வழிதெரியாமல் காணாமல் போகும் சம்பவங்களைத் தடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது.
அத்துடன், அங்கே தங்குவோருக்கு குழப்பம் ஏற்படாத வகையில், படிகள், மின் தூக்கிகள், மின் படிகள், மாடிகள் போன்றவை இல்லாத வகையில் குறித்த இந்தக் கிராமம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் தங்குவதற்காக ஏற்கனவே பலரும் முன்பதிவு செய்துள்ள நிலையில், குறிப்பிட்ட எண்ணிக்கையுடன் பதிவை நிறுத்திக்கொள்ளவிருப்பதாக இந்தக் கிராமத்தை அமைத்து வருவோர் தெரிவித்துள்ளனர்.
உலகிலேயே முதல்முறையாக இந்த மாதிரியான கிராமம் ஒன்று நெதர்லாந்தில் திறக்கப்பட்டுள்ளது. அதை முன்மாதிரியாகக் கொண்டுதான், கனடாவிலும் இதுபோன்ற முதலாவது கிராமம் அமைக்கப்பட்டுள்ளது.
அந்திமக் காலத்தைக் கழிக்கும் முதிய வயதினருக்கு, அதிலும் குறிப்பாக முதுமைப்பருவ நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த வாழிடச் சூழலை ஏற்படுத்திக்கொடுப்பது வாழ்த்துக்குரியதுதான்.