மக்காத கழிவாக விளங்கும் பிளாஸ்டிக் பைகள் மண்ணில் ஊன்றப்படும் மரக்கன்றுகளுடன் இணைந்திருந்தவாறே பூமிக்கு கேடு விளைவிக்கின்றன. அதனை உணர்ந்து, பிளாஸ்டிக் பைக்கான மாற்றுப்பொருளை மக்கள் தேடுகிறார்கள். அதற்கு தீர்வாக பள்ளி மாணவி ஒருவர் மக்கும் செடி வளர்ப்பு பையை உருவாக்கி, அதற்கு விருதும் பெற்று அசத்தி இருக்கிறார். அவரது பெயர் ஏ.ஸ்ரீஜா. தெலுங்கானா மாநிலம் காட்வால் மாவட்டம் சிந்தால்குண்டாவில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
ஸ்ரீஜா
அங்கு படிக்கும் மாணவ- மாணவியர் ஆண்டு தோறும் மரக்கன்று நடும் நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்கள். மாணவர்கள் தங்கள் பிறந்த நாளில் மரக்கன்று நடுவதற்கும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். பிறந்தநாள் அன்று தாங்கள் கொண்டு வரும் மரக்கன்றை பள்ளி வளாகத்தில் நடும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். அப்படித்தான் ஸ்ரீஜாவும் மரக்கன்று நடுவதற்காக மண்ணை தோண்டி இருக்கிறார். அப்போது ஏற்கனவே நடப்பட்டிருந்த மரக்கன்றுடன் சேர்த்து மண்ணில் புதைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பை அவரது கண்ணில் பட்டிருக்கிறது. அதை பார்த்து வேதனை அடைந்தவர் பிளாஸ்டிக் பைக்கு
மாற்றுப் பொருளை உருவாக்குவது பற்றி சிந்தித்துள்ளார்.
நான் மரக்கன்று நடுவதற்காக குழி தோண்டியபோது பிளாஸ்டிக் பைகளின் சிதறல்கள் வெளிவந்தன. அவை முந்தைய மரக்கன்றுகளின் ஒரு பகுதிதான் என்பதை உணர்ந்தேன். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக்குகளை ஒழிக்காமல், அவற்றை நாமே மண்ணுக்குள் மரக்கன்றுகளோடு புதைத்து வைப்பதை நான் விரும்பவில்லை. மரக்கன்றுக்கான நாற்றுகளை வேறு வழியில் எப்படி பாதுகாத்து வளர்க்கலாம் என்று யோசிக்க தொடங்கினேன் என்கிறார்.
ஸ்ரீஜா சில மாத ஆராய்ச்சிகளுக்கு பிறகு நிலக்கடலை தோடுகளை கொண்டு செடி வளர்ப்புக்கான தொட்டியை உருவாக்கி இருக்கிறார். அவர் வசிக்கும் பகுதியில் நிலக்கடலை சாகுபடி பிரதானமாக நடக்கிறது. அங்குள்ள மில்களில் நிலக்கடலையை உடைத்து எடுத்த பிறகு அதன் வெளிப்புற தோடுகள் கழிவுகளாக குப்பையில் கொட்டப்படுவதை கவனித்தவர் அதையே செடி வளர்ப்புக்கான தொட்டியாக மாற்ற முடிவு செய்திருக்கிறார்.
பெரும்பாலும் நிலக்கடலை தோடுகள் குப்பையாகத்தான் மாறுகின்றன. அவற்றை கூழாக்கி உரமாகவும் சிலர் பயன்படுத்துகிறார்கள். அந்த தோடுகளில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் நிறைந்திருப்பதை ஆசிரியர்கள் மூலம் அறிந்தேன். மேலும் நிலக்கடலை மண்ணின் மேல் அடுக்கில் வளரும் தன்மை கொண்டது. அது நீரை தக்க வைத்து செடியின் வளர்ச்சிக்கும் துணை புரியும் என்பதையும் தெரிந்துகொண்டேன் என்பவர், தனது வீட்டுக்கு அருகில் உள்ள மில்லில் இருந்து நிலக்கடலை தோடுகளை வாங்கி வந்து மிக்சியில் போட்டு அரைத்து கூழாக்கி கப் வடிவத்தில் தயார் செய்திருக்கிறார். ஆனால் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை.
பின்பு ஆசிரியர்களின் ஆலோசனைப்படி ரசாயனம் கலக்காத இயற்கை பொருட்களையும் அதில் சேர்த்து பயன்படுத்தி செடி வளர்ப்பு தொட்டியை உருவாக்கி இருக்கிறார். அதில் மண் சேர்த்து வேப்பங்கன்று வளர்த்திருக்கிறார். அதை பள்ளி வளாகத்தில் குழி தோண்டி புதைத்திருக்கிறார். நிலக்கடலை கூழில் நீரை தக்கவைத்தபடி அந்த செடி நன்றாக வளர்ந்திருக்கிறது.
அதைத்தொடர்ந்து நிலக்கடலை தோட்டில் தொட்டி தயார் செய்ய தொடங்கிவிட்டார். இப்போது ஸ்ரீஜாவின் கைவண்ணத்தில் தயாரான நிலக்கடலை தோடு தொட்டியில் ஏராளமான மரக்கன்றுகள் வளர்ந்திருக்கின்றன. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) ஸ்ரீஜாவின் முயற்சியை பாராட்டி விருது வழங்கி கவுரவித்துள்ளது.