இந்தியா, சீனா
உலக அளவில் தங்கம் இறக்குமதியில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 900 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில் 3,280 கோடி டாலருக்கு தங்கம் இறக்குமதி ஆகி இருந்தது. முந்தைய நிதி ஆண்டில் அது 3,370 கோடி டாலராக இருந்தது. ஆக, டாலர் மதிப்பு அடிப்படையில் தங்கம் இறக்குமதி 3 சதவீதம் குறைந்து இருந்தது.
செப்டம்பர் காலாண்டில் 80.5 டன் தங்கம் இறக்குமதி ஆகி இருந்தது. கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது, அளவு அடிப்படையில் இறக்குமதி 66 சதவீதம் குறைந்தது. இதே காலத்தில் தங்கத்தில் முதலீடு 35 சதவீதம் சரிவடைந்துள்ளது. தங்கம் விற்பனை 32 சதவீதம் குறைந்து 123 டன்னாக இருந்தது.
நம் நாட்டில் அக்டோபர் மாதத்தில், 38 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 33 சதவீதம் குறைவாகும். அப்போது அது 57 டன்னாக இருந்தது. இதே காலத்தில் டாலர் மதிப்பில் தங்கம் இறக்குமதி 4.5 சதவீதம் அதிகரித்து 184 கோடி டாலராக உள்ளது.
நடப்பு 2019-ஆம் ஆண்டில் இந்தியாவில் தங்கம் தேவைப்பாடு 700 டன்னாக இருக்கும் என உலக தங்க கவுன்சில் மதிப்பீடு செய்துள்ளது. தங்கம் இறக்குமதி 220 டன் வரை குறையும் எனவும் இக்கவுன்சில் தெரிவித்து இருக்கிறது.
தங்க கட்டிகள்
இறக்குமதி செய்யப்படும் தங்க கட்டிகள் மற்றும் கச்சா வைரங்கள் மதிப்புக் கூட்டப்பட்டு தங்க, வைர ஆபரணங்களாக மறுஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையின் பங்கு 14 சதவீதமாக உள்ளது. அமெரிக்கா, ஹாங்காங், ஐரோப்பா மற்றும் ஐக்கிய அரபு குடியரசு நாடுகள் இந்தியாவில் இருந்து நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களை அதிக அளவில் இறக்குமதி செய்கின்றன. நம் நாட்டின் நவரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு மட்டும் சுமார் 25 சதவீதமாக உள்ளது.