புதுடெல்லி
2019-20-ஆம் நிதி ஆண்டின் முதல் மாதத்தில் (ஏப்ரல்), தங்கம் இறக்குமதி 54 சதவீதம் அதிகரித்து 397 கோடி டாலராக இருக்கிறது. எனவே அந்த மாதத்தில் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா முதலிடம்
உலக அளவில் தங்கம் இறக்குமதியில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. நம் நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக 800 டன் முதல் 900 டன் வரை தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது.
கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில் 3,280 கோடி டாலருக்கு தங்கம் இறக்குமதி ஆகி உள்ளது. முந்தைய நிதி ஆண்டில் அது 3,370 கோடி டாலராக இருந்தது. ஆக, டாலர் மதிப்பு அடிப்படையில் தங்கம் இறக்குமதி 3 சதவீதம் குறைந்து இருக்கிறது. மார்ச் மாதத்தில் மட்டும் தங்கம் இறக்குமதி 31 சதவீதம் அதிகரித்து 327 கோடி டாலராக இருக்கிறது.
இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் தங்கம் இறக்குமதி 397 கோடி டாலராக இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 258 கோடி டாலராக இருந்தது. ஆக, இறக்குமதி 54 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் ஏப்ரல் மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை 1,533 கோடி டாலராக அதிகரித்து இருக்கிறது.
நடப்பு ஆண்டில் மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் நம் நாட்டில் 192 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் அது 151 டன்னாக இருந்தது. ஆக, அளவு அடிப்படையில் இறக்குமதி 27 சதவீதம் உயர்ந்துள்ளது. முதல் காலாண்டில் நாட்டின் தங்கம் தேவைப்பாடு (விற்பனை) 159 டன்னாக உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது இது 5 சதவீதம் அதிகமாகும். இதே காலத்தில் ரூபாய் மதிப்பில் தங்கம் விற்பனை (தேவைப்பாடு) 13 சதவீதம் உயர்ந்து ரூ.47,010 கோடியாக இருக்கிறது.
நடப்புக்கணக்கு
நடப்புக்கணக்கு பற்றாக்குறை என்பது மொத்த அன்னிய செலாவணி செலவிற்கும், வருவாய்க்கும் இடையிலான வித்தியாசமாகும். சரக்குகள் இறக்குமதி அதிகரிக்கும்போது நடப்புக்கணக்கு பற்றாக்குறையும் அதிகரிக்கிறது.
2018 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் நடப்புக்கணக்கு பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதமாக உள்ளது. இதன்படி 1,690 கோடி டாலர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டின் இதே காலத்தில் அது 2.1 சதவீதமாக (1,370 கோடி டாலர்) இருந்தது.
நடப்புக்கணக்குப் பற்றாக்குறை கட்டுக்குள் இருக்க வேண்டுமானால் தங்கம் மற்றும் எண்ணெய் இறக்குமதியை குறைப்பதுடன் அன்னிய முதலீட்டை அதிகம் ஈர்க்க வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.