சிறப்புக் கட்டுரைகள்

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரெயிலில் பயணிக்க டிக்கெட் எவ்வளவு? சிறப்பம்சங்கள் என்ன?

ஹைட்​ரஜன் எரிபொருளில் இயங்​கும் வகையி​லான ரயில் இன்ஜினை தயாரிக்க கடந்த 2021-ம் ஆண்டு முயற்​சிகள் தொடங்​கின.

புதுடெல்லி

ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் பயணிகள் ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரெயில், அரியானா மாநிலத்தில் வடக்கு ரெயில்வேயின் ஜிந்த்–சோனிபட் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இதன் மூலம் ஹைட்ரஜன் ரெயில் சேவையை அறிமுகப்படுத்திய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

ரூ.5-ல் டிக்கெட்

இந்த ரெயிலின் சிறப்பம்சங்களில் ஒன்று குறைந்த கட்டணமாகும். பயண தூரத்துக்கு ஏற்ப டிக்கெட் கட்டணம் ரூ.5 முதல் அதிகபட்சமாக ரூ.25 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் நாளான இன்று ரயிலில் பயணிக்க பலரும் ரூ.5 டிக்கெட் வாங்கியே பயணம் செய்தனர்.

இயக்கப்படும் வழித்தடம்

இந்த ஹைட்ரஜன் ரெயில் ஜிந்த் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து சோனிபட் வரை இயக்கப்படுகிறது. வழியில் ஜிந்த் சிட்டி, பாண்டு பிந்தாரா, லாலித் கேரா ஹால்ட், பாம்பேவா, இசாபூர் கேரி ஹால்ட், புடானா ஹால்ட், காண்ட்ராய் ஹால்ட், ரப்ரா ஹால்ட், லாத், மோகனா, பர்வாஸ்னி ஹால்ட் உள்ளிட்ட பல நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலுக்கு மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு வேகம் மணிக்கு 110 கிலோமீட்டராகும்.

எப்படி இயங்குகிறது?

டீசல் அல்லது மின்கம்பி வழி மின்சாரத்தை பயன்படுத்தும் வழக்கமான ரெயில்களைப் போல இல்லாமல், இந்த ரெயில் ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள் மூலம் ரெயிலுக்குள்ளேயே மின்சாரத்தை உற்பத்தி செய்து இயங்குகிறது. இதில் ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் வேதியியல் வினையில் ஈடுபட்டு மின்சாரத்தை உருவாக்குகின்றன. இதன் விளைவாக நீராவி மற்றும் வெப்பம் மட்டுமே உருவாகுவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு மிகவும் குறைவாகும். இந்த ரெயிலில் 10 பெட்டிகள் உள்ளன. இதில் ஹைட்ரஜன் சக்தியில் இயங்கும் 2 டிரைவிங் பவர் கார்கள் மற்றும் 8 பயணிகள் பெட்டிகள் இடம்பெற்றுள்ளன. 1,200 கிலோவாட் திறன் கொண்ட ஹைட்ரஜன் எரிபொருள் செல் இயக்க அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 2,600 பயணிகள் பயணம் செய்யும் வசதி உள்ளது. மேலும் ஹைட்ரஜன் கசிவு, புகை, தீப்பற்றுதல் மற்றும் அதிக வெப்பநிலை போன்றவற்றை உடனுக்குடன் கண்டறியும் நவீன பாதுகாப்பு அமைப்புகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

3 ஆயிரம் கிலோ ஹைட்ரஜன் சேமிப்பு வசதி

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஜிந்த் பகுதியில் நாட்டின் மிகப்பெரிய ரெயில்வே ஹைட்ரஜன் சேமிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 3 ஆயிரம் கிலோ ஹைட்ரஜனை சேமிக்கும் வசதி உள்ளது. சர்வதேச பாதுகாப்பு தரநிலைகளுக்கு ஏற்ப இந்த மையம் அமைக்கப்பட்டதுடன், பாதுகாப்பு ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த ஹைட்ரஜன் ரெயில் சேவை அறிமுகத்தின் மூலம் ஜெர்மனி, ஜப்பான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வரிசையில் இந்தியாவும் ஹைட்ரஜன் ரெயில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ளது.

2021 ல் தொடங்கிய பணி;

ஹைட்​ரஜன் எரிபொருளில் இயங்​கும் வகையி​லான ரயில் இன்​ஜினை தயாரிக்க கடந்த 2021-ம் ஆண்டு முயற்​சிகள் தொடங்​கின. ரூ.136 கோடி மதிப்​பீட்​டில் வடக்கு மண்டல ரயில்வே இத்திட்​டத்தை 2022 ஏப்​ரலில் தொடங்​கியது. இத்திட்​டத்​துக்​கான டெண்​டர் ஐத​ரா​பாத்​தை சேர்ந்த மேதா நிறு​வனத்​துக்கு வழங்​கப்​பட்​டது. இந்​நிறு​வனம்​தான் எரிபொருட்களை சப்ளை செய்​கிறது. ஹைட்​ரஜன் ரயிலை வடிவமைக்​கும் பணி​கள் சென்னை பெரம்​பூரில் உள்ள ரயில் பெட்டிதொழிற்​சாலை​யில் நடை​பெற்​றன. பணி​கள் முடிந்ததைத் தொடர்ந்து சோதனை ஓட்​டங்​களும் நடை​பெற்​றன. இதையடுத்​து, ரயிலை அறி​முகப்​படுத்த கடந்த மே 22-ம் தேதி ரயில்வே வாரி​யம் ஒப்​புதல் அளித்​தது. இந்​நிலை​யில், நாட்டின் முதலாவது ஹைட்​ரஜன் ரயி​லை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.