சிறப்புக் கட்டுரைகள்

பாம்பு என்றால்... பயம் இல்லை; பாசம் உண்டு

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், 60 வயது வித்யா ராஜுவைப் பார்த்தால், பாம்புகளும் அடங்கி விடுகின்றன.

தினத்தந்தி

கேரள மாநிலம் கொச்சி பன்னம்பில்லி நகரைச் சேர்ந்தவர் வித்யா ராஜு. இவரது சொந்த மாநிலம் பீகார். கணவர் கப்பற்படையில் பணியாற்றியதால் குடும்பம் ஊர், ஊராக இடம்பெயர்ந்து, தற்போது கேரளாவில் செட்டிலாகி இருக்கிறார்கள். தன்னை விலங்கு நல ஆர்வலராக அடையாளப்படுத்தும் வித்யாவின் வாழ்க்கை ரொம்பவும் சுவாரசியமானது. அதை அவர் சொல்ல கேட்போம்...

விலங்குகள் மீது ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

என்னுடைய அப்பா வீட்டிற்கு அருகில் பெரிய காடு இருக்கிறது. அங்கிருந்து நிறைய விலங்குகளை அப்பா வீட்டிற்கு அழைத்து வருவார். குறிப்பாக காயம்பட்ட விலங்குகளை வீட்டிற்கு தூக்கி வந்து கரிசனம் காட்டுவார். அப்பாவை தொடர்ந்து நானும் விலங்குகள் மீது கரிசனம் காட்ட ஆரம்பித்தேன். என் கண் எதிரே எந்த ஒரு விலங்கினமும், துன்புறுவதை நான் விரும்பமாட்டேன். அதற்கு ஏதாவது ஒரு வகையில் உதவ முடியுமா..? என யோசிப்பேன். செயல்படுவேன்.

சரி பாம்புகளை பிடிக்க தொடங்கியது எப்படி?

என் கணவர் கோவாவில் பணியாற்றியபோது, ஊரில் இருந்து ஒதுக்குப்புறமான பகுதியில் தங்கியிருந்தோம். நீரோடைக்கு மிக அருகில் அந்த குடியிருப்பு இருந்தது. அதன் காரணமாக ஒரு நாளில், 3 அல்லது 4 பாம்புகள் குடியிருப்பிற்குள் புகுந்துவிடும். அதை பலர் அடித்து கொன்றுவிடுவார்கள். சிலர் மட்டும் பாம்பு பிடிப்பவர்களை அழைத்து, பாம்புகளை பத்திரமாக அப்புறப்படுத்துவார்கள். அப்படி பாம்புகளை பிடிக்க வருபவர்களிடம், பாம்பு பிடி வித்தையை கற்றுக்கொண்டேன். ஒரு மாதத்திற்குள் ஓரளவிற்கு பாம்பு பிடிக்க கற்றுக்கொண்டதும், அவர்கள் முன்னிலையிலேயே பாம்பு பிடிக்க ஆரம்பித்தேன். என்னுடைய தவறுகளை சுட்டிக்காட்டி, பாம்புபிடி வித்தையை முழுமைப்படுத்தினர்.

முதன் முதலில் பிடித்த பாம்பு எது?

தண்ணீர் பாம்பு. அதுவும் என் வீட்டிற்குள் நுழைந்த பாம்பு அது. அதை ரொம்ப சுலபமாகவே பிடித்துவிட்டேன். ஆனால் பிடிப்பட்ட பாம்பை வெளியில் கொண்டு போய் விடசென்றபோது, அது பலமுறை தப்பித்துவிட்டது. அதுமட்டுமா... குடியிருப்பின் பல வீடுகளில் நுழைந்து ஆட்டம்போட்டது. இறுதியாக பிடித்து, அருகில் இருந்த நீர் நிலையில் விட்டுவிட்டேன்.

இதுவரை மொத்தம் எத்தனை பாம்புகளை பிடித்திருக்கிறீர்கள்.

900-க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்திருக்கிறேன். இதில் பெரும்பாலான பாம்புகளை கேரளாவில்தான் பிடித்திருக்கிறேன். அதுவும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சமயங்களில், எல்லா வீடுகளிலும் பாம்புகள் தஞ்சம் புகுந்துவிட்டன. அதை ஒவ்வொன்றாக பிடித்து, காட்டிற்குள் விடுவதற்குள், ரொம்பவே களைத்துபோய் விட்டேன்.

பாம்புபிடி வாழ்க்கையில் நீங்கள் பிடித்த பெரிய பாம்பு எது?

நிறைய மலைப்பாம்புகளை பிடித்திருக்கிறேன். குட்டி பாம்புகளை பிடிப்பதை காட்டிலும், பெரிய பாம்புகளை பிடிப்பது சுலபம். ஏனெனில் குட்டி பாம்புகள் சுறுசுறுப்பானவை. கொஞ்சம் அசந்தாலும், நம் கண்ணில் மண்ணை தூவிவிட்டு, தப்பித்துவிடும். ஆனால் பெரிய மலைப்பாம்புகள் சோம்பேறியானவை. அதனால் அவற்றை கையாள்வதும், பிடிப்பதும் சுலபம்.

பாம்பு தவிர்த்து வேறு எந்த விலங்குகளை அதிகம் விரும்புவீர்கள்?

பாம்புக்கு இணையான கழுகுகளை நான் விரும்புவேன். வேட்டை விலங்கு பட்டியலில் கழுகுகள் இருந்தாலும், அவற்றுக்கும் மனித உதவிகள் தேவைப்படுகிறது. குறிப்பாக நகரங்களுக்கு மிக அருகில் வாழும் கழுகுகளை, நான் பாதுகாக்க ஆசைப்படுகிறேன். பட்டம் விடும் விளையாட்டினால், கழுகுகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. பாட்டில் ஓடுகள் தடவப்பட்ட கயிறு, கழுகுகளின் கழுத்தை பதம் பார்த்துவிடுகின்றன. அதனால் கழுகுகளின் நலன் காக்கும் ஒரு அமைப்பை நடத்தி வருகிறேன்.

விலங்குகள் மீது ஆர்வம் காட்டுகிறீர்கள். அதற்காக பிரத்யேக படிப்பு எதுவும் படித்தீர்களா?

கல்லூரி பருவத்தில் விலங்கியல் படிக்க ஆசைப்பட்டேன். இறுதியில் பொருளாதாரம் படிக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த விஷயம் எப்படியோ என் கணவரின் காதுகளுக்கு எட்ட, அவர் தொலைத்தூர கல்விமுறையில் விலங்கியல் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். அதனால் ஆர்வமாய் விலங்கியல் படித்து முடித்திருக்கிறேன். அதேசமயம், அடிப்பட்ட விலங்குகளை எப்படி கையாள்வது என்ற 6 மாத படிப்பையும் முடித்திருக்கிறேன்.

பாம்புகளோடு விளையாடுகிறீர்கள். எப்போதாவது கடிபட்டது உண்டா?

கடவுளின் துணையால், அப்படி ஒரு விபத்து என் வாழ்க்கையில் இதுவரை நடக்கவில்லை. ஏனெனில் நான் முன் னெச்சரிக்கையோடுதான் பாம்புகளை பிடிக்க முயல்வேன். மேலும் என்னால் பிடிக்க முடிந்த சூழ்நிலை இருக்கும் இடங்களில் மட்டுமே பாம்பு பிடிப்பேன்.

உங்கள் கணவர், பாம்பு பிடிப்பது குறித்து ஏதாவது சொல்வாரா?

இல்லை. என்னுடைய உலகமே விலங்குகள்தான். இதை என் கணவர் நன்கு அறிவார். அதனால் பாம்பு பிடிக்க செல்கையிலும், விலங்குகள் சம்பந்தப்பட்ட வேலைகளிலும், அவர் தடுத்து நிறுத்துவதே இல்லை.

பாம்புகளை பார்த்து பயந்து நடுங்கிய சம்பவம் உண்டா?

பாம்புகள் மீது பயம் இருப்பது இயற்கையே. ஆனால் அவற்றை பார்த்தால், எனக்கு பயம் ஏற்படுவது இல்லை. மாறாக, அவற்றின் மீது பாசம்தான் ஏற்படுகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்