சிறப்புக் கட்டுரைகள்

அண்டார்டிகாவில் கால் பதித்த முதல் பெண் வன அதிகாரி

சாகச பயணம் மேற்கொள்ள விரும்புபவர்களில் பலருக்கு பனி படர்ந்திருக்கும் கண்டமான அண்டார்டிகாவுக்கு செல்வது பெருங்கனவாகவே இருக்கும். அண்டார்டிக்காவுக்குள் சுற்றுப்பயணம் மேற்கொள்வது என்பது ஆண்களுக்கே சவாலான விஷயம்.

தினத்தந்தி

பெண்களாலும் அந்த பனி கண்டத்தில் வலம் வர முடியும் என்பதை தற்போது நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். கர்நாடகாவை சேர்ந்த பெண் வனத்துறை அதிகாரி தீப் ஜெ கான்ட்ராக்டர் சமீபத்தில் அண்டார்டிகா சென்று அசத்தி இருக்கிறார். கர்நாடக வனத்துறை சார்பில் சாதனை படைத்த முதல் பெண்மணி என்ற பெருமையையும், இந்திய அளவில் மூன்றாவது வன அதிகாரி என்ற அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார். பருவ கால நிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வின் அங்கமாக இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

38 வயதாகும் ஐ.எப்.எஸ். அதிகாரியான தீப் ஜெ கான்ட்ராக்டர், இந்த விழிப்புணர்வு பயணத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல் பயணம் எளிதாக அமையவில்லை. அண்டார்டிகா செல்வதற்கான பயிற்சியின் போதே சிரமங்களை அனுபவிக்க தொடங்கிவிட்டார். பயிற்சி நாட்களில் மூட்டுவலி, குடல் அழற்சி போன்ற பாதிப்புகளுக்கு ஆளானார். அதனால் பயிற்சியையும், பயணத்தையும் தொடர முடியாத சூழல் உருவானது. இருப்பினும் பயணத்தில் இருந்து முழுமையாக விலகுவதற்கு அவருடைய மனம் ஒப்புக்கொள்ளவில்லை. மனதளவில் தயாராக இருந்தவர், உடல் பாதிப்புகளை சரி செய்துவிட்டு ஆண்டார்டிகா செல்ல ஆயத்தமானார்.

ஆண்டார்டிகா பயணம் பற்றி ஆய்வு செய்ய தொடங்கியபோது, இது சாதாரண பயணம் அல்ல என்பதை உணர்ந்தேன். பருவகால நிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வு பயணமாக அமைந்திருப்பதை புரிந்து கொண்டேன். அண்டார்டிகாவை பற்றி அறியவும், அங்கு ஏற்படும் பருவ கால மாற்றங்களை நேரில் பார்க்கவும் ஆர்வம் கொண்டேன் என்பவர் பயிற்சியின்போதும், அண்டார்டிகா செல்லும்போதும் எதிர்கொண்ட சவால்களை விளக்குகிறார்.

பயணத்திற்காக பிரத்யேக உடை, ஷூ அணிய வேண்டி இருந்தது. ஷூக்கள் பல அடுக்கு பாதுகாப்பு கவசம் போல் அதிக எடை கொண்டிருந்தன. அதனை அணிந்து நடந்து பழகுவதற்கே ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது. கணுக்கால் பகுதியில் மட்டும் சிறிய அசைவை உணர முடியும். மற்ற பகுதிகள் எல்லாம் இறுக்கமாகவே இருக்கும். சில உபகரணங்களையும் கையாள வேண்டி இருந்தது. அவை மன வலிமையை தந்தன. பயணத்தின் போது, உருகும் பனிப்பாறையை கண்களால் காண நேரிட்டது. அது திகில் அனுபவமாக அமைந்தது. கடல் மட்டம் உயர்வதைக் கண்டு மக்கள் பயப்படுவதில் ஆச்சரியமில்லை என்கிறார்.

பெண்களால் முடியாதது எதுவும் இல்லை என்பது தீப் ஜெ கான்ட்ராக்டரின் கருத்தாக இருக்கிறது.

பாலினம், வயது, சமூக நிலை, திருமணம், குழந்தைப் பேறு போன்றவற்றின் அடிப்படையில் பெண்கள் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்வதை நிறுத்துங்கள். அந்த தடைகளை மனதளவில் உடைத்தால் போதும். அவை தானாகவே மறைந்துவிடும் என்றும் சொல்கிறார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்