சொகுசு மாடல் கார்களில் பென்ஸ் தயாரிப்புகள் எப்போதுமே முன்னிலை வகிக்கின்றன. இந்நிறுவனத் தயாரிப்பில் இ-கிளாஸ் மிகவும் பிரபலமானது. இப்போது இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட இ-கிளாஸ் மெர்சிடஸ் பென்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.63.60 லட்சம். இதில் பிரீமியம் மாடலின் விலை சுமார் ரூ.80.90 லட்சம்.
இதில் மூன்று வேரியன்ட்கள் வந்துள்ளன. இ 200 பெட்ரோல், இ 220.டி. டீசல் மற்றும் இ 350.டி. ஏ.எம்.ஜி. ஆகியனவாகும். புதிய பம்பர் மற்றும் ஸ்லீக்கான முகப்பு விளக்கு ஆகியன இதன் சிறப்பு வடிவமைப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களாகும். இதேபோல பின்புற விளக்குகளின் வடிவமைப்பிலும், அலாய் சக்கர வடிவமைப்பிலும் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. 18 அங்குல அலாய் சக்கரம் கம்பீரமான தோற்றத்துக்கு வழிவகுக்கிறது.
இதில் 12.3 அங்குல திரை இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், அழகிய வடிவமைப்பிலான ஸ்டீயரிங் சக்கரத்திலேயே கண்ட்ரோல் சிஸ்டம் இருப்பது கூடுதல் சிறப்பாகும். ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே இணைப்பு வசதி கொண்டது. அலெக்ஸா மற்றும் கூகுள் ஹோம் மற்றும் குரல்வழி கட்டுப்பாடு வசதிகளைக் கொண்டது. பாதுகாப்புக்கென 7 ஏர் பேக்குகள் உள்ளன. வசதியாக சாயும் வகையிலான பின்புற இருக்கைகள் சொகுசான பயணத்துக்கு வழிவகுக்கிறது.
மேலும் இரண்டு வயர்லெஸ் சார்ஜிங் வசதி பயணத்தின்போது ஸ்மார்ட்போனில் பேட்டரி தீர்ந்துபோவதைத் தடுக்க உதவுகிறது. ஏ.பி.எஸ்., இ.பி.டி., பிரேக்ஸ் அசிஸ்ட் வசதி கொண்டது. டி ராக்ஷன் கண்ட்ரோல், இ.எஸ்.பி., ஐ-சோபிக்ஸ், காற்று அளவை உணர்த்தும் வசதி மற்றும் முன்புற-பின்புற பார்க்கிங் சென்சார் வசதி கொண்டிருப்பதோடு 360 டிகிரி சுழலும் கேமராவும் இதில் உள்ளது. இது 197 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தக்கூடிய 2 லிட்டர், நான்கு சிலிண்டர் டர்போ என்ஜினைக் கொண்டது. பிரீமியம் மாடல் 3 லிட்டர் என்ஜினைக் கொண்டது. ஏற்கனவே இதே பிரிவில் ஆடி ஏ 6, ஜாகுவார் எக்ஸ்.எப்., வோல்வோ எஸ் 90 ஆகியவற்றுக்குப் போட்டியாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.