புதுடெல்லி
அக்டோபர் மாதத்தில் ரூ.6,728 கோடிக்கு தாவர எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 23 சதவீதம் உயர்வாகும்.
சமையல் எண்ணெய்
நாட்டின் ஒட்டுமொத்த தாவர எண்ணெய் (சமையல் எண்ணெய் மற்றும் இதர எண்ணெய் வகைகள்) இறக்குமதியில் சமையல் எண்ணெயின் பங்கு 70 சதவீதமாக உள்ளது. இதில் பாமாயிலின் பங்கு அதிகமாக இருக்கிறது.
நம் நாட்டில் நவம்பர் முதல் அக்டோபர் வரையிலான காலம் எண்ணெய் பருவம் ஆகும். கடந்த பருவத்தில் (2017 நவம்பர்-2018 அக்டோபர்) 1.50 கோடி டன் தாவர எண்ணெய் இறக்குமதி ஆனது. 2016-17 பருவத்தில் அது 2.72 சதவீதம் குறைந்து 1.54 கோடி டன்னாக இருந்தது.
கடந்த 2018-19 பருவத்தில் 1.56 கோடி டன் தாவர எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய பருவத்துடன் ஒப்பிடும்போது 3.5 சதவீதம் அதிகமாகும். இதில் சமையல் எண்ணெய் இறக்குமதி (1.45 கோடி டன்னில் இருந்து) 1.49 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
அக்டோபர் மாதத்தில் 95 கோடி டாலருக்கு தாவர எண்ணெய் இறக்குமதி ஆகி இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 74 கோடி டாலராக இருந்தது. ஆக, இறக்குமதி டாலர் மதிப்பில் இறக்குமதி 28 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே காலத்தில் ரூபாய் மதிப்பில் இறக்குமதி 23 சதவீதம் அதிகரித்து ரூ.6,728 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அது ரூ.5,446 கோடியாக இருந்தது.
சுத்திகரித்த பாமாயில்
பாமாயில் பெரும்பாலும் இந்தோனேஷியா, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுத்திகரித்த பாமாயிலுக்கு மத்திய அரசு 5 சதவீத வர்த்தக பாதுகாப்பு வரி விதித்து இருக்கிறது. உள்நாட்டு நிறுவனங்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து சுத்திகரித்த பாமாயில் மீதான ஒட்டுமொத்த இறக்குமதி வரி (45 சதவீதத்தில் இருந்து) 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு