அழகான வீடு என்பது ஒவ்வொருவரின் கனவாக இருக்கிறது. அந்த கனவு பலருக்கும் கைகூடிவிடுகிறது. ஆனால் அந்த அழகான வீட்டிற்குள் பலராலும் ஆரோக்கியமாக வாழ முடிவதில்லை. அதற்கு வீட்டிற்குள்ளே நிலவும் மாசுவும் காரணம். குறிப்பாக படுக்கை அறையில் மாசு இருந்தால் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படும்.
சாலையின் ஓரங்களில் இருக்கும் வீடுகள் தூசுவால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. அடிக்கடி சுத்தம் செய்தாலும் மீண்டும் தூசு சேர்ந்துகொண்டே இருக்கும். ஐந்து மைக்ரோனை விட குறைந்த அளவில் உள்ள தூசுகள் நேரடியாகவே தங்குதடையின்றி உடலின் சுவாச கட்டமைப்புக்குள் சென்றுவிடும். சிலிக்கான் டஸ்ட் போன்றவை சுவாச பகுதிக்குள் சென்றால் அலர்ஜி, ஆஸ்துமா போன்றவைகளை உருவாக்கிவிடும்.
நகரப் பகுதிகளில் வசிப்பவர்கள் தினமும் வீட்டை சுத்தப்படுத்துவது மட்டுமின்றி மாதத்தில் ஒரு நாள் வீட்டின் சுவர், மேல்பாகம், ஜன்னல், கதவுகள் போன்றவைகளை எல்லாம் துடைத்து சுத்தம்செய்ய வேண்டும். திரைச் சீலைகளை துவைத்து நன்றாக வெயிலில் உலரவைக்கவேண்டும். வீடுகளை சுத்தம் செய்யும்போது மாஸ்க் அணிந்துகொள்வது மிக அவசியம்.
படுக்கை விரிப்புகளை வாரத்திற்கு ஒருமுறை மாற்றவேண்டும். ஐந்து வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளின் படுக்கையில் உள்ள விரிப்புகளை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மாற்றுவது அவசியம். காட்டன் பெட்ஷீட்களே சிறந்தது. அதுவும் மெலிதாக இருக்கவேண்டும். மெலிதாக இருந்தால் தூசு அதிகம் படியாது.
படுக்கையிலும் அழுக்கு படிவதுண்டு. நாட்கள் செல்லச்செல்ல படுக்கையில் வியர்வையும், தண்ணீர்த்தன்மையும் படிந்தால் மெத்தைகள் பாதிக்கப்படும். பஞ்சுமெத்தையாக இருந்தால் அதன் இலகுத்தன்மை குறைந்து, கெட்டியாகிவிடும். எப்போது கெட்டியாகி விடுகிறதோ அப்போதே அந்த மெத்தையை மாற்றிவிட்டு புதியது வாங்கிவிடவேண்டும். போம் பெட்டாக இருந்தால் ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்குள் அதனை மாற்றிவிடுவது அவசியம்.
பெட் மீது கவர் பயன்படுத்தினால், பெட்டின் ஆயுள் அதிகரிக்கும். தலையணையில் டவல் விரித்து தலைவைத்தால் தலையில் இருக்கும் வியர்வையும், எண்ணெய்யும் கலந்து அழுக்காக மாறி தலையணையை அசுத்தமாக்குவதை தவிர்க்கலாம்.
லிவிங் ரூம் தினமும் சுத்தப்படுத்தப்பட வேண்டும். படுக்கை அறையை அந்த குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்துவார்கள். ஆனால் வரவேற்பு அறையில் விருந்தினர்களும் வந்து அமர்வார்கள். அதனால் தவறாமல் தினமும் சுத்தம் செய்வது அவசியம். வரவேற்பு அறையில் கெட்டியான திரைச் சீலைகளை பலரும் பயன்படுத்துகிறார்கள். அவை அடர்ந்த நிறத்தில் இருக்கும். அதனால் அழுக்கும், தூசுவும் அதில் படிந்திருப்பதை எளிதாக கண்டறிய முடியாது. ஆகவே அவைகளை அடிக்கடி கவனமாக சுத்தம் செய்யவேண்டும்.
வரவேற்பு அறையில் மெலிதான திரைச் சீலைகளையே பயன்படுத்தவேண்டும். அதுவே துவைத்து சுத்தம் செய்ய எளிதாக இருக்கும். வாக்குவம் கிளீனர் பயன்படுத்தி ஷோபா, இருக்கைகள், கர்ட்டன்கள் போன்றவைகளை சுத்தம்செய்யவேண்டும். ஆரோக்கியமாக வாழ வீட்டின் சுத்தம் மிக அவசியம்.