மும்பை
நடப்பு சந்தை பருவத்தில் (2018 அக்டோபர்-2019 செப்டம்பர்) பருத்தி உற்பத்தி 11 சதவீதம் சரிந்து 3.28 கோடி பொதிகளாக குறையும் என இந்திய பருத்தி சங்கம் மதிப்பீடு செய்துள்ளது.
இரண்டாவது இடம்
சர்வதேச பருத்தி உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. நம் நாட்டில் ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் பருத்தி உற்பத்தியில் முன்னிலையில் உள்ளன.
நம் நாட்டில் பருத்தி சந்தை பருவம் என்பது அக்டோபரில் தொடங்கி செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. அமெரிக்காவில் இப்பருவம் ஆகஸ்டு மாதத்தில் தொடங்கி ஜூலை மாதத்தில் முடிகிறது. இதன்படி அமெரிக்க வேளாண் துறை இந்தியாவின் பருத்தி உற்பத்தி, ஏற்றுமதி குறித்த மதிப்பீடுகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
உள்நாட்டில், நடப்பு பருவத்தில் 3.61 கோடி பொதிகள் பருத்தி உற்பத்தியாகும் (ஒரு பொதி என்பது 170 கிலோ பருத்தியை கொண்டது) என பருத்தி ஆலோசனை வாரியம் கூறி இருந்தது. கடந்த 2017-18 பருவத்தை விட இது சுமார் 2 சதவீதம் குறைவாகும். அப்போது உற்பத்தி 3.65 கோடி பொதிகளாக இருந்தது.
ஆனால் இந்திய பருத்தி சங்கம் பருத்தி உற்பத்தி 11 சதவீதத்திற்கு மேல் சரிவடைந்து 3.28 கோடி பொதிகளாக குறையும் என முன்னறிவிப்பு செய்துள்ளது. பருத்தி அதிகம் விளையும் முக்கிய பகுதிகளில் மழை குறைந்ததே இதற்குக் காரணம் என இந்தச் சங்கம் கூறி இருக்கிறது.
நடப்பு பருவத்தின் தொடக்கத்தில் (2018 அக்டோபர் 1) அன்று நம் நாட்டில் 47 லட்சம் பொதிகள் பருத்தி கையிருப்பு இருந்தது. இந்நிலையில், உற்பத்தி 3.28 கோடி பொதிகளாக குறையும் நிலையில், நடப்பு பருவத்தில் ஒட்டுமொத்த பருத்தி சப்ளை (இருப்பு+உற்பத்தி) 3.75 கோடி பொதிகளாக இருக்கும். கடந்த பருவத்தில் அது 4.30 கோடி பொதிகளாக இருந்தது.
ஏற்றுமதி சந்தைகள்
சீனா, வங்காளதேசம், வியட்நாம், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் நமது முக்கிய பருத்தி ஏற்றுமதி சந்தைகளாக உள்ளன. பருத்தி உற்பத்தி குறைந்தால் அது ஏற்றுமதியையும் பாதிக்கும். மேலும் இறக்குமதி அதிகரிக்கும் அபாயமும் ஏற்படும்.