சிறப்புக் கட்டுரைகள்

மரச்சிற்பக் கலை பயிலும், பள்ளி மாணவி

ஒரு சிலர் படிப்போடு சேர்த்து, தற்காப்பு கலைகள், நுண் கலைகள், நடனம், இசை உள்ளிட்டவற்றையும் பயில்கின்றனர்.

கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களின் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. வகுப்பறைக்குள் பாடங்களை கற்றுக்கொண்டிருந்தவர்கள் தற்போது ஆன்லைன், வாட்ஸ்-அப், கல்வி தொலைக்காட்சிகள் மூலமாக பாடங்களை வீட்டில் இருந்தே படிக்கின்றனர். ஒரு சிலர் படிப்போடு சேர்த்து, தற்காப்பு கலைகள், நுண் கலைகள், நடனம், இசை உள்ளிட்டவற்றையும் பயில்கின்றனர். அந்தவகையில் புதுக்கோட்டையை அடுத்த அடப்பன்வயல்சத்திரத்தை சேர்ந்த மாணவி அஞ்சனா ஸ்ரீ (8-ம் வகுப்பு) தனது தந்தையின் தொழிலோடு இணைந்த சிற்பக் கலையை ஆர்வமாக கற்று, அதில் சிறந்து விளங்குகிறார். அதோடு தந்தையின் கடையில் மரச்சிற்ப வேலைகளிலும் ஈடுபட்டு அசத்துகிறார்.

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக சாலையில் திருவப்பூரில் உள்ள மரக்கடையில் மாணவி அஞ்சனா ஸ்ரீயை பார்க்க சென்ற போது, அங்கு வீட்டின் நிலைக்கதவில் பொருத்தப்படுவதற்கான மரச்சிற்ப வேலையில் உளியை வைத்து சர்வ சாதாரணமாக செதுக்கிக்கொண்டிருந்தார். அவரிடம் சிறுநேர்காணல்.

* இந்த வேலையில் ஆர்வம் வந்தது எப்படி?

எனது தந்தை மர வேலை செய்கிறார். சிறுவயதில் இருந்தே அப்பாவின் கடைக்கு வந்து செல்வது உண்டு. அப்போது அவர் உளியால் மரப்பலகையை செதுக்கி கதவு, ஜன்னல் உருவாக்குவதையும், உருவங்கள் செதுக்குவதையும் ஆர்வமாக பார்ப்பேன். அவ்வப்போது சில மரப்பலகையையும் செதுக்குவேன். அந்தநேரங்களில் பள்ளிக்கூடத்திற்கு சென்று வந்ததால், முழுமையாக கடைக்கு வரமாட்டேன். ஊரடங்கு அறிவித்து பள்ளிகள் மூடப்பட்ட பின் மரச்சிற்ப வேலையில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. இதனால் தந்தையின் உதவியோடு, மரச்சிற்ப கலையை கற்றுக்கொண்டேன்.

* உங்களால் பலகையில் எந்த மாதிரி டிசைன் செதுக்க முடியும்?

நான் மரப்பலகையில் செதுக்க இருக்கும் உருவங்களை, டிசைன்களை முதலில் வரைந்து பழகுவேன். அதன்பிறகுதான் அந்த பலகையில் செதுக்குவேன். பூ, மயில், கதவிற்கான டிசைன்கள் செதுக்குவேன். நான் தனியாகவே டிசைன்களை வரைந்து செதுக்கி கொள்ளும் வகையில் திறமையை வளர்த்துக்கொண்டேன். இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியது உள்ளது. நான் டி.வி. பார்க்க மாட்டேன். ஸ்மார்ட் போனில் யூ-டியூப்பில் மர சிற்ப டிசைன் தொடர்பாக பார்ப்பது உண்டு. அதில் உள்ள டிசைன்களை பார்த்து அறிவேன்.

* எதிர்காலத்தில், இதையே தொழிலாக மேற்கொள்ளும் திட்டம் உண்டா?

இப்போது விளையாட்டுத்தனமாக, சிற்பம் செதுக்கி வருகிறேன். சிற்ப சாஸ்திரத்திற்கு என பிரத்யேக படிப்பு உள்ளது. பிளஸ்-2 முடித்த பின் அதனை படிக்கலாம் என்றிருக்கிறேன். அதனை படித்து கற்றுக்கொண்டு இந்த தொழிலில் மேலும் நவீன யுக்திகளுடன், களமிறங்கி தனியொரு பெண்ணாக சாதனை படைக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது.

* சிற்பக்கலையில் ஆர்வம் காட்டுவதால், பள்ளி படிப்பு பாதிக்கிறதா?

நான் திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறேன். ஆன்லைன் வகுப்பில் தவறாமல் கலந்து கொள்கிறேன். மதியம் 1 மணிக்கு மேல் தான் வகுப்பு நடைபெறும். மாலையில் தான் சிற்ப வேலையில் ஈடுபடுவேன். இரவு 8 மணி வரை தந்தையுடன் கடையில் இருந்து பணியாற்றுவேன்.

* அப்படியானால் காலையில் என்ன செய்கிறீர்கள்?

நான் தற்காப்பு கலையான சிலம்பம், கராத்தே கற்றுக்கொள்கிறேன். அதன்பின் பரதநாட்டிய வகுப்பிற்கும் செல்கிறேன். எனக்கு சிறுவயதில் இருந்தே கலைகள் மீதும் அதீத விருப்பம் உண்டு. அதனால் சிலம்பம், கராத்தே, பரத கலைகளையும், சிற்பக் கலையோடு தொடர்ந்து கற்று வருகிறேன். சிலம்பம், கராத்தே போட்டிகளில் பரிசும் வென்றுள்ளேன். பரதநாட்டியத்திலும் பல சான்றிதழ்களை பெற்றுள்ளேன்.

இவர் மட்டுமல்ல இவருடைய தங்கைகளான தேஜா ஸ்ரீ (7-ம் வகுப்பு), ஜெய்சாய் ஸ்ரீ (3-ம் வகுப்பு) ஆகியோரும் சிற்ப வேலைகளை கற்றுக் கொள்ள தொடங்கி உள்ளனர். அக்காவுடன் சேர்ந்து அவருக்கு உதவியாக பொருட்களை எடுத்து கொடுத்து வருகிறார்கள். மேலும் தந்தை மற்றும் அக்கா செய்யும் சிற்ப டிசைன்களை ஆர்வமாக பார்க்கின்றனர். இந்த ஆர்வத்தை காணும்போது தந்தை முத்துக்குமார் பூரிப்படைகிறார்.