மும்பை,
70-வது பிரபஞ்ச அழகி போட்டி இஸ்ரேல் நாட்டின் ஏய்லாட் நகரில் நடைபெற்றது.மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார் 80 நாடுகளை சேர்ந்த அழகிகள் போட்டியிட்டனர். அழகு, அறிவு, உடல்வாகு, சமூகப்பார்வை போன்ற பிரிவுகளில் இந்த போட்டி நடைபெற்றது.
இந்த போட்டிக்காக போர்ச்சுக்கல் நாட்டிலிருந்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட யூனிவர்ஸ் அரங்கத்தில் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. 5000 பார்வையாளர்கள் அமர்ந்து கண்டு மகிழும் அளவுக்கு இந்த அரங்கம் அமைக்கப்பட்டது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஹர்னாஸ் கவுர் சந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.
சுஷ்மிதா சென் மற்றும் லாரா தத்தா ஆகியோருக்கு பின் பிரபஞ்ச அழகி பட்டத்தை வெல்லும் இந்தியப் பெண் ஆனார் ஹர்னாஸ் கவுர் சந்து. கடந்த ஆண்டு பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மெக்சிகோவைச் சேர்ந்த ஆண்ட்ரியா மெசா அவருக்கு முடிசூட்டினார். பராகுவேயின் நாடியா ஃபெரேரா 2ம் இடமும், தென்னாப்பிரிக்காவின் லலேலா மஸ்வானே 3ம் இடமும் பிடித்தனர்.
அவருக்கு இறுதிப்போட்டியில் கடும் போட்டியாளர்களாக கருதப்பட்ட உலக அழகிகள் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1.மிஸ் பஹ்ரைன்: மனார் நதீம் டெயானி
2.மிஸ் மொராக்கோ: கவுதர் பென்ஹலிமா
3.மிஸ் பிலிப்பைன்ஸ்: பீட்ரைஸ் லூய்கி கோம்ஸ்
4.மிஸ் மெக்சிகோ: டெபோரா ஹலால்
5.மிஸ் சிங்கப்பூர்: நந்திதா பன்னா
6.மிஸ் வெனிசுலா: லூயிசெத் மேட்டரன்
7.மிஸ் யுஎஸ்ஏ: எல்லே ஸ்மித்
இனி இந்தியாவின் முன்னாள் மிஸ் யூனிவர்ஸ் பற்றி காணலாம்,
சுஷ்மிதா சென்-அவர் 19 நவம்பர் 1975 இல் பிறந்தார். அவர் ஒரு இந்திய நடிகை, மாடல் மற்றும் மிஸ் யுனிவர்ஸ்-1994 போட்டியில் அழகிப்பட்டம் வென்றவர். அவர் 18 வயதில் பெமினா மிஸ் இந்தியா-1994 இல் பட்டம் வென்றவர். அவர் 2017ம் ஆண்டு 65-வது பிரபஞ்ச அழகி போட்டியின் நடுவராக கலந்துகொண்டு சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லாரா தத்தா-அவர் 16 ஏப்ரல் 1978 இல் பிறந்தார். அவர் ஒரு இந்திய நடிகை, தொழிலதிபர் மற்றும் மிஸ் யுனிவர்ஸ்-2000 போட்டியில் அழகிப்பட்டம் வென்றவர். அவர் 1997 இல் மிஸ் இன்டர்காண்டினென்டல் ஆக முடிசூட்டப்பட்டார். அழகுப் போட்டி வரலாற்றில் அதிக மதிப்பெண்கள் பெற்று வரலாற்று சாதனை படைத்தவர்.