சிறப்புக் கட்டுரைகள்

விண்வெளி ஆராய்ச்சிக்கும், அன்றாட வாழ்வுக்கும் தொடர்பு உண்டா? விளக்கிச் சொல்கிறது நாசா இணையதளம்

“செவ்வாய்க்கு ராக்கெட் விடுறீங்களே, படியில் தொங்கும் இந்த பசங்களுக்கு இன்னொரு பஸ்விட கூடாதா?” என்பது போன்ற இணையதள மீம்ஸ்களை பார்த்திருப்பீர்கள்.

தினத்தந்தி

கோடிக் கணக்கில் செலவு செய்யப்பட்டு நடத்தப்படும் விண்வெளி ஆய்வுகளால் அன்றாட வாழ்வுக்கு என்ன பயன்? அதற்குப் பதிலாக அடிப்படை வசதிகளை மேம்படுத்தலாமே? என்று சுட்டிக் காட்டும் விதமாக இத்தகைய மீம்ஸ்கள் வலம் வருகின்றன.

நிஜத்திலும் விண்வெளி ஆராய்ச்சிக்கும், அன்றாட வாழ்வுக்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்வி நம்மில் பலருக்கும் எழலாம்? ஆனாலும் கடந்த 60 ஆண்டு காலமாக பல லட்சம் கோடி பணம் விண்வெளி ஆய்வுக்காக செலவிடப்பட்டு விண்வெளி ஆய்வுகள் நடந்து வருகிறது. அதுவும் கடந்த 20 ஆண்டுகளில் விண்வெளி ஆய்வுகள் தீவிரம் அடைந்துள்ளன. நிலவுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் மனிதர்களை அழைத்துச் செல்லும் முயற்சிகள் படுஜோராக நடந்து வருகின்றன. தனியார் ஆய்வு அமைப்புகள்கூட இதில் போட்டியிடத் தொடங்கி இருக்கின்றன.

அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் இதுபோன்ற விண்வெளி ஆராய்ச்சியில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. இந்த நாடுகள் ஒவ்வொரு விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்திற்கும் பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கி ஆய்வு மேற்கொள்கிறது. இந்தியா கடந்த 2016-2017-ம் ஆண்டில் மட்டும் 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு மேல் விண்வெளி ஆய்வுக்கு செலவிட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு வருவாயில் 0.38 சதவீதமாகும். நாசா ஆய்வு மையம் இதே காலத்தில் தங்கள் விண்வெளி ஆய்வுக்கு 0.48 சதவீத வருவாயை பயன்படுத்தி உள்ளது.

இவ்வளவு கோடிக்கணக்கில் செலவிட்டு, எளிதில் சென்று திரும்ப முடியாத, எதையும் கைப்பற்றி கொண்டு வர முடியாத தூரத்தில் இருக்கும் மற்ற கிரகங்களை ஆய்வு செய்வது எதற்காக? அதனால் அன்றாட வாழ்க்கைக்கு ஏதாவது பயன் உண்டா? வெறும் புகழ், போட்டிக்காக மட்டும் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறதா? என்ற சந்தேகம் மக்களுக்கு எழலாம்.

இதுபோன்ற வினாக்களுக்கு விடையளிக்கும் விதமாகவும், விண்வெளி ஆராய்ச்சியை எளிமையாக விளங்கிக் கொள்ளவும், அது அன்றாட வாழ்வுடன் தொடர்புடையதா? அந்த ஆய்வுகள் அன்றாட வாழ்வுக்கு எப்படி பயன்படுகிறது? என்பதை விளக்குவதற்காக நாசா ஆராய்ச்சி மையம் புதிய இணையதள பக்கம் ஒன்றை உருவாக்கி உள்ளது. அந்த இணையதளம் www.homeandcity.nasa.gov என்பதாகும்.

வழக்கமான நாசா இணையதளத்தின் கூடுதல் பக்கமாகவும் இதை இணைத்துள்ளனர். www.nasa.gov/homeandcity என்ற லிங்க் மூலமாகவும் இந்த பக்கத்தை பார்க்கலாம். இதில் நாசா மேற்கொள்ளும் 130 விதமான தொழில்நுட்ப ஆய்வுகள் பற்றி அறிந்து கொள்ள முடியும். ஆய்வகங்களின் பல பகுதிகளை இணைய சுற்றுலாவாக அறிய முடியும்.

காற்றாலை மூலமாக விண்வெளி விஞ்ஞானிகளுக்கான தண்ணீர் சுத்திகரித்து வழங்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் அன்றாட வாழ்வுக்கு அத்தியாவசியமானது. விண்வெளி ஆய்வுக்காக தயாரிக்கப்பட்ட விண்வெளி உடைக்கான நார் இழைகள்தான், இன்று விளையாட்டு மைதான பாதுகாப்பு விரிப்பாக பயன்படுகிறது. மேலும் அரங்க விரிப்புகள், அலங்கார விரிப்புகளாகவும் இந்த நார் இழைகள் பயன்படுகின்றன. நீர் ஒட்டா தன்மைக்காக பல்வேறு இடங்களில் இது பயன்படுத்தப்படுகிறது.

அதேபோல வளிமண்டலத்தை கடந்த சூழலில் காணப்படும் அணுசக்தி ஆக்சிஜன்தான், கிருமிகளைக் கொல்லும் சிறந்த கிருமிநாசினியாக விளங்குகிறது. இதை சிலிண்டர்களில் அடைத்து ஆம்புலன்ஸ்களிலும், மருத்துவ மனைகள், ஆய்வரங்குகள், சுகாதார சீர்கேடான இடங்களிலும் கிருமிகளை அழிக்கப் பயன்படுத்துகிறார்கள். இப்படி பல்வேறு விதங்களில் விண்வெளி ஆய்வுகளும், அன்றாட வாழ்வும் சம்பந்தப்பட்டிருப்பதை விளக்குகிறது இந்த நாசா இணைய பக்கம். மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பயனுள்ள பக்கமாக திகழ்கிறது இந்த இணைய பக்கம்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்