தாடிகூட உங்களுக்கு அழகாகத்தான் இருக்கிறது என்று சொல்லும் காலகட்டம் வந்திருக்கிறது. அதனால் தாடி திடீரென்று சூப்பர் ஸ்டாராகி வேகமாக வளர்ந்து ஆண்களின் முகத்திற்கு அழகு சேர்த்துக் கொண்டிருக்கிறது.
சிறுவர்களாக இருந்து டீன்ஏஜ் என்ற படியை ஏறுவதற்கு ஆண்கள் தயாராகும்போது உதட்டுக்கு மேலே ரோமம் வளர்ந்து, நானும் ஆம்பிளைதாண்டா என்பதுபோல் ஆசை காட்டத் தொடங்குகிறது. அந்த முதல் முடிகள் தரும் மகிழ்ச்சி அளவிடமுடியாதது. சில நேரங்களில் விமர்சனத்தையும் அது பெற்றுத்தரும். அம்மாவிடமோ, அக்காளிடமோ குரலை உயர்த்தி பேசும்போது, மீசை முளைத்த தைரியத்தில் எப்படி கூச்சல் போடுறான் பாரு என்று சொல்வார்கள். ஆனால் இந்த மீசையும், அதோடு வளரும் தாடியும் எல்லா ஆண்களுக்கும் ஒரே மாதிரி ஒரே வயதில் முளைப்பதில்லை. அவரவர் பாரம்பரியம் மற்றும் உடல் தகுதியை பொறுத்து அது அமைகிறது.
ஆண்களின் முடி வளர்ச்சிக்கு காரணமாக இருப்பது, ஆண்ட்ரோஜன் எனப்படும் செக்ஸ் ஹார்மோன். தாடி வளரவும், உடலின் இதர பகுதிகளில் முடி வளரவும் இந்த ஹார்மோன்தான் அடிப்படை. 12, 13 வயதில் ஆண்களின் விரைப்பையில் உயிரணு உற்பத்திக்கு தேவையான மாற்றங்கள் உருவாகத் தொடங்குகின்றன. அப்போதுதான் ஆண்ட்ரோஜன் தனது உற்பத்தியை தொடங்குகிறது. அதற்கு தக்கபடி தாடியும் இதர இடங்களில் முடியும் வளருகிறது. ஆனாலும் தாடி, மீசையின் அழகுக்கு இந்த ஹார்மோன் மட்டும் காரணமில்லை. தந்தையின் பாரம்பரியமும் அதில் சேரவேண்டும். தாய், தந்தையின் ஹெரிடிட்டி பேட்டன் இருந்தால் மட்டுமே தாடியும் தனித்துவம் பெறும்.
ஆனால் என் தந்தைக்கு தடிமனான தாடி இருந்தது, தனக்கு அப்படி இல்லையே என்று கேட்கலாம். அதற்கு காரணம் அவரது தாயாராக இருக்கலாம். தாயாரின் குடும்பத்தில் தாடி இல்லாதவர்களாக இருந்திருக்கலாம். அதன் தாக்கம் மகனுக்கு ஏற்படும். சில வீடுகளில் இரண்டு மகன்கள் இருப்பார்கள். மூத்தவனுக்கு நிறைய தாடி வளர்ந் திருக்கும். இளைஞனான பின்பும் தாடியே வளராத இளையமகன், தனக்கு தாடி வளராத ஏக்கத்தில் அண்ணனை பார்த்து பொறாமை கொள்ளலாம். இந்த நிலைக்கும் அவர்களது பெற்றோர்தான் காரணம். தாடியுள்ள தந்தை வழி பாரம்பரியத்தை மூத்த மகனும், தாடியில்லாத தாய் வழி பாரம்பரியத்தை இளைய மகனும் பெற்றிருக்கலாம்.
பாரம்பரியத்தோடு அவரது ஹார்மோன் சுரப்பும் நன்றாக ஒத்துழைத்தால் அவர்கள் முகத்தில் தாடி செழித்து வளரும். இருபது வயதாகியும் தாடி வளராவிட்டால் அவர்கள் ஹார்மோன் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும். ஆண்ட்ரோஜன் சுரப்பு குறைவாக இருந்தால், அதனை மேம்படுத்த மருந்துகள் உள்ளன. அதற்கு ஏற்ற உணவு களையும் சாப்பிடவேண்டும். இரண்டும் வேலை செய்யத்தொடங்கினால் தாடி நன்றாக வளரத் தொடங்கிவிடும். தாடி வளராமல் போவதற்கு பாரம்பரியம்தான் காரணம் என்றால், அதனை சீர்செய்ய எந்த வழியும் இல்லை.
தாடியும், மீசையும் ஆண்மையின் அடையாளம் என்றும், அவை இரண்டும் இல்லாதவர்கள் ஆண்மைத்தன்மையற்றவர்கள் என்ற கருத்தும் நிலவி வருகிறது. அது தவறான கருத்து. அதுபோல் முகத்தில் உள்ள குறைபாட்டை மறைக்கத்தான் பலரும் தாடி வைத்திருக்கிறார்கள் என்ற கருத்தும் தவறானது. தங்களுக்கு தாடி வளரவில்லை என்ற தாழ்வு மனப்பான்மையோடு, இன்டர்நெட்டில் மேய்ந்து பல்வேறுவிதமான தவறான தகவல்களையும் சேர்த்து படித்துவிட்டு, பாலியல் மருத்துவரிடம் ஆண்மை குறைபாட்டுக்கான சிகிச்சைக்கு சென்றவர்களும் உண்டு. உண்மையில் தாடிக்கும்-ஆண்மைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அடர்த்தியான தாடி இருப்பவர்களிடம்கூட ஆண்மைக்குறைபாடு காணப்படலாம். தாடியே இல்லாதவர்கள்கூட ஆண்மை பலம் அதிகம் கொண்டவர்களாகவும் இருக்கலாம்.
- தாடி அடுத்த வாரமும் நீளும்.