கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்மணியான துளசி கவுடா தன் கையால் சுமார் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்துச் சுற்றுச்சூழல் சாதனை புரிந்தவர் ஆவார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த துளசி கவுடா, தன் கையால் சுமார் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்துச் சுற்றுச்சூழல் சாதனை புரிந்தவர். படிப்பின் வாசம் இல்லாத பழங்குடியினப் பெண்மணியான துளசி கவுடா, மரங்களின் மீது மிகுந்த நேசம் கொண்டிருந்தார். அவற்றின் அருமையைப் புரிந்திருந்தார். கடந்த 2024-ம் ஆண்டு மறைந்துவிட்ட இவர், தான் நட்டு வளர்த்த மரங்களால் பூமியில் நிலைத்துவிட்டார். துளசி கவுடாவைப் பற்றிய 'நறுக்... சுருக்...' தகவல்கள்...
துளசி கவுடா மறைந்தபோது வயது- 86.
சொந்த ஊர்- உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள ஹொன்னள்ளி கிராமத்தில் ஹலக்கி பழங்குடியினத்தில் பிறந்தார்.
சிறப்புப் பட்டம்- 'காட்டின் கலைக்களஞ்சியம்'.
துளசி கவுடா 2 வயது குழந்தையாக இருந்தபோது அவரது தந்தை இறந்துவிட்டார். உள்ளூர் நாற்றுப் பண்ணை ஒன்றில், தாயுடன் தினக்கூலித் தொழிலாளியாக சிறுவயதிலேயே வேலை பார்க்கத் தொடங்கினார். பள்ளிக்கூடம் பக்கம் போனதேயில்லை.
தனியார் நாற்றுப் பண்ணையைத் தொடர்ந்து, கர்நாடக மாநில வனத்துறைப் பண்ணையில், தாயுடன் துளசி கவுடா வேலை பார்க்கத் தொடங்கினார். அங்கு அவர் தினக்கூலித் தொழிலாளியாகப் பணிபுரிந்தது 35 ஆண்டுகள்! அதன் பிறகுதான், துளசி கவுடாவின் பணியை அங்கீகரிக்கும் விதமாக வனத்துறையில் நிரந்தர ஊழியர் ஆக்கினர்.
பணி நிரந்தரம் செய்யப்பட்ட பின் மேலும் 15 ஆண்டுகள் வேலை பார்த்த துளசி கவுடா, தனது 70 வயதில்தான் ஓய்வு பெற்றார். மொத்தமாக இவர் கர்நாடக மாநில வனத்துறையில் 60 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
தனது ஆயுளில், கணக்கற்ற மரக்கன்றுகளை உருவாக்கிய துளசி கவுடா, தனது கையாலே சுமார் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்திருப்பதாகக் கூறப்படுகிறது. கர்நாடக மாநில வனத்துறையின் பல காடு வளர்ப்புத் திட்டங்களில் இவர் இணைந்து பணியாற்றி இருக்கிறார்.
காட்டு மரங்கள், தாவரங்கள், அங்கு நிலத்தின் தன்மை குறித்த அறிவால், 'காட்டின் கலைக்களஞ்சியம்' என்றும் 'வன தேவதை' என்றும் துளசி கவுடா அழைக்கப்பட்டார். கவுடாவே, தன்னால் வனத்தின் மொழியைப் பேச முடியும் என்று கூறியிருக்கிறார்.
துளசி கவுடா, வனத்துறை பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்பும், நிஜத்தில் ஓய்ந்து விடவில்லை. தனது கிராம குழந்தைகளுக்கு, காடு பாதுகாப்பு, மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து போதித்து வந்தார்.
துளசி கவுடாவின் அளப்பரிய பணியை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு விருதுகள் வந்தன. 1986-ம் ஆண்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் சார்பில் 'இந்திரா பிரியதர்ஷினி விருக்ஷமித்ரா விருது' இவருக்கு வழங்கப்பட்டது.
1999-ல் கர்நாடக அரசின் 2-வது உயரிய விருதான 'கர்நாடக ராஜ்யோத் சவா விருது' இவருக்கு அளிக்கப்பட்டது. 2020-ம் ஆண்டு, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.
முதுமை காரணமாக 2024-ல் துளசி கவுடா மறைந்துவிட்டாலும் நிழல் தரும், பழம் தரும், தென்றலால் தாலாட்டும் எண்ணற்ற மரங்களால் நிரந்தரமாக மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.