சிறப்புக் கட்டுரைகள்

அழியும் பாரம்பரிய கலைகளை பாதுகாக்க... இளைஞர்கள் வழிநடத்தும் ‘கலை-கல்விக்கூடம்’..!

தமிழர்களின் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றிய நாட்டுப்புற கலைகளில் பல இன்று இருந்த இடம் தெரியாமல் அழிந்து வருகின்றன. ஆட்டம்போட்ட கலைகள் எல்லாம் இன்று ஆட்டம் காண்கின்றன.

சினிமா மோகமும், வலைத்தள தாக்கமும் இதற்கான காரணமாக அமைந்தாலும், அதனை மீட்டெடுப்பது நம் கடமையாகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் கப்பூர் கிராமத்தை சேர்ந்த சில இளைஞர்கள் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வியோடு சேர்த்து கலை பயிற்சிகளையும் இலவசமாக வழங்கி வருகிறார்கள்.

பறை இசை, பரதம், கரகம், ஒயிலாட்டம், மயிலாட்டம், மான்கொம்பு ஆட்டம், கும்மியாட்டம், தற்காப்பு கலைகள் உள்ளிட்ட பல்வேறு கலைகளை அடுத்த தலைமுறையினரிடம் கடத்துகிறார்கள்.

கொரோனா நோய் தொற்றால் கல்விக்கூடங்கள் மூடப்பட்ட நிலையில் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க, 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச கல்வி பயிற்சிகளை வழங்கினோம். ஆரம்பத்தில் ஆரவாரமில்லாமல் இருந்த பயிற்சி கூடம், பின்பு மாணவர்களால் நிரம்பி வழியத்தொடங்கியது. அறிவியல், கணிதம், ஆங்கிலம், வரலாறு... என ஒவ்வொரு பாடத்திற்கும், அத்துறையில் பட்டம் பெற்ற பட்டதாரி இளைஞர்களை கொண்டு, கல்வி வகுப்புகளை நடத்தி வருகிறோம். இது கல்வி அறிவை போதிக்கின்ற கல்விக்கூடமாகவும், தமிழக பாரம்பரிய கலைகளை கற்றுக்கொடுக்கும் கலைக்கூடமாகவும் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டோம். அதனால் பறை இசை, பரதம், கரகாட்டம், ஒயிலாட்டம், தற்காப்பு கலைகள் என பல்வேறு கலைகளையும் இலவசமாக கற்றுக்கொடுக்கிறோம் என்ற முன்கதையை விளக்கும், அன்பரசன் தன் நண்பர்களோடு இணைந்து, இந்த கலை-கல்வி திட்டத்தை முன்னெடுத்திருக்கிறார். 15 நண்பர்களோடு, கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறார்.

கலை-கல்வி கூடத்தில், திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை கல்வியும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை பாரம்பரிய கலைகளும் பயிற்றுவிக்கப்படுகிறது. இதில் பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.

அழிந்து வரும் பாரம்பரிய கலையை வளர்ப்பதில் தற்போது பள்ளி மாணவர்களிடையே அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. வெறும் புத்தக படிப்பு மட்டுமல்லாமல் மாணவ- மாணவிகளின் கலை திறமைகளையும் வெளிக்கொணரும் முயற்சியாக இது அமைந்திருக்கிறது என்றவர், கலை-கல்வியோடு, அரசு வேலைக்கான தேர்வு பயிற்சிகளையும், நண்பர்கள் துணையோடு வழங்குகிறார்.

கப்பூர் பயிற்சிக்கூடத்தில் பயிற்சி பெறும் மாணவ- மாணவிகள் நெகிழ்ச்சியுடன் கூறுகையில், தமிழர்களின் பாரம்பரிய கலைகள் பற்றி புத்தகத்தில்தான் படித்திருக்கிறோம். அதை இப்போது கற்றுக்கொள்ளும்போது, எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இதை முழுமையாக கற்று, பாரம்பரிய கலைகளை பாதுகாக்க ஆர்வமாய் இருக்கிறோம். அதேபோல, இந்த அண்ணாக்கள் வழங்கும் கல்வி பயிற்சியும் எங்களை மேம்படுத்திக் கொள்ள உதவுகிறது. பள்ளிப்படிப்போடு, இவர்கள் அரசு வேலைகளுக்கான பயிற்சி வகுப்புகளையும் முன்னெடுத்திருக்கிறார்கள். அவை இலவசமாகவும், தெளிவாகவும், மிகுந்த அக்கறையுடனும் வழங்கப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

எங்கள் கிராமத்தில் இருந்து பல போலீசார் உருவாகி இருக்கிறார்கள். விளையாட்டில் நிறைய நபர்கள் சாதித்திருக்கிறார்கள். பதக்கம் வென்றிருக்கிறார்கள். அவர்களை போல நாங்களும் மாறவேண்டும். இவர்களது புத்தாக்க முயற்சியை முழுமையாக பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் அமர்ந்து இளம் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்ப்போம் என்றனர்.

கலை மற்றும் கலாசாரம் என்பது ஒரு சமூகத்தின் அடையாளம். இதை பேணிக்காப்பது ஒவ்வொருவரின் கடமை. நம் முன்னோரின் நம்பிக்கைகள், அவர்களின் பழக்க வழக்கங்கள், கடைப்பிடித்த சம்பிரதாயங்கள் மற்றும் அவற்றை சுற்றியிருந்த கதைகள் என்று பல தகவல்களை இந்த நாட்டுப்புற கலைகள் மூலம் அறிய முடிகிறது. இக்கலைகளே சமுதாயத்தின் ஆவணமாகவும் திகழ்கிறது. என்னதான் நாம் காலங்களை கடந்து தொழில்நுட்ப வளர்ச்சிகளை பெற்றிருந்தாலும் நம் சமூகத்தின் வேர் என்ன என்பதை மறந்து விடக்கூடாது என்ற கருத்தோடு விடைபெறும் அன்பரசன், இதுவரை 11 போலீசார்களை இந்த பயிற்சிக்கூடம் மூலம் உருவாக்கியுள்ளதாகவும், தற்போது 18 பேர் எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்று உடற்தகுதி தேர்வுக்கு தயாராகி வருவதாகவும் பெருமையோடு கூறினார்.