ஜெஸீலா-அபிலாஷ் 
சிறப்புக் கட்டுரைகள்

காதலில் கசிந்துருகி.. (தன்னம்பிக்கை தரும் ஒரு காதல் கதை)

எத்தனை துயரங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் போராடினால், அத்தனையில் இருந்தும் மீள முடியும் என்பதற்கு ஜஸீலா ஒரு முன்னுதாரணம்!

தினத்தந்தி

`திருடன்.. திருடன்..' என்ற அலறல் சத்தம் ஜீப்பில் சென்றுகொண்டிருந்த பெண் போலீசாரின் காதுகளில் விழுந்தது. ஜீப்பை ஓட்டிக்கொண்டிருந்த கே.டி.ஜஸீலாவும், உடனிருந்த பெண் போலீசும் சத்தம் வந்த திசையை நோக்கி துள்ளிக்குதித்து ஓடினார்கள். பணத்தை திருடிய திருடன் முன்னால் ஓட, அவர்கள் பின்னால் துரத்த.. இறுதியில் திருடனை ஜஸீலா கொத்தாக பிடித்து இழுத்து கீழே தள்ளி அமுக்கிவிட்டார். பின்பு அவனை ஜீப்பில் ஏற்றி போலீஸ் நிலையம் கொண்டு சென்றார்கள். திருடனை பரிசோதித்தபோது திருடிய பணம் எதுவும் அவனிடம் இல்லை. ஜீப்பில் அவன் இருந்த இடத்தை ஜஸீலா பரிசோதித்தபோது, இருக்கையில் லேசாக கிழிக்கப்பட்டிருந்ததை பார்த்தார். திருடிய பணத்தை அவன் அதன் உள்ளே திணித்துவைத்திருந்ததை கண்டுபிடித்து கைப்பற்றினார்கள்.

இப்படிப்பட்ட வீரமிக்கவரான பெண் போலீஸ் ஜஸீலா வாழ்க்கையில் காதல்.. ரகசிய திருமணம் போன்ற ருசிகரமாக பக்கமும், அவர் விபத்தில் சிக்கி மரணத்தோடு போராடிய கண்ணீர் பக்கமும் உண்டு.

"நான் பள்ளியிலும், கல்லூரியிலும் ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்தேன் என்பது அந்த திருடனுக்கு தெரியாதல்லவா. பெண் போலீஸ்தானே எப்படியாவது தப்பி ஓடிவிடலாம் என்று அவன் நினைத்திருப்பான்" என்று சிரித்துக்கொண்டே அந்த நாட்களை நினைவுகூர்கிறார், ஜஸீலா.

கேரளாவில் வயநாடு பகுதியை சேர்ந்த இந்த பெண் போலீசை பாராட்டி டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா, சிறந்த சேவைக்கான பதக்கத்தை வழங்கியுள்ளார். இவர் வலது கையில் வாக்கிங் ஸ்டிக் துணையுடனும், இடது கையில் கணவர் அபிலாஷின் துணையுடனும் பதக்கத்தை பெற்றார். திருடனை பிடித்ததற்கும்- அதற்கான பதக்கத்தை பெற்றதற்குமான இடைப்பட்ட காலத்தில் இவரது

வாழ்க்கையை புரட்டிப்போட்ட பல சம்பவங்கள் நடந்துவிட்டன.

"போலீஸ் சீருடை மீது ஏற்பட்ட ஈர்ப்பால், போலீஸ் துறையில் இணைய வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பை தொடர்ந்துகொண்டிருந்த போதே நான் போலீஸ் பணிக்கு தேர்வானேன். அப்போது திருச்சூர் போலீஸ் மையத்தில் பயிற்சி பெற்றவர்களில் நான்தான் வயது குறைந்த பெண். பணியில் சக போலீஸ்காரராக கே.பி.அபிலாஷ் அறிமுகமானார். நண்பர்களாகி காதலர்களானோம். உருக்கமாக காதலித்தோம். அப்போதுதான் போலீஸ் அதிகாரி ஒருவர் `நீங்கள் பரஸ்பரம் விரும்பினால் திருமணம் செய்துகொண்டு ஒன்றாக வாழுங்கள்' என்றார். நாங்கள் இருவரும் வெவ்வேறு மதங்களை சார்ந்தவர்கள் என்பதால் எங்கள் திருமணத்திற்கு குடும்பத்தினர் சம்மதம் கிடைப்பது கடினம். அதனால் பதிவு திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தோம்.

பின்பு சூழ்நிலை சரியானதும் பெற்றோரிடம் கூறி சம்மதத்தை பெறலாம் என்று நினைத்தோம். பதிவு திருமணம் செய்துகொண்டு நான் வயநாடு போலீஸ் நிலையத்திற்கும், அபிலாஷ் கண்ணூர் போலீஸ் நிலையத்திற்கும் பணிக்கு சென்றுவிட்டோம்.." என்கிறார் ஜஸீலா. தேனிலவு காலத்தில் ஆளுக்கொரு ஊரில் வேலைபார்த்த இவர்கள் இருவருக்கும், ஒருவரை ஒருவர் சந்திக்கும் ஆசை ஏற்பட்டிருக்கிறது. ஜஸீலா கணவரைத் தேடி கண்ணூர் சென்றிருக்கிறார். இருவரும் சந்தித்து வெகுநேரம் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். பின்பு இவர் பஸ்சில் ஏறி தனது வீட்டை நோக்கி பயணப்பட்டிருக்கிறார்.

"பஸ் வீட்டின் அருகாமையில் வந்துகொண்டிருந்தபோது, எனக்கு தெரிந்த பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் நின்று கொண்டு பயணிப்பதை பார்த்தேன். நான் எழுந்து அந்த பெண்ணுக்கு இடம் கொடுத்தேன். `அம்மா ஏன் அந்த ஆன்டியை பார்த்து சிரிக்கிறீர்கள்?' என்று அந்த குழந்தை தாயை பார்த்து கேட்டதும், அதற்கு அவர் `அவர் எனக்கு தெரிந்த போலீஸ் ஆன்டி' என்று பதில்

சொன்னதும்தான் இறுதியாக என் காதுகளில் விழுந்த வார்த்தைகள். அதன் பின்பு நடந்தது எதுவும் நினைவில் இல்லை. மூன்று நாட்கள் கழித்தே எனக்கு நினைவு திரும்பியிருக்கிறது.

நான் பயணித்த அரசு பஸ் மீது தனியார் பஸ் ஒன்று கடுமையாக மோதியிருக்கிறது. நான் தலையில் அடிபட்டு விழுந்திருக்கிறேன். என் இரு கால்களும் முறிந்திருக்கின்றன. உடலின் சில பகுதிகள் சிதைந்திருக்கிறது.." என்று கண்ணீரை வரவழைக்கும் அந்த நாட்களை நினைவுகூர்கிறார், ஜஸீலா.

"அந்த நாட்கள் என் வாழ்க்கையில் மிக மோசமானவை. என் உடலில் ஏகப்பட்ட ஆபரேஷன்கள் நடந்தன. எங்கள் திருமணத்தை பற்றி தெரிந்தவர்களும் நான் இறந்துபோய்விடுவேன் என்று நினைத்து திருமணம் நடந்ததை வெளியே சொல்லாமல் தவிர்த்துவிட்டனர். எனது குடும்பத்தினர்தான் மருத்துவமனையில் என்னுடன் இருந்து கவனித்துக்கொண்டார்கள். ஆறு மாதங்கள் கடந்த நிலையில் என்னை பார்க்க வந்த போலீஸ் அதிகாரி ஒருவர், மேல்சிகிச்சைக்காக கோழிக்கோடு செல்லுங்கள். இல்லாவிட்டால் உடல்நிலை தேறுவது கடினம் என்றார். உடனே என்னை அங்கு கொண்டு சென்றனர். அங்குள்ள மருத்துவமனையில் எனது கால்களில் மட்டும் ஒன்பது மணி நேரம் ஆபரேஷன் நடந்தது" என்கிறார்.

இந்த சூழ்நிலையில் அபிலாஷ், ஜஸீலாவை தேடிவந்திருக்கிறார். "ஜஸீலாவை நான் திருமணம் செய்துகொண்டது அவரது அம்மாவுக்கு தெரிந்திருந்தாலும், அவர் விபத்தில் சிக்கிவிட்டதால் எதுவும் கேட்காமல் இருந்திருக்கிறார். `இவர் என் மனைவி. இனி நானே கவனித்துக்கொள்கிறேன்' என்று கூறி ஸ்டிரெச்சரில் எனது வாடகை வீட்டிற்கு கொண்டு வந்தேன்" என்கிறார், அபிலாஷ்.ஜஸீலாவை தனது மனைவி என்று அவர் அறிவித்ததும் அடுத்தக்கட்ட நெருக்கடி உருவாகியிருக்கிறது. "நானும் அபிலாசும் திருமணம் செய்ததும், ஒன்றாக வசிப்பதும் தெரிந்து இருதரப்பு உறவினர்களும் எங்களை விட்டு அகன்றுவிட்டார்கள். என் அம்மா மட்டும் என்னை பார்க்க வருவார். அந்த நேரத்தில் அபிலாஷூக்கு பணி மாற்றம் கிடைக்க, அவர் அங்கேயும் என்னை அழைத்துச்சென்றார்.என் உடல் நிலைதேறி நான் வீல் சேரில் பயணிக்க தொடங்கினேன். அந்த நேரத்தில் என் உடலில் கட்டி ஒன்று தோன்றியது. அதை பரிசோதித்தபோது புற்று நோய் என தெரியவந்தது. நான்

உடைந்துபோனேன். விபத்தில் உருவான பாதிப்பில் இருந்து மீண்டு மகிழ்ச்சியோடு அபிலாஷூடன் வாழ்க்கையை தொடரலாம் என்று நினைத்திருந்தபோது புற்றுநோய் தாக்கியது என்னை நிலைகுலையச் செய்தது. அதனால் `எனக்கு விவாகரத்து கொடுத்துவிடுங்கள்' என்று அவரிடம் சொன்னேன். `அதை தவிர வேறு எதை கேட்டாலும் சம்மதிக்கிறேன்' என்று கூறி, விவாகரத்துக்கு மறுத்துவிட்டார்.

பல்வேறு கட்ட சிகிச்சைகளுக்கு மத்தியில் எங்கள் வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கிறது.." என்கிறார், ஜஸீலா. அபிலாஷ் தற்போது சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார்.(ஜஸீலா திருடனை பிடித்தது இந்த விபத்துக்கு முன்னால் நடந்தது. விபத்து நடந்து, மேல்சிகிச்சைக்காக உதவிய போலீஸ் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தபோது இவர் டி.ஜி.பி.யின் உதவியாளரை தொடர்புகொண்டு தனது கணவரின் பணிமாற்றத்தை ரத்து செய்யும்படி கோரிக்கை வைத்திருக்கிறார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டதும், "விபத்தில் சிக்கிக்கொண்டதால், முன்பு திருடனை பிடித்ததற்குரிய சிறப்பு பதக்கத்தை பெற முடியவில்லை. இனி அது கிடைக்க வாய்ப்பிருக்கிறதா?" என்று கேட்டிருக்கிறார். அந்த கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பதக்கத்திற்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். கணவரின் உதவியோடு அதனை பெற்று மகிழ்ந்திருக்கிறார்)

எத்தனை துயரங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் போராடினால், அத்தனையில் இருந்தும் மீள முடியும் என்பதற்கு ஜஸீலா ஒரு முன்னுதாரணம்!

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்