பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சியில் நஞ்சு பலவித மாறுதல்களுக்கு உள்ளாகி, ஒவ்வோர் உயிரினத்தின் தேவைக்குத் தகுந்தாற்போல் தகவமைக்கப்பட்டு உள்ளது. நஞ்சு என்பது ஒரே ஒரு வேதிப்பொருள் அல்ல; உயிரியல் ரீதியான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பல பொருட்கள் அடங்கியது. குறிப்பாக புரதங்களின் கலவை. அதில் இருக்கும் ஒவ்வொரு சேர்மத்துக்கும் அதன் ஒட்டுமொத்த செயல்பாட்டில் பங்கு உண்டு.
ஒட்டுமொத்தமாக நஞ்சு உடலுக்கும் உயிருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்றாலும், அதில் உள்ள சில பொருட்களுக்கு அபாரமான மருத்துவ பண்புகளும் உள்ளன. பிற உயிர்களிடத்தில் குறிப்பிட்ட ஓர் நஞ்சு ஏற்படுத்தும் வினையை ஆராய முயன்றபோது, நஞ்சில் இருக்கும் பொருட்களின் தனிப்பட்ட செயல்முறை, அவற்றின் மருத்துவப் பயன் ஆகியவை கண்டறியப்பட்டன.
எடுத்துக்காட்டாக, விரியன் வகைப் பாம்பு ஒன்றின் நஞ்சில் இருக்கும் பொருளுக்கு, ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் உண்டு. அதன் நஞ்சில் இருந்து அந்த பொருளைப் பிரித்து ஆராய்ந்து, செயற்கையாகத் தயாரித்து ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.
தேள் வகை கொடிய நஞ்சைக் கொண்டது. அதன் நஞ்சில் இருக்கும் சில பொருட்கள், மனித உடலின் புற்றுச் செல்களோடு பிணைந்துகொள்கின்றன; அந்த நஞ்சுக்கு உள்ள ஒரு சிறப்பு பண்பு, குறிப்பிட்ட நிறத்தில் அவற்றை ஒளிரச் செய்வதுதான். மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அறுவை சிகிச்சையின்போது அந்த பொருளைச் செலுத்தி, புற்றுச் செல்களோடு அவற்றைப் பிணைந்துகொள்ளச்செய்து, பின்னர் ஒளிரும் செல்களை மட்டும் நீக்குகிறார்கள். இதன்மூலம் ஆரோக்கியமான செல்கள் நீக்கப்படுவதோ புற்றுச் செல்கள் விடுபட்டுப் போவதோ தவிர்க்கப்படுகிறது.
நரம்பு மண்டலத்தை தாக்கும் நஞ்சு வகைகள் பலவற்றில், நாள்பட்ட வலியைப் போக்கக்கூடிய வலிநிவாரணிகள் உண்டு. கூம்பு நத்தைகள் என்ற கடல்வாழ் நத்தைகள் மிக வீரியமான நஞ்சைக் கொண்டவை; கொனோடாக்சின் என்று அழைக்கப்படும் பொருள் அவற்றில் உண்டு. அவை வலியைக் கடத்தும் நரம்புகளை முடக்கி, வலி சமிக்ஞைகள் மூளைக்குச் சென்றடைவதை தடுக்கின்றன.
வலிநிவாரணிகள் தயாரிப்பில் சில நாடுகள் இவற்றை பயன்படுத்துவதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.