வருடத்தில் ஒரு நாள் இலவசமாக கோன் ஐஸ்கிரீம் விநியோகிப்பதைக் கடந்த நாற்பது ஆண்டுகளாக வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம். எதற்கு இந்த இலவசம் என்று கேட்பவர்களுக்கு, ஒரு பெட்ரோல் பங்கை ஐஸ்கிரீம் கடையாக 1978-ல் மாற்றியபோது தங்களுடைய அன்பையும், ஆதரவையும் அள்ளித் தந்த இந்த ஊர் மக்களுக்கு எங்களுடைய நன்றியை இப்படிச் செலுத்துகிறோம் என்று பதில் அளிக்கிறது இந்நிறுவனத்தின் இணையதளம்.
இந்நாளில் வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான எந்த ஐஸ்கிரீம் வகையையும் தேர்ந்தெடுத்துச் சாப்பிடலாம். இதில் சுவாரசியத்தைக் கூட்ட ஒரு குட்டி விநாடி வினாவையும் நடத்தி அதன் அடிப்படையில் பிரத்யேகச் சுவைகளைத் தேர்வுசெய்யும் வாய்ப்பு இந்த ஆண்டு அளிக்கப்பட்டது. நியூயார்க்கின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள பென் அண்டு ஜெர்ரியின் கிளைகளில் கோன் ஐஸ்கிரீம்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டன.
கடைகளை நியூயார்க் நகரில் திறந்து வைத்திருந்தாலும் பென் அண்டு ஜெர்ரி நிறுவனம் இன்றுவரை ஐஸ்கிரீம் தயாரிப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் வெர்மாண்ட் மாகாணத்தில் தொடங்கிய ஒரு தொழிற்சாலையில்தான். சிறிய வளாகத்தில் இயங்கிவரும் இந்த ஐஸ்கிரீம் தொழிற்சாலைதான் 40 சதவீதம் அமெரிக்கர்களைத் தன்னுடைய ஐஸ்கிரீமால் உருக வைத்திருக்கிறது. இந்தத் தொழிற்சாலையைப் பொதுமக்கள் எந்நேரமும் பார்வையிடலாம்.