சிறப்புக் கட்டுரைகள்

‘ஸ்வெட்டர்’ பின்னும் கலையில் மேனகா காந்தி

இந்தியாவில் பெண்களைவிட்டு பிரிக்க முடியாததாக இருந்த ஸ்வெட்டர் பின்னும் கலை, இப்போது பின்னுக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. முன்பு பெரும்பாலான பெண்கள் ஸ்வெட்டர் பின்னுவதற்கு தெரிந்துவைத்திருந்தார்கள். வீட்டு வேலைமுடிந்த பின்பு ஸ்வெட்டர் பின்னத் தொடங்கிவிடுவார்கள். வீட்டில் உள்ளவர்களுக்கு தன் கையால் ஸ்வெட்டர் பின்னிக்கொடுப்பது அவர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த அனுபவமாக அமைந்திருந்தது.

தினத்தந்தி

வீட்டில் உள்ளவர்களுக்கு தன் கையால் ஸ்வெட்டர் பின்னிக்கொடுப்பது அவர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த அனுபவமாக அமைந்திருந்தது. அது உணர்வுபூர்வமான விஷயமாகவும் இருந்தது.

குழந்தை பிறக்கும் முன்பே தாய் அதற்கு ஸ்வெட்டர், குல்லா, சாக்ஸ் போன்றவைகளை பின்னிவைத்துவிடுவார். அதில் எதிர்பார்ப்பும், அன்பும் கலந்திருக்கும். மற்ற உடைகள் எல்லாம் உடலைத்தான் தொடும். குடும்பத்து பெண்கள் தயாரித்து வழங்கும் ஸ்வெட்டர்கள், அணிபவர் களின் இதயத்தையே தொடும். ஆனால் ஏனோ தெரியவில்லை, இப்போதெல்லாம் ஸ்வெட்டர் பின்னும் பெண்களை அதிகமாக காணமுடிவதில்லை.

இயந்திரங்களால் நெய்யப்பட்ட ஸ்வெட்டர்கள் இப்போது பல டிசைன்களில் கிடைக்கின்றன. கடைகளுக்கு சென்று பிடித்ததை தேர்வுசெய்ய முடிகிறது. அமைதியாக இருந்து சிரித்து பேசிக்கொண்டே ஸ்வெட்டர் பின்னிய பெண்கள் இப்போது மின்னல் வேகத்தில் அலுவலக பணி களுக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள். அவர் களுக்கு பொறுமையாக வீட்டில் அமர்ந்து ஸ்வெட்டர் பின்ன நேரம் கிடைப்பதில்லை. ஆனால் வெளிநாடுகளில் இன்றும் இந்த கலை நீடித்துக்கொண்டிருக்கிறது. காரணம் ஸ்வெட்டர் பின்னுவது மனநலத்திற்கும், உடல் நலத்திற்கும் ஏற்றதாக இருக்கிறது. மனதை ஒருநிலைப்படுத்தவும் உதவுகிறது.

இந்த கலையின் சிறப்பு பற்றி மத்திய மந்திரி மேனகா காந்தி சொல்கிறார்:

எனது குடும்பத்தை சேர்ந்த அனைத்து பெண்களும் ஸ்வெட்டர் பின்னுவார்கள். அம்மா, பாட்டி, அத்தைகள் என்று பலரும் கூட்டமாக அமர்ந்திருந்து பின்னிக்கொண்டிருப்பார்கள். வீட்டில் உள்ளவர்களின் தேவை நிறைவேறிய பின்பு, வெளியே இருந்து கேட்பவர்களுக்கு ஆர்டரின்பேரில் ஸ்வெட்டர்கள் தயார் செய்து கொடுப்பார்கள். அவர்கள் பின்னும் ஸ்வெட்டர், குல்லா, சாக்ஸ், மப்ளர், டேபிள் கிளாத் போன்ற அனைத்துமே பார்க்க அழகாக இருக்கும். புதிய டிசைன்களையும் உருவாக்குவார்கள். அதனால் குடும்பத்திற்கு வருமானமும் வந்துகொண்டிருந்தது. நானும்கூட ஸ்வெட்டர் பின்னுவேன். அதெல்லாம் அந்த காலத்தோடு நின்றுவிட்டது.

நான் ஜெர்மனியில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, என் அருகில் இருந்த அந்த நாட்டு பெண் ஒருவர் ஸ்வெட்டர் பின்னிக்கொண்டிருந்தார். இங்கு அழிந்துபோன அந்த கலை, அங்கு வாழ்ந்துகொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியை தந்தது. நான் அந்த பெண்மணியிடம் பேச்சு கொடுத்தபோது, அவருடைய சகோதரியின் மகனுக்கு பரிசளிப்பதற்காக அதை பின்னிக்கொண்டிருப்பதாக சொன்னார். அவரைப் போன்று நிறைய பெண்கள் அங்கே ஸ்வெட்டர் பின்னிக்கொண்டிருப்பதை காண முடிந்தது. வேலைக்குப் போவதால் நேரமில்லை என்று சாக்குபோக்கு சொல்லாமல், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதை செய்கிறார்கள். அதற்காக ஸ்வெட்டர் பின்ன தேவைப்படும் பொருட்களை எல்லாம் எப்போதும் தங்களோடு ஒரு கைப்பையில் வைத்திருக்கிறார்கள். ஜெர்மனியில் பார்க், மெட்ரோ ரெயில் என்று எல்லா இடங்களிலும் ஸ்வெட்டர் பின்னும் பெண்களை காண முடிகிறது.

ஸ்வெட்டர் கடை ஒன்றை பார்க்க சென்றேன். அது என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. எல்லா வயதினருக்கும் ஏற்ற ஸ்வெட்டர்கள் அங்கே இருந்தன. பின்னுவதற்கு தேவைப்படும் எல்லா பொருட்களையும் அங்கே வைத்திருந்தார்கள். இன்னொருபுறத்தில் ஏராளமான பெண்கள் முழுநேரமாகவும், பகுதிநேரமாகவும் அங்கு ஸ்வெட்டர் பின்னும் வேலையையும் செய்துகொண்டிருந்தார்கள். சிலர் தங்களுக்கு பிடித்த டிசைனில் செய்துதர ஆர்டரும் கொடுத்தார்கள். கைத் தொழிலுக்கு அவர்கள் கொடுத்த மரியாதையை பார்த்து வியந்தேன்.

அமெரிக்காவிலும் இந்த கலைக்கு அதிக மரியாதை உள்ளது. அங்கு இதற்கான விற்பனையகங்கள், கண்காட்சி மையங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அங்கே இந்த கலையை முறைப்படி கற்றுத்தரவும் செய்கிறார்கள். நம் நாட்டிலும் இந்த கலையை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். பெண் களின் கைகளில் செல்போன் நிரந்தரமாகிவிட்டது. வலைத்தளமே அவர்களது வாழ்க்கையாகிவிட்டது. அவர்களுக்கு நான் ஒரே ஒரு விஷயத்தை அழுத்தம் திருத்தமாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஸ்வெட்டர் பின்னுவது ஒரு கலை மட்டுமல்ல, அது ஒரு மருத்துவம். வெளிநாடுகளில் ஹைபர் டென்ஷன் நோயாளிகளுக்கு பின்னல் வேலையை ஒரு சிகிச்சையாக பரிந்துரைக்கிறார்கள். மருத்துவர், மருந்துச் சீட்டில் மருந்து மாத்திரைகளுடன் தினமும் எத்தனை மணிநேரம் பின்னல் வேலையை செய்யவேண்டும் என்றும் எழுதிக்கொடுக்கிறார் என்று சொல்லும் மேனகா காந்தி, பின்னல் வேலையை செய்வதால் மனதுக்கும், உடலுக்கும் கிடைக்கும் பலன்களையும் அடுக்குகிறார்.

எவ்வளவு நேரம் பின்னினாலும் அலுப்பு ஏற் படாது. இதர வேலைகளால் ஏற்படும் மனச்சோர்வை இது போக்கும். தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். மற்றவர்களிடமிருந்து பாராட்டு களையும் பெற்றுத்தரும். இந்த கலையில் ஈடுபட்டால் மன அழுத்தம் குறைந்து, ரத்த அழுத்தம் சீராகும். மனதுக்கு புத்துணர்ச்சியும், நிறைவும் கிடைக்கும். அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் ஒரு அறையில் ஸ்வெட்டர் பின்னும் நூல், ஊசி, பட்டன்கள் போன்றவை அடுக்கிவைக்கப்பட்டிருக்கிறது. படித்து களைத்துப்போன மாணவர்கள் அந்த அறைக்கு வந்து வேண்டியதை எடுத்து ஸ்வெட்டர் பின்னுவார்கள். பரீட்சை எழுதச் செல்வதற்கு முன்னாலும் மாணவர்கள் அங்கு சிறிது நேரம் அமர்ந்து ஸ்வெட்டர் பின்னுவது வழக்கம். அதன் மூலம் மனம் ஒருநிலைப்படுத்தப்பட்டு, அதிக மதிப்பெண் கிடைப்பதாக சொல்கிறார்கள் என் கிறார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்