அதை தொடர்ந்து மலையாளத் திரைஉலகமும் இந்த தமிழ்ச் சிறுமிக்கு வாய்ப்பளிக்க, `த பிரிஸ்ட்' என்ற திகில் படத்தில் நடித்து எக்கச்சக்கமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். மோனிகா சிவா ஆறாம் வகுப்பு மாணவி. ஆன்லைனில் படித்துக்கொண்டே இருக்கிறாள். அற்புதமாக நடித்தும் வருகிறாள்.நான் ரொம்ப துறுதுறுப்பான சிறுமி. `நாம் தப்பு செய்தால், இரவில் நாம் தூங்கும்போது பிசாசு வந்து பயப்படுத்தும்' என்றெல்லாம் கூறி என் வகுப்பு தோழிகளை பயங்காட்டுவேன். கண்ணாடி முன்னால் மெழுகுதிரியை ஏற்றிப்பிடித்து பிசாசு போன்று தோன்றி என் தங்கையையும் பலமுறை
ஏமாற்றியிருக்கிறேன். அப்போதெல்லாம் திகில் படங்களில் நடிப்போம் என்று நான் நினைத்ததில்லை.தி பிரிஸ்ட் போன்ற படங்களில் நடிக்கும்போதுதான் அந்த திகிலின் நிஜத்தை உணரமுடிந்தது. அதன் கிளைமேக்ஸ் காட்சியில் பிசாசை விரட்டும் காட்சி ஒன்று உண்டு. அப்போது நான் அலறி சத்தமிட வேண்டும். எனது அலறல் சத்தத்தில் மம்மூட்டி அங்கிளுடன் இருந்த டென் என்ற நாய் குரைத்துக் கொண்டு என்னை நோக்கி குதித்து வந்தது. அது என்னை கடித்துவிடுமோ என்று எல்லோரும் பயந்துவிட்டார்கள். அந்த காட்சியை தியேட்டரில் பார்த்தபோது, டென் என்னை கடித்திருந்தால்
என்னவாகியிருக்கும் என்று அதிர்ந்தேன். ஆனாலும் அப்போது நான் பிசாசு... என்று சிரிக்கிறாள், மோனிகா.
கைதி படத்தை பார்த்துவிட்டு, என்னை பிரிஸ்ட்டில் நடிக்க அழைத்தார்கள். அதற்கான குழந்தை நட்சத்திரத்திற்கான தேர்வில் என்னைப் போல் நிறைய குழந்தைகள் கலந்துகொண்டார்கள். மலையாளம் தெரியாத இந்த சிறுமியால் அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ய முடியுமா என்ற சந்தேகம் டைரக்டருக்கு இருந்தது. அதை எல்லாம் கடந்து, தேர்வாகி 50 நாட்கள் நடிக்க ஒப்பந்தமானபோது எனக்கு பொறுப்புணர்வு அதிகரித்தது. அந்த படம் வெற்றியடைய வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தித்தேன். பிரார்த்தனையை கடவுள் நிறைவேற்றியிருக்கிறார்.படத்தின் காட்சிகளை எனக்கு அம்ருதா ஆன்டி தமிழில் விளக்கிச்சொல்லி நடிக்க உதவினார். முதலில் மருத்துவமனை காட்சியை படமாக்கினார்கள். மம்மூட்டி அங்கிளும், போலீஸ்காரர்களும் வருவார்கள். நான் அவர்களிடம், `நான் யாரையும்
பார்த்ததில்லை. அவரிடம் போய் கேளுங்கள். எனக்கு எப்படி தெரியும்?' என்று சொல்லும்படி என்னிடம் கூறினார்கள்.
அதை மலையாளத்தில் சொல்ல முதலில் நான் சற்று தடுமாறினேன். ஆனால் இப்போது நானும் மலையாளம் கற்றுக்கொண்டேன். எர்ணாகுளம் பகுதியில் உள்ள சிறிய காடு ஒன்றில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது கேரளாவில் உள்ள பல பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். அது ரொம்ப ஜாலியாக இருந்தது. ஆனால் சென்னை உணவு போல் கேரள உணவு இல்லை. இருந்தாலும் துவையல், புட்டு, கடலை, மீன் குழம்பு, மீன் வறுவலை விரும்பி சாப்பிட்டேன். அவை வித்தியாசமான சுவையை தந்தது.முதன் முதலில் மம்மூட்டி அங்கிளை பார்த்தபோது எனக்கு பயமாக இருந்தது. ஆனால் அவர் சிரித்துக்கொண்டு என் அருகில் வந்து, `நானும் சென்னையில் வசித்திருக்கிறேன். எனக்கும் தமிழ் தெரியும்' என்றார். அதன் பின்பு நானும், மம்மூட்டி அங்கிளும் நல்ல நண்பர்களாகிவிட்டோம். அந்த காலகட்டத்தில் துல்கர் அங்கிள் நடித்த `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' என்ற ரிலீஸ் ஆனது. அதில் நானும் நடித்திருக்கிறேன். அதை மம்மூட்டி அங்கிள்
குறிப்பிட்டு சொன்னபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அடுத்து சந்தோஷம் என்ற மலையாள படத்தில் நடிக்க இருக்கிறேன் என்று கூறும் மோனிகா, விஜய் மற்றும் அஜித்குமாரிடம் அதிக அன்பு காட்டுகிறார்.
விஜய் அங்கிளும், அஜித் அங்கிளும் என் டார்லிங் அங்கிள்ஸ். விஜய் அங்கிள் என்னை டார்லிங் பேபி என்று அழைப்பார். பைரவா அவரது 60-வது படம் என்பதால் வெரி ஸ்பெஷல் மூவி அது. ஷூட்டிங் இடைவேளையில் நாங்கள் இருவரும் குத்துச்சண்டை போட்டு விளையாடுவோம். நான் போனிடைல் போட்டு சென்றால் அங்கிள் எனக்கு தெரியாமலே முடியில் பின்னல் போட்டுவிடுவார்.வேதாளத்தில் எனது ஷெட்யூல் முடிந்து திரும்பியபோது, அஜித் அங்கிளோடு ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டது. அப்போது அவர் சினிமா காட்சிக்கான கெட்டப்பில் இருந்ததால் டைரக்டர், `இன்று முடியாது. நாளை வா..' என்றார். உடனே எனக்கு அழுகைவந்துவிட்டது. அஜித் அங்கிளின் உதவியாளர் நான் அழுததை பார்த்து, அங்கிளிடம் போய் சொன்னார். உடனே அவர் கேராவனில் இருந்து இறங்கிவந்தார். காட்சிக்கான கெட்டப்பை மாற்றிவிட்டு, என் அருகில் நிலத்தில் முட்டிப்போட்டு நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். நான் அதை
அபூர்வமான படமாக பாதுகாத்து வருகிறேன் என்கிறாள், மோனிகா.
மோனிகாவின் தந்தை சிவா. தாயார் அனிதா. தங்கை தியா. அமைதி பாதி, அமர்க்களம் மீதியாக கலாய்க்கிறாள் மோனிகா.நானும், தங்கையும் எப்போதும் சண்டைபோடுவோம். ஆனால் வெளியே சென்றால் ரொம்ப அமைதியாகிவிடுவோம். எனக்கு பலவிதமான ஆசை இருக்கிறது. டென்னிஸ் வீராங்கனை, நடிகை, போட்டோகிராபர், விஞ்ஞானி, டைரக்டர் போன்றெல்லாம் ஆகவேண்டும் என்ற கனவு எனக்கு இருக்கிறது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிற்குள்ளேயே அடைபட்டுக்கிடந்தேன். அப்போது பள்ளிக்கு செல்ல முடியாத ஏக்கமும், நண்பர்களை பார்க்க முடியாத ஏக்கமும் இருந்தது. பள்ளியில் ரம்யா மேடம்தான் எனக்கு பிடித்த டீச்சர். படிப்பையும், நடிப்பையும் எப்படி பேலன்ஸ் செய்வது என்று எனக்கு தெரியும். அதனால் நான் வகுப்பில் முதல் மாணவியாக இருக்கிறேன். ஒவ்வொரு சினிமாவில் நடித்து முடித்ததும் என் நண்பர்களுக்கெல்லாம் சாக்லெட் வாங்கிக்கொடுப்பேன் என்று கலகலப்பாக சொல்கிறாள், இந்த குட்டித் தேவதை.