தமிழ்நாட்டின் கம்பீர அடையாளமும், நமது மாநில விலங்குமான நீலகிரி வரையாட்டின் சிறப்பை உலகிற்கு பறைசாற்றும் வகையில் இன்று 'நீலகிரி வரையாடு தினம்' கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் செங்குத்தான பாறைகளில் அசாத்தியமாக ஏறி நடப்பதால், இவை 'மலைகளின் அரசர்கள்' என்று அன்போடு அழைக்கப்படுகின்றன. வரையாடு ஒரு அரிய மற்றும் அழிந்து வரும் விலங்கினங்களில் ஒன்றாகும்.
தென்னிந்தியாவின் இந்த அரிய மலைவாழ் உயிரினத்தைப் பற்றி 1960-களிலேயே முதன்முதலில் விரிவான ஆய்வுகளையும், அறிவியல் பூர்வமான கணக்கெடுப்புகளையும் நடத்தியவர் வனவிலங்கு பாதுகாப்பாளர் டாக்டர் ஈ.ஆர்.சி. தாவீதார் ஆவார். வரையாடுகளின் பாதுகாப்பிற்கு அடித்தளமிட்ட அவரது பிறந்தநாளான அக்டோபர் 7-ம் தேதியை, தமிழ்நாடு அரசு 'நீலகிரி வரையாடு தினமாக' அறிவித்து ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.
வரையாடுகள் தமிழகத்திற்கு புதியவை அல்ல. 2000-ம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களின் வாழ்வியலோடு இவை கலந்திருந்தன. நமது சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரம் மற்றும் சீவகசிந்தாமணி ஆகிய காப்பியங்களில் இந்த வரையாடுகள் 'வருடை' என்ற தூய தமிழ் பெயரால் குறிப்பிடப்பட்டு, அதன் சிறப்புகள் வர்ணிக்கப்பட்டுள்ளன.
கடல் மட்டத்திலிருந்து 1,200 மீட்டர் முதல் 2,600 மீட்டர் வரையிலான மிக உயர்ந்த, செங்குத்தான பாறை முகடுகள் மற்றும் சோலை புல்வெளிகளில்தான் இவை வாழ்கின்றன. வேட்டையாடுதல், சோலைக்காடுகள் அழிந்து வருதல் உள்ளிட்டவற்றால் இந்த வரையாடு கள் அழிந்து வரும் இனமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 1972-ம் ஆண்டு வன உயிரின பாதுகாப்புச் சட்டம் வந்தபின், வரையாடுகள் பாதுகாக்கப் பட வேண்டிய பட்டியல் 1-ல் சேர்க்கப்பட்டது.
உலகில் வேறு எங்குமே பார்க்க முடியாத, தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான தமிழ்நாடு மற்றும் கேரள மாநில எல்லைகளில் மட்டுமே வாழும் தனிச்சிறப்பு வாய்ந்த விலங்கு இதுவாகும். தமிழ் நாடு மற்றும் கேரளத்தின் ஒருசில பகுதிகளில் மட்டும் இந்த வரையாடு காணப்படுகிறது. குறிப்பாக நீலகிரி, வால்பாறை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் இதன் முக்கிய வாழ்விடங்களாகும்.
சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் சிவப்பு பட்டியலில் இவை 'அழிந்து வரும் விளிம்பில் உள்ள உயிரினம்' என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதை காக்க, இந்தியாவிலேயே முதன்முறையாக 'நீலகிரி வரையாடு திட்டம்' என்ற பிரத்யேக பாதுகாப்பான திட்டத்தை நமது தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
அரசின் இந்த தீவிர முயற்சி மற்றும் தொடர் கண்காணிப்பு காரணமாக, தமிழகத்தில் வரையாடுகளின் எண்ணிக்கை தற்போது கணிசமாக உயர்ந்து 1,364 ஆக அதிகரித்துள்ளது என்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகும்.
நமது மாநிலத்தின் பெருமையான, இயற்கையின் இந்த அதிசயப் படைப்பைப் போற்றிப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்!