ஸ்ரீநகர் மாநகராட்சியில் பணியாற்றும் இர்பானா, பெரும்பாலும் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு இந்த உதவிகளைச் செய்து வருகிறார். ஏழைப் பெண்கள் சுகாதாரமாக இருக்க வேண்டும் என்பதிலும் அவர் அக்கறை காட்டுகிறார்.
இது போன்று உதவ வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது என்று கேட்டபோது, இர்பானா மனம் திறந்து பல விஷயங்களைப் பேசியுள்ளார்.
இளம் வயதில் கடைக்குச் சென்று நாப்கின் வாங்குவதற்கு நான் வெட்கப்படுவேன். அப்போது என் தந்தைதான் நாப்கின் வாங்கித் தருவார். எனக்கு 21 வயது இருக்கும்போது, மாரடைப்பால் என் தந்தை காலமானார். அவரது மறைவு என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதில் இருந்து மீண்டு வந்த பிறகு, அவர் நினைவாக தனித்துவமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். அப்போதுதான் இந்த யோசனை தோன்றியது. அன்றிலிருந்து என் தந்தை நினைவாக ஏழைப் பெண்களுக்கு நாப்கின்களையும், சானிடைசர்களையும் வழங்கி வருகிறேன் என்று முன்கதை கூறிய இர்பானா, இந்த பணிகளை முழுக்க, முழுக்க தன் சொந்த சம்பளத்திலிருந்து மட்டுமே செய்கிறார்.
காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் வாழும் பெரும்பாலான பெண்கள், தங்களுக்கு ஏற்பட்டுள்ள உடல்நலம் பாதிப்பு குறித்து வெளிப்படையாகப் பேச தயங்குவார்கள். குறிப்பாக மாதவிடாய் காலங்களில், அவர்களுக்கு தேவைப்படும் நாப்கின், சானிடைசர்களை கணவரிடம் கேட்கவும், வாங்கவும் தயங்குகிறார்கள். அதனால்தான், நான் முந்திக்கொள்கிறேன். என்னால் முடிந்தவரை பெண்களை சந்தித்து பேசுகிறேன். அவர்களது மாதவிடாய் காலம் குறித்து குறிப்பெடுத்து கொள்வேன். அவர்களுக்கு வேண்டியவற்றை வீடு தேடி சென்று கொடுக்கிறேன்.
முன்பெல்லாம் பெண்களுக்கான தனி கழிப்பறை வசதி இருக்காது. இன்றைக்கு அலுவலகங்களில் பெண்களுக்கு என தனி கழிப்பறைகள் உள்ளன. இருந்தாலும், பெண்களுக்குத் தேவையான நாப்கின்கள் இருப்பதில்லை. அங்கு நாப்கின், சோப்பு மற்றும் சானிடைசர்களை நிரப்பும் பணிகளை நான் மேற்கொள்கிறேன் என்றவர், அப்போதுதான் அவை பெண்களுக்கான முழுமையான கழிப்பறைகளாக மாறுவதாகவும் கூறினார்.
இவர் கொரோனா காலத்திலும் தன் பணியைத் தொடர்ந்தார். கொரோனா பாதிப்புகளிலிருந்து தற்காத்துக்கொள்ள பெண்களுக்கு கை கழுவ சானிடைசர்களையும் கூடுதலாக வழங்கினார்.
நாப்கின் தேவைப்படுவோர் என்னை போன் செய்து அழைப்பார்கள். நான் உடனே அவர்கள் இருக்கும் இடத்துக்குச் சென்று கொடுத்துவிட்டு வருவேன். சில இளம் பெண்கள் இன்னும் வெட்கப்படுகிறார்கள். நாப்கின்களை வாங்குவதற்கு தங்கள் பெற்றோரை அனுப்புகின்றனர். இப்போது ஏழைகள், விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்ற பெண்கள் நலனில் முக்கிய கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளேன்.
என்னிடம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களின் பட்டியல் உள்ளது. அதன்படி நாப்கின் தேவைப்படுபவர்களுக்கு, உரிய காலத்தில் கொண்டு சேர்க்கிறேன். வீட்டையும் கவனித்துக் கொண்டு, அலுவலகத்திலும் பணியாற்றிக் கொண்டு இதனை தனி ஆளாகச் செய்வது கடினமாகத்தான் இருக்கிறது. காஷ்மீரை சுற்றிய பகுதிகளில் முறையான போக்குவரத்து வசதிகள் இல்லை. சில சமயங்களில் ஆட்டோவில் சென்று கொடுத்துவிட்டு வருவேன் என்றவர், ஆண்களுக்கு சில அறிவுரைகளையும் வழங்குகிறார்.
காஷ்மீரின் கிராமப்புறங்களில் மாதவிடாய் என்பதை இன்றைக்கும் சங்கடமாகவும், அவமானமாகவும் நினைக்கிறார்கள். தொடர்ந்து பிரச்சாரம் செய்து அவர்களை மாற்றிக் கொண்டிருக்கிறேன்.
மாதவிடாய் காலத்தில் ஆண்களும் ஒத்துழைக்க வேண்டும். பெண்களுக்குக் கடினமான வேலையைத் தரக் கூடாது. இந்த சமயத்தில் தான் பெண்கள் மீதான மரியாதையை அவர்கள் முழுமையாக காட்ட வேண்டும். மாதவிடாயின்போது நாப்கின் மற்றும் சானிடைசர்களை வாங்கித் தராவிட்டால், பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான ரூபாயை மருத்துவத்துக்குச் செலவு செய்ய நேரிடும் என்றும் எச்சரிக்கிறார்.
நான் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள். என் அம்மாதான் எங்களை வளர்த்தார். எங்களுக்கு அப்போது நிரந்தர வருமானம் கிடையாது. இது போன்ற பல பிரச்சினைகளை நாங்கள் சந்தித்தோம். இதுதான் ஏழைப் பெண்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் ஏற்படுத்தியது. நான் சம்பாதிக்கத் தொடங்கியதுமே, என் எண்ணம் முழுவதும் ஏழைப் பெண்களை நோக்கியே சென்றது. மாதவிடாய் காலத்தில் அவர்கள் எப்படிச் சமாளிக்கிறார்கள் என்பதை நினைத்து வியந்து போனேன். இதுதான் ஏழைப் பெண்களுக்குச் சேவையைத் தொடர காரணமாக அமைந்தது என்றவர், நிறைவாய் ஒரு கருத்தை கூறினார்.
மாதவிடாய் என்பது பெண்களுக்குக் கடவுள் கொடுத்த வரம். அது மனித குலத்தின் அடிப்படை. அதில், ஏற்றத்தாழ்வு இருந்தால் இந்த உலகம் இருக்காது என்கிறார் இர்பானா. இதையே தன் விழிப்புணர்வுப் பிரச்சாரமாகவும் மேற்கொள்கிறார்.
காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில், இர்பானாவை நாப்கின் பெண் என்றே அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு ஏழைப் பெண்களின் தேவையை அறிந்து செயல்படுகிறார்.
மாதவிடாய் என்பது பெண்களுக்குக் கடவுள் கொடுத்த வரம். அது மனித குலத்தின் அடிப்படை. அதில், ஏற்றத்தாழ்வு இருந்தால் இந்த உலகம் இருக்காது