சிறப்புக் கட்டுரைகள்

பிப்ரவரி மாதத்தில், டாலர் மதிப்பில் நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 2.11 சதவீதம் குறைந்தது

அமெரிக்கா, ஹாங்காங், ஐரோப்பா மற்றும் ஐக்கிய அரபு குடியரசு நாடுகள் இந்தியாவில் இருந்து நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களை அதிக அளவில் இறக்குமதி செய்கின்றன. நம் நாட்டின் நவரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு மட்டும் சுமார் 25 சதவீதமாக உள்ளது...

தினத்தந்தி

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

பிப்ரவரி மாதத்தில், டாலர் மதிப்பில் நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 2.11 சதவீதம் குறைந்து 373 கோடி டாலராக இருக்கிறது.

தங்கம் இறக்குமதி

நம் நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக 800 டன் முதல் 900 டன் வரை தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. சென்ற நிதி ஆண்டில் (2017-18) 955 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 22 சதவீதம் அதிகமாகும்.

நம் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் தங்க கட்டிகள் மற்றும் கச்சா வைரங்கள் மதிப்புக் கூட்டப்பட்டு தங்க, வைர ஆபரணங்களாக மறுஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையின் பங்கு 14 சதவீதமாக உள்ளது.

அமெரிக்காவின் பங்கு

அமெரிக்கா, ஹாங்காங், ஐரோப்பா மற்றும் ஐக்கிய அரபு குடியரசு நாடுகள் இந்தியாவில் இருந்து நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களை அதிக அளவில் இறக்குமதி செய்கின்றன. நம் நாட்டின் நவரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு மட்டும் சுமார் 25 சதவீதமாக உள்ளது.

2015-16-ஆம் நிதி ஆண்டில், ரூ.2.57 லட்சம் கோடிக்கு நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தது. சென்ற நிதி ஆண்டில் (2016-17) அது ரூ.2.37 லட்சம் கோடியாக குறைந்தது. 2017-18-ஆம் நிதி ஆண்டில் ரூ.2.10 லட்சம் கோடியாக குறைந்தது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது அது 11 சதவீத சரிவாக இருந்தது.

சென்ற நிதி ஆண்டில் (2017-18), டாலர் மதிப்பில் நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 8 சதவீதம் சரிவடைந்து (3,500 கோடி டாலரில் இருந்து) 3,300 கோடி டாலராக குறைந்துள்ளது. பொருளாதார தேக்க நிலையால் பல நாடுகள் பாதிக்கப்பட்டதே இதற்கு காரணமாகும்.

பிப்ரவரி மாதத்தில்...

இந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் ரூபாய் மதிப்பு அடிப்படையில் நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் 8.3 சதவீதம் அதிகரித்து ரூ.26,537 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது ரூ.24,503 கோடியாக இருந்தது. அதே சமயம் டாலர் மதிப்பில் நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் 2.11 சதவீதம் குறைந்து 373 கோடி டாலராக குறைந்துள்ளது. சென்ற ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அது 381 கோடி டாலராக இருந்தது.

7 சதவீதம் அதிகரித்தது

முந்தைய மாதத்தில் (ஜனவரி) டாலர் மதிப்பில் நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 7 சதவீதம் அதிகரித்து 325 கோடி டாலராக உயர்ந்து இருந்தது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 304 கோடி டாலராக இருந்தது. இதே காலத்தில் ரூபாய் மதிப்பு அடிப்படையில் நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 19 சதவீதம் அதிகரித்து ரூ.22,870 கோடியாக இருந்தது.

நடப்பு நிதி ஆண்டில் (2018-19), பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைந்த முதல் 11 மாதங்களில் 3,603 கோடி டாலருக்கு நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதியாகி இருக்கிறது. இது கடந்த நிதி ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 3.64 சதவீதம் குறைவாகும். அப்போது ஏற்றுமதி 3,748 கோடி டாலராக இருந்தது.

வைரங்கள் ஏற்றுமதி

இதே காலத்தில் அறுத்து, பட்டை தீட்டிய வைரங்கள் ஏற்றுமதி 1.17 சதவீதம் உயர்ந்து 2,195 கோடி டாலராக அதிகரித்துள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் அது 2,170 கோடி டாலராக இருந்தது.

நடப்பு நிதி ஆண்டில் (2018-19) நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, டாலர் மதிப்பில் 10 சதவீதம் அதிகரிக்கும் என வைர ஆபரண தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர். மத்திய அரசு, 2022-ஆம் ஆண்டுக்குள் இத்துறையின் ஆண்டு ஏற்றுமதியை 6,000 கோடி டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயித்து இருக்கிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து