சிறப்புக் கட்டுரைகள்

இந்திய ராணுவத்தை கட்டமைத்த நேதாஜி

இந்திய ராணுவத்தின் கட்டமைப்பை முதன் முதலில் உருவாக்கியவர், சுதந்திர போராட்ட வீரரான சுபாஷ் சந்திரபோஸ். 1938-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுபாஷ் சந்திரபோஸ்க்கு, ரவீந்திரநாத் தாகூர் ‘நேதாஜி’ என்ற பட்டத்தை வழங்கினார்.

இவர் இந்தியாவின் ஒடிசா மாநிலம் கட்டாக் என்ற இடத்தில் பிறந்தவர். இவருடன் பிறந்தவர்கள் 8 சகோதரர்கள், 6 சகோதரிகள் ஆவர். சுபாஷ் சந்திரபோஸ் தந்தை ஜானகிநாத் போஸ், புகழ்பெற்ற வக்கீல் ஆவார். பள்ளி படிப்பை கட்டாக்கில் முடித்தவர், 1915-ம் ஆண்டு கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். அங்கு சி.எப்.ஓட்டன் என்ற ஆசிரியர், இந்தியாவிற்கு எதிரான கருத்தை தெரிவித்ததால், அவரோடு ஏற்பட்ட தகராறில் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார், சுபாஷ் சந்திரபோஸ். பின்னர், ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்றார்.

1919-ம் ஆண்டு தந்தையின் விருப்பத்திற்காக ஐ.சி.எஸ். தேர்வுக்கு படிக்க, லண்டனுக்கு சென்றார். அதில் நான்காவது மாணவனாக தேர்ச்சி பெற்றார். அந்த நேரத்தில்தான் இந்தியாவில் ஜாலியன் வாலாபாக் படுகொலை அரங்கேறியது. அது சுபாஷ் சந்திரபோஸ் மனதில் சுதந்திர வேட்கையை அதிகப்படுத்தியது. இதனால் லண்டனில் கிடைத்த வேலையை விட்டு விட்டு, 1921-ம் ஆண்டு இந்தியா திரும்பினார்.

இந்தியா வந்தவர், சுதந்திர போராட்டத்தில் பங்கேற்க ஏதுவாக, காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். சி.ஆர்.தாஸ் என்பவரை தன்னுடைய அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார். சி.ஆர்.தாஸ் தொடங்கிய பார்வர்டு என்ற பத்திரிகையின் பொறுப்பையும் கவனித்தார். 1938-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுபாஷ் சந்திரபோஸ்க்கு, ரவீந்திரநாத் தாகூர் நேதாஜி என்ற பட்டத்தை வழங்கினார். இதற்கு மரியாதைக்குரிய தலைவர் என்று பொருள். ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியவரை, 1940-ம் ஆண்டு பிரிட்டன் அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டியதாக ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். பின்னர் சிறையில் இருந்து மீண்ட அவர், இந்திய ராணுவத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டார்.

இதற்காக 1941-ம் ஆண்டு, சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பைத் தொடங்கிய நேதாஜி, சுதந்திர இந்திய வானொலியையும், பெர்லினில் இருந்து தொடங்கி நடத்தினார். அதில் இந்திய விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தியும், உலகப்போர் பற்றிய செய்திகளையும் ஒலிபரப்பினார். 1943-ம் ஆண்டு, சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் அரசு தேசிய கொடியை ஏற்றி, சுதந்திர அரசின் பிரகடனத்தை வெளியிட்டார். பிறகு, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலி நாடுகளின் ஆதரவுடன், பர்மாவில் இருந்த படியே இந்திய தேசிய ராணுவப்படையைக் கொண்டு ஆங்கிலேயரை எதிர்த்தார். சில காரணங்களால் அதில் வெற்றி கிடைக்கவில்லை. 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந் தேதி, விமான விபத்தில் அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தச் செய்தி இந்திய மக்கள் பலரை துன்பத்தில் ஆழ்த்தியது. நேதாஜி இறந்ததை பலரும் நம்பவில்லை. அவரது சாவில் மர்மம் இருப்பதாக இன்றும் பேசப்பட்டு வருகிறது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்