இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பவுத்தர்கள் ஆகிய எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும் 108 என்ற எண்ணைப் புனிதமானதாகக் கருதுகிறார்கள். அவர்களிலும் இந்துக்கள் 108 என்ற எண்ணுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
வேதங்களின் கருத்துக்கள் அனைத்தையும் கொண்ட உபநிஷத்துக்கள் 108 இருப்பதாகக் கூறப்படுகிறது. விஷ்ணு வசிக்கும் இடமாகக்கருதப்படும் 108 திவ்ய தேசங்கள், இந்துக்களால் வணங்கி போற்றப்படுகின்றன.
வானில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் நான்கு திசைகளைப் பார்க்கின்றன என்பது இந்துக்களின் நம்பிக்கை. இந்த எண்களின் பெருக்கல் தொகை 108.
இந்துக்கள் பின்பற்றும் ஜோதிடத்தில், 9 கிரகங்கள், 12 ராசிக்கட்டங்களைச் சுற்றி வருவதாகக் கூறப்பட்டு இருக்கிறது. இந்த எண்களின் பெருக்கல் தொகையும் 108 தான்.
மனித உடலில் உயிருக்கு ஆதாரமான முக்கிய புள்ளிகள் 108 என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் என்பது சூரியனின் விட்டத்தைப் போல 108 மடங்கானது என்றும், அதே போல பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம், சந்திரனின் விட்டத்தைப் போல 108 மடங்கானது என்றும் பழங்கால இந்திய வானிலை நிபுணர்கள் கணித்து இருக்கிறார்கள். இங்கும் 108 என்ற எண் இடம் பெறுகிறது.
மனதை அடக்கி தியானம் செய்து, தினசரி மூச்சு விடும் எண்ணிக்கையை 108 என்ற அளவுக்குக் குறைத்துக் கொண்டால், பேரின்பம் பெறலாம் என்று இந்து மதம் கூறுகிறது.
இவ்வாறு பல வகையிலும் முக்கியத்துவம் பெற்ற 108 என்ற எண்ணின் மகிமையை தமிழகத்தில் இருந்து சென்ற அந்தணர்கள் மூலம் அறிந்த கம்போடிய மன்னர் ஒருவர், புனிதமான 108 எண்ணை அடையாளப்படுத்த, தான் கட்டிய ஒரு கோவிலில் 108 கோபுரங்களை அமைத்தார் என்பதற்குச் சாட்சி கம்போடியாவில் உள்ளது.
அந்தக் கோவிலின் பெயர் புனாம் பாகெங்க்.
அங்கோர் வாட் கோவிலில் இருந்து வடக்கே 1 கிலோ மீட்டர் தூரத்தில் இந்தக் கோவில் இருக்கிறது.
கம்போடியாவில் கி.பி.889-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மன்னர் யசோவர்மன், சிவன் வசிக்கும் மேரு மலையைப் போன்ற ஒரு மலைப் பகுதியில் கோவிலைக் கட்ட வேண்டும் என்றும் அவற்றில் 108 கோபுரங்களை அமைக்க வேண்டும் என்றும் திட்டமிட்டார்.
இதற்காக அவர் தேர்ந்தெடுத்த இடம், 60 அடி உயரமான மலையைக் கொண்ட பாகெங்க்.
அப்போது ஹரிகராலாய என்ற இடத்தில் தலைநகர் இருந்தது. மன்னர் யசோவர்மன், அந்த தலைநகரை பாகெங்க் மலைப்பகுதிக்கு மாற்றி, அந்த மலையைச் சுற்றி புதிய நகரை அமைத்துக் கொண்டார். யசோதராபுரம் என்று இந்த நகரம் அழைக்கப்பட்டது.
மேரு மலையைச் சுற்றி கடல் சூழ்ந்து இருப்பதை உருவகப்படுத்த, சற்று தூரத்தில் ஓடிய ஸ்டங் சியம் ரீப் என்ற ஆற்றை திசை திருப்பி, பாகெங்க் மலையைச் சுற்றி ஓடும்படிச் செய்தார்.
கி.பி. 900-ம் ஆண்டில் அவர் அந்த மலை மீது செங்கல், மணல், கல் ஆகியவற்றைக் கொண்டு அழகிய கோவிலைக் கட்டினார். கி.பி.907-ம் ஆண்டு கோவிலின் உச்சியில் உள்ள மத்திய மண்டபத்தில் லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கல்வெட்டு செய்தி கூறுகிறது. அந்த லிங்கத்தை இப்போதும் பார்க்கலாம்.
இந்தக் கோவில் 5 பிரகாரங்களைக் கொண்டது. தரைப்பகுதியில் கோவிலைச் சுற்றி 44 கோபுரங்கள் கட்டப்பட்டு இருக்கின்றன. பின்னர் ஒவ்வொரு பிரகாரத்திலும் தலா 12 கோபுரங்கள் வீதம் 60 கோபுரங்கள் அமைக்கப்பட்டன. கோவிலின் உச்சியில் 4 கோபுரங்களும் அவற்றின் நடுவே ஒரு கோபுரமும் உள்ளது.
இவை எல்லாவற்றையும் சேர்த்தால் கோபுரங்களின் எண்ணிக்கை 109 ஆகும். இவற்றில் உச்சியில் உள்ள மையக் கோபுரத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்வது இல்லை. அதை எண்ணிக்கையில் சேர்க்கவில்லை என்றால் கோவில் கோபுரங்களின் எண்ணிக்கை 108 ஆகிறது.
வான இயல் சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு 108 கோபுரங்கள், குறிப்பிட்ட இடங்களில் அமைக்கப்பட்டு இருக்கின்றன என்றும், இந்தக் கோவில், கல்லில் உருவான வான சாஸ்திரக் காலண்டர் என்றும் சிகாகோ நகரத்தை சேர்ந்த ஆய்வாளர் பால் வீட்லீ என்பவர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
12 ஆதித்யர்கள், 8 வசுக்கள், 11 ருத்திரர்கள், இந்திரன் மற்றும் பிரஜாபதி ஆகிய 33 தேவர்கள் இருப்பதாக இந்து மதத்தின் ரிக் வேதத்தில் கூறப்பட்டு இருக்கிறது.
இதனை இந்தக்கோவில் ஒரு விதத்தில் சுட்டிக்காட்டுவது ஆச்சரியமாக இருக்கிறது.
அதாவது, கோவிலின் உச்சியில் இருந்து பார்த்தால், மொத்தம் உள்ள 108 கோபுரங்களில் 33 கோபுரங்களை மட்டுமே ஒரே நேரத்தில் பார்க்க முடியும் என்ற வகையில் மிக அற்புதமாக அந்தக் கோபுரங்கள் அமைந்து இருக்கின்றன.
மேலும் ஓர் அதிசயமாக இந்த கோவில் அமைந்துள்ள மலை மீது, அரபு மொழியில் எழுதப்பட்ட இஸ்லாமியர் களின் கல்வெட்டு ஒன்று சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டது.
இறைவன் அல்லாவைப் புகழ்ந்து எழுதப்பட்ட இந்தக் கல்வெட்டை இப்போது அருங்காட்சியகத்தில் பத்திரமாக வைத்து இருக் கிறார்கள்.
இந்தக் கோவிலின் உச்சியில் இருந்து சூரிய அஸ்தமனக் காட்சி, பார்க்க அற்புதமாக இருக்கும்.
இதற்காகவே வெளிநாட்டுப் பயணிகள், மாலை நேரங்களில் இந்தக் கோவிலுக்கு அதிகம் செல்கிறார்கள்.
இந்தக் கோவிலில் உள்ள கிணற்றில், 8 அடி நீளம், 3 அடி அகலம், 2 அடி ஆழம் கொண்ட கல்தொட்டி ஒன்று கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தக் கல்தொட்டி, இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்வதற்காக பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று பிரான்ஸ் நாட்டு வரலாற்று ஆய்வாளர் ஜார்ஜ் செடெஸ் தெரிவித்தார்.
இதே போன்ற ஒரு கல்தொட்டி, வேறு ஒரு கோவிலிலும் காணப்படுகிறது. அந்தக் கோவில், இறந்த மன்னர் குடும்பத்தினரின் இறுதிச்சடங்குக்காகவே கட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
அந்தக் கோவிலின் பெயர் பிரி ரப்.
பிரி ரப் என்றால் கெமெர் மொழியில் உடலைத் திருப்பு என்று பொருள்.
மறு பிறப்பு என்ற தமிழ்ச்சொல் தான், பின்னாளில் பிரி ரப் என்று மருவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக, இந்தக்கோவில் பற்றிய கர்ண பரம்பரைச் செய்தியை அந்த நாட்டு சுற்றுலா வழிகாட்டிகள் விஸ்தாரமாகச் சொல்கிறார்கள்.
ஆனால், வரலாற்று ஆய்வாளர்கள் இது போன்ற செவி வழிச்செய்தியை ஏற்றுக்கொள்வது இல்லை. உறுதியான ஆதாரம் கிடைத்தால் மட்டுமே அவர்கள் அதனை பதிவு செய்வது வழக்கம்.
பிரி ரப் கோவில், மன்னர் குடும்பத்தில் இறந்தவர்களின் இறுதிச்சடங்குக்கு என்றே, மன்னர் ராஜேந்திரவர்மன் காலத்தில் கட்டப்பட்டதாகும் என்று வழிகாட்டிகள் கூறுவதற்குக் காரணமாக இருப்பது, கோவிலின் அடிவாரத்தில், கோவில் சன்னிதிக்கு நேர் எதிரே இருக்கும் கல்தொட்டி ஒன்று தான்.
மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்தக் கோவிலின் கிழக்குப்பகுதியில் செங்குத்தான படிக்கட்டுகள் இருக்கின்றன.
இந்தப் படிக்கட்டுகளுக்கு நேர் எதிரே தரையில் கல்தொட்டி ஒன்று உள்ளது.
10 அடி நீளம், 6 அடி அகலம் கொண்ட இந்தக் கல்தொட்டியின் ஆழம் 2 அடி.
மன்னர், அல்லது மன்னர் குடும்பத்தில் முக்கியமானவர்கள் யாராவது இறந்தால், அவர்கள் மறு பிறப்பு பெற வேண்டும் என்பதற்காக, அவர்களது உடலை அங்கே கொண்டு வந்து வழிபாடு நடத்துவார்களாம். பின்னர் அந்தக் குழியில் அவர்களது உடல் வைத்து எரியூட்டப்படுமாம்.
மறு நாள் அந்த சாம்பலை எடுத்து நாலா புறமும் தூவி விடுவார்களாம்.
அந்தக் கல்தொட்டி அமைந்துள்ள இடத்தில் இருந்து சற்று தூரத்தில், சதுர வடிவில் வித்தியாசமான முறையில் ஒரு அறை கட்டப்பட்டு இருக்கிறது. அந்த அறை இறுதிச் சடங்குகள் செய்வதற்கு என்றே கட்டப்பட்டது போல காட்சி அளிக்கிறது.
இறந்தவர்களுக்காக அந்த அறையில் மேலும் பல சடங்குகள் செய்யப்படும் என்று வழிகாட்டிகள் கூறுகிறார்கள்.
சடங்குகள் முடிந்த பின்னர், அங்கு இருந்து தண்ணீர் வெளியே செல்ல அந்த அறையில் வசதி செய்யப்பட்டு இருப்பது, வழிகாட்டிகள் சொல்வதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது.
இந்தக் கோவில் இறுதிச்சடங்குகளுக்காக கட்டப்பட்டது என்பதற்கு அங்கே காணப்படும் கல்வெட்டு ஒன்றும் ஆதாரமாகக் காட்டப்படுகிறது.
பொதுவாக கம்போடியாவில் உள்ள கோவில்களின் சன்னிதியில் கடவுள் உருவம் வைக்கப்பட்டு இருந்தாலும், அந்த உருவத்தை மன்னராகவே பாவித்து வழிபாடு செய்வது உண்டு.
பிரி ரப் கோவில் சன்னிதியில் சிவன் உருவம் வைக்கப்பட்டு, அது மன்னரின் பெயரால் ராஜேந்திர பத்ரேசுவரர் என்று அழைக்கப் படுகிறது.
கோவிலில் உள்ள கல்வெட்டில், சன்னிதியில் உள்ள சிலையில் மன்னரின் ஆன்மா உருவேற்றப்பட்டு இருக்கிறது என்று எழுதப்பட்டு இருக்கிறது.
மன்னர் ராஜேந்திரவர்மன் உயிருடன் இருக்கும் போதே அவரது சிலை கோவிலில் வைக்கப்பட்டது என்றாலும், கல்வெட்டில் இவ்வாறு எழுதப்பட்டு இருப்பது பல ஐயப்பாடுகளை எழுப்புகிறது.
ஆனால் வரலாற்று ஆய்வாளர்கள் இந்தக் கருத்துக்களை எல்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை.
கோவிலில் காணப்படும் கல்தொட்டி, மிகப்பெரிய நந்தி சிலை வைப்பதற்காகக் கட்டப்பட்ட மேடையாக இருக்கலாம் என்பது அவர்களது கருத்து.
கி.பி. 961-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கோவிலின் 3-வது அடுக்கு உச்சியில் 110 அடி சதுர மேடை உள்ளது. அதில் 5 கோபுரங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
இவற்றில் தென் மேற்கே லட்சுமி, தென் கிழக்கே விஷ்ணு, வட மேற்கே பார்வதி, வட கிழக்கே சிவன் ஆகியோர் உருவங்கள் உள்ளன.
தென் மேற்கே உள்ள கோபுரத்தில் 4 தலை, 4 கரங்களுடன் பிரம்மாவின் மனைவி உருவம் காணப்படுவது வித்தியாசமாக உள்ளது.
ஹிரண்யகசிபுவை நரசிம்மர் வதை செய்யும் அழகிய சிற்பமும் இந்தக்கோவிலில் இருக்கிறது.
கோவில் கோபுரம் செங்கல்லால் கட்டப்பட்டு இருக்கிறது. இதற்குப் பயன்படுத்திய சாந்துப்பூச்சு, செடி கொடிகளால் தயாரானவை ஆகும். அந்தக் கலவை செய்யப்பட்டது எப்படி என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
அந்த செங்கல் மீதே அழகிய சிற்ப வேலைப்பாடுகளும் செய்து இருப்பது வியக்க வைக்கிறது.
கம்போடியாவில் பல மன்னர்கள் கட்டிய கோவில்கள் பல நூற்றாண்டுகளைக் கடந்த பின்னரும் அப்படியே இருக்கும் நிலையில், மன்னர்களின் அரண்மனை ஒன்று கூட அங்கே காணப்படவில்லை.
ஆனால், ஒரே ஒரு அரண்மனை பற்றிய சுவடுகள் மட்டும் ஒரு கோவிலுடன் இருப்பது தெரியவந்துள்ளது.
அது பற்றிய விவரத்தை அடுத்துப் பார்க்கலாம்.
(ஆச்சரியம் தொடரும்)