சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த மாவேலிபாளையம் அருகே கடந்த 3-ந் தேதி நள்ளிரவு அடுத்தடுத்து சில எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணம் செய்த 10 பெண்களிடம் 30 பவுன் நகையை பறித்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கும், அதை தடுப்பதற்கும் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். போலீசார் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால் சந்தேகப்படும் நபர்கள் மீது அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மக்கள் உஷார் நிலையில் இருந்தால்தான் இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும்.
1995-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 24 கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன. அனைத்து சம்பவங்களிலும் போலீசார் தீவிர விசாரணை எடுத்து இருந்தாலும் துப்பு கிடைக்காமல் இருந்தது. 2005-ம் ஆண்டு கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. சுதர்சன் சில கும்பலால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த சிலரும் தாக்கப்பட்டனர்.
வீட்டில் இருந்த பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன. அப்போது நான் வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்தேன். இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினோம்.அப்போது சம்பவ இடத்தில் இருந்து சில துப்பாக்கி தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன. அந்த மாதிரி தோட்டாக்களை இதற்கு முன்பு இங்கு யாரும் பயன்படுத்தாதது தெரியவந்தது. கொள்ளையர்களின் தோற்றமும் மாறுபட்டதாக இருந்ததாக தெரிய வந்தது. அவர்களின் கைரேகை இங்குள்ள பழைய குற்றவாளிகளின் கைரேகையுடன் ஒத்துப் போகவில்லை. அதனால் தமிழ்நாட்டுக்கு வெளியில் இருந்தவர்கள் தான் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டு இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தோம்.
முதலில் ஆந்திர மாநிலம் நகரியிலும் பின்னர் கர்நாடகா, மராட்டியம், மத்திய பிரதேசம் மாநிலங்களுக்கு சென்றும் விசாரணை நடத்தினோம். போலீஸ் அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தி,அங்குள்ள தஸ்தாவேஜுகளை பார்த்தோம். பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரபிரதேசம், அரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் விசாரணையை தொடர்ந்தோம். அப்போது வடமாநில கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த பார்டீ, ஷேக்பங்களா, பவாரியா கும்பலைச் சேர்ந்தவர்கள்தான் இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
பார்டீ, ஷேர்பங்களா கும்பலைச் சேர்ந்தவர்கள் குற்றச் செயல்கள் வித்தியாசமாக இருக்கும். வீட்டில் கொள்ளையடிக்கும் போது அங்கு இருக்கும் பெண்களை கற்பழித்து விடுவர். தமிழ்நாட்டில் நடந்த 24 சம்பவங்களிலும் எந்த பெண்ணும் கற்பழிக்கப்படவில்லை. இதை வைத்து இங்கு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் பவாரியா கோஷ்டியினராகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். பவாரியா கும்பலைச் சேர்ந்தவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜ்புத் ராணுவப் பிரிவில் தரைப்படையில் ராணுவ வீரர்களாக பணியாற்றியவர்கள்.
1526-ம் ஆண்டு கணுவா பகுதியில் பாபருக்கும், ராஜஸ்தான் மன்னர் ராணாசிங்குக்கும் இடையே நடந்த போரில் பாபர் வெற்றி பெற்றார். ராஜ்புத் படையில் இருந்த பவாரியாக்கள் அங்கிருந்து தப்பிப்பதற்காக அருகில் உள்ள மலைப்பள்ளத்தாக்குகளில் சென்று பதுங்கி கொண்டனர். பல மாதங்களாக அவர்கள் வெளியே வர முடியவில்லை. தொழில் இல்லாமலும், சாப்பாட்டுக்கு வழி இல்லாமலும் வேறு வழி இன்றி நெடுஞ்சாலையில் நடந்து செல்பவர்களிடம் கொள்ளையடித்துள்ளனர்.
பின்னர் கொள்ளைக்காரர்களாக மாறி விட்டனர். இப்போது இந்த சமூகத்தை சேர்ந்த நிறையபேர் படித்துள்ளனர். அரசு வேலையிலும் உள்ளனர். இந்த பவாரியா கும்பலைச் சேர்ந்தவர்கள் 1000 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து வந்து கொள்ளையடிப்பார்கள். லாரியின் கீழ் தார்பாயை விரித்து படுத்துவிடுவார்கள். தமிழ்நாட்டு குற்றச் சம்பவங்களில் பவாரியா கும்பல்தான் ஈடுபட்டதை உறுதி செய்துகொண்டதும் அவர்களை தேடி எங்கள் பயணம் தொடர்ந்தது.
வடமாநிலங்களில் குற்றவாளிகளின் கைரேகையை பதிவு செய்து வைத்து இருக்கமாட்டார்கள். ஆனால் டெல்லியில் ஆக்ரா ஜெயிலில் குற்றவாளிகள் வரும்போதும், திரும்பி செல்லும்போதும் விரல் ரேகையை பதிவு செய்வார்கள். இதனால் எங்கள் தனிப்படையினர் 4 பிரிவுகளாக பிரிந்து ஆக்ரா ஜெயில், அரியானாஅம்பாலா ஜெயில், ராஜஸ்தான் ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலை, டெல்லி திகார் ஜெயில்களில் சோதனை நடத்தினோம்.
அப்போது ஆக்ரா ஜெயிலில் பதிவாகி இருந்த ஒரு குற்றவாளியின் கைரேகை தமிழகத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையனின் ( 1997-ல் ரிக்கார்டில் பதிவாகி இருந்தது) கைரேகையுடன் ஒத்து இருந்ததை கைரேகை நிபுணர் தனஞ்செயன் கண்டுபிடித்தார். அவன் பெயர் லட்சுமண் பவுரியா. ராஜஸ்தான் மாநிலம் கணுவா என்ற இடத்தில் அவனை கைது செய்தோம். அரியானாவில் சில தஸ்தாவேஜுகளின் அடிப்படையில் சிலரையும், பஞ்சாப், உ.பி.யில் இருவரையும் மொத்தம் 15 பேரை கைது செய்தோம்.
உ.பி.யில் மீரட் என்ற இடத்தில் 2 பேர் என்கவுண்ட்டரில் பலியானார்கள். மீதி உள்ள 13 பேரை தமிழகத்துக்கு அழைத்து வந்தோம். அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததில் 2 பேருக்கு தூக்குத் தண்டனையும், மீதமுள்ள சிலருக்கு ஆயுள் தண்டனையும் கிடைத்தது. இந்த கும்பலின் தலைவன் ஒமா பவாரியா சிறையில் இருந்தபோது இறந்துபோனான்.
வடமாநில கொள்ளையர்களை அங்கு சென்று கைது செய்வதில் அதிக சவால் உள்ளது. மொழி பிரச்சினை, சாப்பாட்டு பிரச்சினை, பனி, குளிர் போன்ற பிரச்சினைகள் இருக்கும். நமது தமிழக போலீசாரின் வேலையை பார்த்து இப்படி வேலை செய்கிறார்களே என்று அங்குள்ளவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அது இந்த பிரிவுக்கு தலைமை தாங்கி அழைத்துச் சென்ற எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் ஆகும். இந்த சம்பவம் தொடர்பாக தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தீரன் அதிகாரம் என்ற பெயரில் சினிமாவாகவும் எடுத்து உள்ளனர்.
அதன்பிறகு சில வருடம் வடமாநில கொள்ளைக் கும்பல் கொட்டம் அடங்கி இருந்தது. மீண்டும் பீகார், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் கோவையில் நகைக்கடையில் கொள்ளையடித்தனர். மேலும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள், சென்னை வங்கியில் கொள்ளை, சேலத்தில் இருந்து சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் மேற்கூரையை பெயர்த்து ரூ.5.75 கோடி கொள்ளை சம்பவம் உள்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டனர். இந்த சம்பவங்களில் தமிழக போலீசார் திறமையாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்தனர். தற்போது வடமாநில கொள்ளையர்கள் தமிழ்நாட்டை மையமாக வைத்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள் என்று கூற முடியாது.
பிற மாநிலங்களிலும் குற்றச் செயல்களில் நடைபெறவில்லை என்று சொல்லமுடியாது. சமூகம் என்று இருந்தால் அங்கு குற்றச் செயல்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். உதாரணமாக திருச்சியில் உள்ள சில குற்றவாளிகள் டெல்லி, மும்பை போன்ற மாநிலங்களுக்கு சென்று கொள்ளையடித்த சம்பவங்களும் உண்டு.
தமிழ்நாட்டில் கொள்ளையடிக்கும் வடமாநில கும்பல் உடனடியாக அங்கு தப்பிச் சென்று விடுகின்றனர். நமது போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய செல்லும்போது மொழி பிரச்சினை மற்றும் உள்ளூர் போலீசார் ஒத்துழைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இது மாதிரி பிரச்சினைகளை தவிர்க்க தென் மாநில டி.ஜி.பி.க்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் குற்றவாளிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வாய்ப்பு வசதி ஏற்படும்.
- எஸ்.ஆர்.ஜாங்கிட் ஐ.பி.எஸ்., காவல்துறை இயக்குனர்.