புதுடெல்லி
பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ் எனும் பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான அன்னிய முதலீடு, டிசம்பர் மாதத்தில் முன்னேற்றம் கண்டு ரூ.79,513 கோடியாக உயர்ந்து இருக்கிறது.
அன்னிய நிதி நிறுவனங்கள்
பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியின் பதிவு பெற்ற அன்னிய நிதி நிறுவனங்கள் வழங்கும் பங்கேற்பு ஆவணங்கள் வாயிலாக உலக பெரும் பணக்காரர்கள், பாதுகாப்பு நிதியங்கள், இந்திய பங்குகள், கடன்பத்திரங்கள் மற்றும் முன்பேர வர்த்தக சந்தைகளில் முதலீடு செய்கின்றனர்.
பங்கேற்பு ஆவணங்கள் என்பது இந்திய பங்குகளை தம் வசம் வைத்திருக்கும் வெளிநாட்டு முதலீட்டு உபகரணங்கள் ஆகும். வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு, செபி அமைப்பில் பதிவு செய்து கொள்ளாமலேயே இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டு இருக்கும் பங்குகளை வாங்க இவை அனுமதி அளிக்கின்றன.
பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான அன்னிய முதலீடு நடப்பு நிதி ஆண்டின் முதல் மாதத்தில் (ஏப்ரல்) ரூ.1 லட்சம் கோடியாக இருந்தது. மே மாதத்தில் அது ரூ.93,497 கோடியாக குறைந்தது. ஜூன் மாதத்தில் ரூ.83,688 கோடியாக சரிவடைந்தது. ஜூலையில் ரூ.80,341 கோடியாக மேலும் குறைந்தது. அந்த நிலையில், புதிய திருப்பமாக ஆகஸ்டு மாதத்தில் இந்த முதலீடு ரூ.84,647 கோடியாக அதிகரித்தது.
ஆனால், செப்டம்பர் மாதத்தில் முதலீடு 9 மாதங்களில் இல்லாத அளவிற்கு ரூ.79,548 கோடியாக குறைந்தது. அக்டோபர் மாதத்தில் மேலும் சரிந்து ரூ.66,587 கோடியாக இருந்தது. அதற்கு முன் 2009 மார்ச் மாதத்தில்தான் இவ்வகை முதலீடு குறைந்தபட்சமாக ரூ.69,445 கோடியாக இருந்தது. நவம்பர் மாதத்தில் நல்ல முன்னேற்றமாக ரூ.79,247 கோடியாக அதிகரித்தது. இந்நிலையில், டிசம்பர் மாதத்தில் ரூ.79,513 கோடியாக மேலும் உயர்ந்துள்ளது.
டிசம்பர் மாதத்தில், பங்கேற்பு ஆவணங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மொத்த அன்னிய முதலீட்டில் பங்குகளின் பங்கு மட்டும் ரூ.56,747 கோடியாகும். மீத முதலீடு கடன் மற்றும் முன்பேர வணிக சந்தைகளில் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், மொத்த அன்னிய முதலீட்டில் பங்கேற்பு ஆவணங்களின் பங்கு, நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது மாற்றம் இன்றி 2.5 சதவீதமாக இருக்கிறது.
பொற்காலம்
பங்கு வர்த்தகத்தின் பொற்காலம் என்று கருதப்படும் 2007-ஆம் ஆண்டின் சில மாதங்களில், அன்னிய முதலீட்டாளர்களின் மொத்த முதலீட்டில் பங்கேற்பு ஆவணங்களின் பங்கு 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. 2008-ஆம் ஆண்டில் 25-40 சதவீதமாகவும், 2009-ஆண்டில் 15-20 சதவீதமாகவும் குறைந்தது. அதன் பிறகு தொடர்ந்து இந்த முதலீடு சரிந்து வருகிறது.