சில மருந்தகங்கள் சலுகை விலையில் மருந்துகள் வழங்குகின்றன. அத்தகைய மருந்தகங்களில் தனித்துவமாக தெரிகிறது, ஜன் சேவா பார்மஸி. மேற்கு டெல்லியிலுள்ள பஞ்சாபி பாக் பகுதியில் அமைந்திருக்கும் இந்த மருந்தகத்தில் 85 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனை 7 நண்பர்கள் ஒன்று சேர்ந்து ஏழை களுக்கு உதவும் விதத்தில் தொடங்கி இருக்கிறார்கள். தள்ளுபடி வழங்கினாலும் தங்களுக்கு நஷ்டமே ஏற்படவில்லை என்றும் சொல்கிறார்கள். ஏழை மக்களின் மருத்துவ செலவை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் சேவை மனப்பான்மையுடன் லாபநோக்கமின்றி இயங்குவதாக கூறுகிறார்கள்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்த மருந்தகத்தில் நான்கரை லட்சம் பேர் மருந்து வாங்கி பயனடைந்திருக் கிறார்கள். அதன் மூலம் 10 கோடி ரூபாய் வரை ஏழை மக்களின் மருத்துவ செலவில் சேமிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார், மருந்தகத்தை நிர்வகிப்பவர்களில் ஒருவரான மகேந்திர குப்தா. மேலும் தொடர்ந்தவர், எங்கள் மருந்தகத்தில் அனைத்து வகையான மருந்துகளையும் இருப்பு வைத்திருக்கிறோம். மருந்து உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்கிறோம்.
அதனால் மொத்த விலை கடைக்காரர்களை விட கூடுதலாக தள்ளுபடி விலையில் கொடுக்க முடிகிறது. தினமும் குறைந்தபட்சம் 500 பேர் மருந்து வாங்கி செல்கிறார்கள். குருகிராம், நொய்டா, காசியாபாத் போன்ற தொலைதூர பகுதியில் இருந்தும் மருந்து வாங்கி செல்கிறார்கள். நிறைய பேர் ஒரு மாதத்திற்கு தேவையான மருந்துகளை மொத்தமாக வாங்குகிறார்கள். அதன் மூலம் மருத்துவ செலவும் குறைகிறது. நாங்கள் லாபத்தை எதிர்பார்க்காமல் சேவையாகவே செய்கிறோம். கடையில் வேலை பார்ப்பவர்களுக்கும் சம்பளம் வழங்கிவிடுகிறோம் என்கிறார்.
இந்த மருந்தகத்துக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுபற்றி வழக்கமாக மருந்துவாங்கும் ஹிமன்ஷு என்பவர், மருந்து மாத்திரைகள் மட்டுமின்றி மருத்துவ பரிசோதனைகளையும் குறைந்த கட்டணத்தில் மேற்கொள்கிறார்கள். வெளி இடங்களில் குறிப்பிட்ட மருத்துவ பரிசோதனைக்கு 1200 ரூபாய் ஆகுமென்றால் இங்கு 480 ரூபாயில் பரிசோதனை செய்துவிடலாம் என்கிறார்.