உடல் எடையை குறைப்பதற்கு பலரும் உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு உள்ளிட்ட பல வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள். அக்குபிரஷர் முறையை போல் உடலில் அமைந்திருக்கும் புள்ளிகளில் அழுத்தி மசாஜ் செய்வதன் மூலம் நல்ல மாற்றத்தை உணரலாம். ஏராளமான உடல் நல நன்மைகளையும் பெறலாம். மருத்துவ நிபுணரின் ஆலோசனையின் பேரில் இதை செய்வது அவசியம்.
1. மேல் உதடு: உதட்டுக்கும் மூக்குக்கும் இடைப்பட்ட பகுதியின் நடுவே விரலை அழுத்தி வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். அப்படி அழுத்துவதன் மூலம் பசி உணர்வை குறைக்க முடியும். மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த முடியும். ஏனெனில் மன அழுத்தமும் எடை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்திருக்கிறது. இந்த புள்ளியில் அழுத்தி ஐந்து நிமிடங்களை வரை தினமும் இரண்டு முறை செய்து வரலாம். அதன் மூலம் எடையை குறைக்கும் செயல்முறையில் மாற்றத்தை உணரலாம்.
2. முழங்கை: முழங்கையின் உள் பகுதியில் மடக்கும் இடத்திற்கு சற்று கீழே கைவிரலை அழுத்தி ஒரு நிமிடம் வரை மசாஜ் செய்ய வேண்டும். அப்படி செய்வது உடல் வெப்பத்தை கட்டுப்படுத்த உதவும். குடல் இயக்க செயல்பாடுகளையும் ஊக்குவிக்கும். இந்த வழியாகத்தான் உடலின் அனைத்து சக்திகளும் கடத்தப்படுகிறது. அதனை ஒழுங்குபடுத்தவும் உதவும்.
3. முழங்கால்: முழங்காலுக்கு கீழ் பகுதியில் இருக்கும் இந்த புள்ளி ஜு சான் லி என்றும் அழைக்கப்படுகிறது. இது மிகவும் சக்திவாய்ந்த புள்ளி. செரிமானத்திற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், அழற்சி பிரச்சினைகளை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. இரவில் தூங்க செல்வதற்கு முன்பு சுமார் 10 நிமிடங்கள் கடிகார சுழற்சி திசையில் மசாஜ் செய்து வரலாம். தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கு இந்த மசாஜ் சிறந்த தீர்வை வழங்கும்.
4. அடி வயிறு: தொப்புளில் இருந்து 3 செ.மீ.க்கு கீழே இந்த புள்ளி அமைந்திருக்கும். தினமும் இரண்டு முறை சுமார் இரண்டு நிமிடங்கள் வரை இந்த புள்ளியில் விரலை வைத்து அழுத்தி மேலும், கீழும் நகர்த்தி மசாஜ் செய்து வரலாம். செரிமானத்தை அதிகரிக்க செய்யும். உடல் எடையை வேகமாக குறைக்கவும் உதவும்.
5. காது: காதுக்கு அருகில் கட்டை விரலை அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். தினமும் மூன்று முறை மூன்று நிமிடங்கள் வரை செய்து வரலாம். இது வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதோடு எடை குறை வதற்கும் வழி வகுக்கும்.
6. கணுக்கால்: கணுக்கால் மூட்டில் இருந்து இரண்டு செ.மீ.க்கு மேலே இந்த புள்ளி அமைந்திருக்கும். இந்த புள்ளியில் மசாஜ் செய்வதால் மண்ணீரல் மற்றும் செரிமான மண்டலம் வலுப்பெறும். கட்டை விரலை அழுத்தி ஒரு நிமிடம் அளவு மசாஜ் செய்து வந்தாலே போதுமானது. தினமும் இந்த மசாஜ் செய்து வந்தால் நல்ல மாற்றத்தை உணரலாம்.
7. வயிறு: இந்த புள்ளி வயிற்றுக்கு மேல் கடைசி விலா எலும்பு பகுதியில் அமைந்திருக்கும். அஜீரணம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது. வயிற்றின் மேல் இரு பக்கமும் விலா எலும்பு பகுதியில் அழுத்தம் கொடுத்து ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்து வரலாம். அஜீரணம், விலா எலும்புகளில் வலி, புண்கள் மற்றும் பசியின்மை பிரச்சினைகளை போக்கக்கூடியது.
மருத்துவ நிபுணரின் ஆலோசனையின் பேரில் இந்த ஏழு புள்ளிகளை அழுத்தி மசாஜ் செய்து வருவதன் மூலம் உடல் எடையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை காணலாம்.