சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துகொண்டே செல்கிறது. இதனால், குடிநீர், விவசாயம், கட்டுமானம் உள்ளிட்ட பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இத்தகைய தண்ணீர் பற்றாக்குறையையும் தாண்டி, கிடைக்கும் தண்ணீரை குடித்தாலும் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துதல் உள்பட வேறு பல பிரச்சினைகள் இருப்பதாக தண்ணீர் குறித்த ஆய்வு பயம் காட்டுகிறது. ஆழ்குழாய் கிணறு அமைத்து அதன்மூலம் வெளிக்கொணரப்படும் தண்ணீரை ஆய்வு செய்து அதில் குடிநீருக்கான தகுதி இருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். கட்டிடம் கட்டும் போது கட்டுமானத்துக்கு ஆழ்குழாய் நீர் உகந்ததா? என்பதையும் சோதித்துக் கொள்ள வேண்டும் என்பதை அரசு கட்டாயமாக்கி உள்ளது.
தண்ணீரில் உப்புத்தன்மை குறைந்தாலும், மிகுதியாக இருந்தாலும் நீரில் கரைந்துள்ள நுண்பொருட்களின் தன்மையும் மாறுகிறது. அவ்வாறு மாறுதலுக்குள்ளான தண்ணீரை குடிப்பதால்தான் உடல்நலத்துக்கு கேடு ஏற்படுகிறது. மழை பெய்து நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்தால் தான் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மழை அளவு குறைந்துள்ளதால் மழைநீரை நிலத்தில் செறிவூட்டுவதற்கு மழைநீர் சேகரிப்புதான் மாற்று நடவடிக்கையாகும்.
தண்ணீர் அதிகரித்தால் மனிதன் நோயின்றி வாழலாம். தண்ணீர் குறைந்தால் அதன் பற்றாக்குறையோடு நோய்களையும் சுமக்க வேண்டிவரும். எனவே, அனைவரும் மழைநீரை சேகரிப்பதும் நீர்த்தேக்கப் பகுதிகளை பாதுகாப்பதும் அவசியம் என்பதை உணர வேண்டும்.