இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
ஏலமுறை விற்பனை
மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்சு மற்றும் பவர் எக்ஸ்சேஞ்சு ஆப் இந்தியா ஆகிய இரண்டு மின் சந்தைகள் ஒவ்வொரு மாதமும் இறுதி புதன்கிழமை அன்று புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சான்றிதழ்களை ஏலமுறையில் விற்பனை செய்கின்றன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் பொறுப்பு விதிமுறையை பூர்த்தி செய்யும் வகையில் மின் விநியோக நிறுவனங்கள் உள்பட சில குறிப்பிட்ட நுகர்வோர்கள் இந்த சான்றிதழ்களை வாங்க வேண்டும்.
கடந்த 25-ந் தேதி (புதன்கிழமை) விடுமுறை என்பதால் வியாழக்கிழமை அன்று ஏலம் நடைபெற்றது. அந்த ஏலத்தில் மொத்தம் 5.04 லட்சம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சான்றிதழ்கள் விற்பனை ஆகி உள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 5.59 லட்சமாக இருந்தது. ஆக, விற்பனை 10 சதவீதம் குறைந்து இருக்கிறது.
இதில் இந்தியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்சில் (ஐ.இ.எக்ஸ்) 3.6 லட்சம் சான்றிதழ்களும், பவர் எக்ஸ்சேஞ்சு ஆப் இந்தியாவில் (பி.எக்ஸ்.ஐ.எல்) 1.44 லட்சம் சான்றிதழ்களும் விற்பனை ஆகி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் இந்த சந்தைகளில் முறையே 3.83 லட்சம் மற்றும் 1.76 லட்சம் சான்றிதழ்கள் விற்பனை ஆகி இருந்தது.
மின் உற்பத்தி
மின் உற்பத்தி துறையை பொறுத்தவரை நிலக்கரியை எரிக்காமல், புகை வெளியிடாமல், சாம்பலை குவிக்காமல் மின்சாரத்தை உற்பத்தி செய்வதே பசுமை ஆகும். பாரம்பரிய முறைகளை தவிர்த்து சூரியசக்தி, காற்று, நீர் போன்ற இயற்கை வளங்கள் வாயிலாக பெறும் மின்சாரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி எனப்படுகிறது.