சிறப்புக் கட்டுரைகள்

சங்க இலக்கியம்- புறநானூறு : தேடுவதை நிறுத்து, வேண்டியது கிடைக்கும்

சிறந்த நாகரிக வாழ்க்கையை வாழ்ந்திட்ட தமிழர்களின் ஆகச்சிறந்த தொன்மைப் படைப்புதான் சங்க இலக்கியப் பாடல்கள்.

தினத்தந்தி

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;

தீதும் நன்றும் பிறர் தர வாரா;

நோதலும் தணிதலும் அவற்றோரன்ன;

சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்

இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்

இன்னாது என்றலும் இலமே; மின்னொடு

வானம் தண் துளி தலைஇ ஆனாது

கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று

நீர் வழிப்படூஉம் புணை போல், ஆர் உயிர்

முறை வழிப்படூஉம் என்பது திறவோர்

காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம் 192)

பாடியவர்: கணியன் பூங்குன்றனார்

திணை: பொதுவியல்

துறை: பொருண்மொழிக்காஞ்சி

பொருள் விளக்கம்:

எல்லா ஊரும் எம் ஊர், எல்லா மக்களும் எம் உறவினரே

நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை

துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை

சாதல் புதுமை யில்லை; வாழ்தல்

இன்பமென்று மகிழ்ந்தது இல்லை

வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை

பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல

இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று

தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்

ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்

சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை

பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.

சிறந்த நாகரிக வாழ்க்கையை வாழ்ந்திட்ட தமிழர்களின் ஆகச்சிறந்த தொன்மைப் படைப்புதான் சங்க இலக்கியப் பாடல்கள். பண்டைய காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் தங்கள் உயர்ந்த கற்பனையை, விழுமிய உணர்ச்சியை, அழகிய வடிவமைப்பைக் கொண்டு படிப்பவரைப் பரவசப்படுத்தி கசிந்துருகச் செய்யும் செய்யுள் வடிவம்தான் சங்க இலக்கியப் பாடல். சங்ககாலப் பாடல்களின் வரிசையில் ஈராயிரம் ஆண்டு மாண்பை விவரிக்கின்றார் கணியன் பூங்குன்றனார்.

ஐ.நா. மன்றத்தின் வாயிலில் இடம் பெற்றுள்ள பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய இந்த புகழ் வரிகள் ஈராயிரம் ஆண்டு பழமையை மீட்டெடுத்திருக்கிறது. இது தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கிடைத்த பெரும் பேறு. கணியன் பூங்குன்றனார் எழுதிய இந்தப் பாடல் வரிகள், ஈராயிரம் ஆண்டு கடந்தும், இதற்கு உயிரோட்டம் இருக்கிறது என்று சொன்னால், பாடலில் நிலவும் சத்தியமும், சமாதானமுமே சாட்சியாக நிற்கிறது.

செழுமையான வாழ்க்கையை நமக்கு செதுக்கித் தந்து, சாலையோரத்து மரங்களில் இருந்து சமவெளிகளில் பாய்ந்திடும் ஆறுகள் வரை முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றிருக்கின்ற இயற்கையின் நன்கொடைகளாகும். அத்தகைய பெருமைக்குரிய நிகழ்வுகளை இப்பாடல் நமக்கு நினைவுபடுத்துகிறது.

எல்லா ஊரும் நம் ஊரே, எல்லா மக்களும் நமது உறவினரே என்கிற இந்த வார்த்தைகளில் சண்டை இல்லை, சச்சரவும் இல்லை, வம்பும் இல்லை, வழக்கும் இல்லை. சமாதானத்தின் சமவெளியில் பாய்ந்தோடும் நீரோட்டக் கவிதைகள் இவைகள். ஆகவே, உலகம் முழுவதும் இருக்கிற மக்கள் அமைதியையே நாடுகிறார்கள் என்பதற்கு இந்த ஒற்றை வரி, ஈராயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்னும் வாழ்கிறது என்பதற்கு அவையே சாட்சியாக இருக்கிறது.

அதைப் போலவே, நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை. நமக்கு ஏற்படுகிற நன்மை, நாம் வித்திடுகிற எண்ணத்தின் விதையே விளைச்சலாக முளைக்கிறது. நமக்கு ஏற்படுகிற துயரம் அதற்கு நாமே துன்ப யாழ் எடுத்து மீட்டுகிறோம் என்பதில் இருந்து நமக்கான துன்பமும், நன்மையும் நமக்கு நாமே செய்து கொள்வதுதான். பிறர் தருவது இல்லை எனத் திட்டவட்டமாக இந்த உலகுக்குப் பறை சாற்றுகிறது இப்பாடல்.

பாதைகள் சரியாக இருந்தால், பயணங்களும் சரியாக இருக்கும். பள்ளங்கள் சரியாக இருந்தால், தண்ணீர் வருவதற்கு தகராறு செய்யாது என்கிற ஊற்றுக்கண்ணை இந்தப் பாடல் வரிகளே திறந்து விடுகிறது. துன்பமும், ஆறுதலும் கூட மற்றவர் தருவதில்லை. ஆறுதல் நமக்கு நாமே தேற்றிக் கொள்வது. நாம் சரியாக இல்லாத போது, நிச்சயம் பாதைகள் தவறாகப் போய்விடும். நம்முடைய ஆறுதலை நாம்தான் தேடிக் கண்டடைய வேண்டும்.

வாழ்தல் இன்பம் என்று மகிழ்ந்ததும் இல்லை, சாதல் புதுமையும் இல்லை என்பதன் மூலம் சமநிலையான வாழ்க்கையை நாம் தெரிந்து கொள்வதும், ஏற்ற, இறக்கத்தை நாம் மனதார ஏற்றுக் கொள்வதும், சங்க இலக்கியம் நமக்கு சொல்லித் தருகிற பாடங் களாகும். சிறியவரை இகழ்ந்து தூற்றாது இருப்பதும், பெரியோரை வியந்து போற்றாதிருப்பதும், எல்லோரும் ஒரு நிலைதான் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை தொன்மைப் பாவலன் கணியன் பூங்குன்றனார் பாட்டு வரிகளில் பைந்தமிழ் வாழ்வியலை நமக்குக் கற்றுத் தந்துவிட்டுப் போயிருக்கிறார்.

மின்னல் மின்னி மழை பெய்து கற்களில் உருண்டு செல்லும் ஆற்று வெள்ளம் போல் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை தெளிவாகத் தெரிந்து கொள்ள இப்பாடல் பளிங்கு போன்ற வெளிச்சப் பாதையை நமக்குத் தருகின்றது.

நம்பிக்கைகளை நாம் எப்போதும் தொலைத்து விடக் கூடாது. ஆடம்பரம் என்பது போலியான வறுமை. மனநிறைவு என்பதே வற்றாத செல்வம். ஆசையின் வேட்கையை அடக்கவும் முடியாது, அதைப்போல தீர்த்து வைக்கவும் முடியாது. இன்பம் பெரும்பாலும் தேடும் இடத்தில் கிடைப்பதில்லை. தேடுவதை நிறுத்து, வேண்டியது கிடைக்கும்.

பேச்சும், நடத்தையும் வாழ்க்கை வயலில் தூவி விடும் விதைகளே!. தீமையை விதைத்து, நன்மையை அறுவடை செய்ய முடியாது. முள்ளை விதைத்து தானியத்தைப் பெற முடியாது. வீசுகின்ற வாசனையைப் பொறுத்துத்தான் மனிதர்கள் மதிக்கப்படுகிறார்கள். சுவாசத்தைக் கவனியுங்கள், ஆயுள் கூடும். செயலைக் கவனியுங்கள், நிதானம் கூடும். எண்ணங்களைக் கவனியுங்கள், நம்முடைய மதிப்புக் கூடும். எல்லோருடைய இதயங்களும் ஒரே அளவில்தான் இருக்கிறது. ஆனால், எல்லோர் இதயங்களிலும் கருணைதான் ஒரே அளவில் இருப்பதில்லை.

உலகமே ஒரு குடைக்குள் அடங்கி இருக்கிறது. நாடுகளைத்தாண்டி, கண்டங்களைத்தாண்டி வாழ்க்கையின் தேடுதலுக்கான பல்வேறு பயணங்கள் உருவாகிவிட்டன. யாருக்கு நுண்ணறிவு இருக்கிறதோ அவர்களுக்கு அத்தனை நாடுகளும் வாசல்களை திறந்து வைத்திருக்கின்றன. அப்படிச்செல்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைத்தான் இப்பாடல் தெளிவுபடுத்துகின்றது.

வெளிநாடுகளில் பணிபுரியச் செல்பவர்கள் தன்னுடைய நாட்டோடு அந்த நாட்டை ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது. அவர்களைப் பெரியவர்கள் என்று நினைத்தால் தாழ்வு மனப்பான்மை வந்து நம்மை விடாது துன்புறுத்தும். சிறியவர்கள் என்று நினைத்தால் அவர்களுக்குக் கோபம் வந்து நம்மை பகைக்கு உரியவராக மாற்றி விடும். தன்னம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே வாழ்வினை எதிர்கொள்வார்கள். அப்படிப்பட்டவர்களே எல்லோரோடும் இயல்பாகப் பழகுவார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது.

தேடுதல், வணிகம், தொழில் முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகள் என்பதற்கு மட்டும்தானா?, இல்லை வாழ்க்கையில் ஒவ்வொருவரும் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது இந்தப்பாடல். முழுமையாகப் படித்தால் மகிழ்ச்சிபொங்கும். இப்பூவுலகில் வாழும் மக்கள் எல்லோரும் நம் உறவினரே என்ற அற்புதச் சிந்தனை, தமிழன் உள்ளத்தில் மட்டும் தோன்றிய தனிப்பெரும் தத்துவமாகும். பல்வேறு காரணங்களுக்காகப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள், தாங்கள் வாழும் நாடுகளில் சட்டதிட்டங்களை மதித்துப் போற்றி அந்தச் சூழலுக்கேற்ப தங்கள் தாய்மொழியையும் பண்பாட்டையும் மறக்காமல் பணிகளைச் செய்து வருகின்றனர்.

இப்பாடல் தமிழனின் பரந்த நோக்கை, பண்பை, மேன்மையைப் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது. மனிதம் என்கிற பொருள் உணர்த்தும் பண்பை முன்னரே கூறி வைத்து அதன் நெறிமுறைகளைப் பின்பற்றி வாழ்ந்தவன் தமிழன் என்பதற்கு இந்தப் பாடல் ஒன்றே சான்றாகத் திகழ்கிறது.

-தொடரும்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்