சிறப்புக் கட்டுரைகள்

சங்க இலக்கியம் : நற்றிணை ஓர் அறிமுகம்

சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக அமைந்துள்ள நற்றிணை என்னும் நூல் நல்லொழுக்கம் என்னும் பொருளில் அமைந்து, தனிப்பாடல் களாக பலராலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது. வெண்பாவினால் முதலிடம் பெற்றுத் திகழ்கிறது.

தினத்தந்தி

நல் என்னும் அடைமொழியினையும், நற்றிணை நானூறு என்னும் சிறப்புப் பெயரையும் கொண்டு ஆகச்சிறந்த நூலாக விளங்குகிறது.

9 அடி முதல் 12 அடிகள் வரையிலான 400 பாடல்களைக் கொண்டு அமைந்துள்ளது. இத்தகைய சிறப்புப் பெற்ற இந்நூலை தொகுத்த புலவரின் பெயர் இடம் பெறவில்லை. ஆனாலும், அரிய இலக்கியமாம் இந்நற்றிணையை தொகுத்தளித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி என்னும் புலவர் ஆவார்.

நற்றிணையில் அமைந்துள்ள பாடல்கள் யாவும் சுவைமிகு அகப்பொருள் பாடல்களாக இடம்பெற்றுள்ளது நெஞ்சினிக்கும் நிறைவு.

நற்றிணைப் பாடல்கள் அகப்பாடல்களாக இருப்பினும், அவற்றில் புறத்தின் கூறுகளாக மன்னர்கள், வள்ளல்கள், வீரர்கள் பற்றிய செய்திகளும் இடம் பெற்றுள்ளதால், காதலுடன் வீரமும் கலந்த கவிச்சுவை சிறப்பின் சிகரமாகிறது. அவர்கள் யாவரும் தம் நாட்டு மக்களுக்காக, எதிரி நாட்டுடன் போர் புரிந்து பொன், பொருள் எனப் பல பொருட்களைக் கைப்பற்றி ஏழை, எளியவர் களுக்குக் கொடையாகக் கொடுத்துத் தன் நாட்டையும், தம் மக்களையும் செழுமையுடனும், செம்மாந்த வளமையுடனும் வைத்திருந்தார்கள் என்பதைப் பாடல்களின் வாயிலாக நமக்குச் சொல்லித் தருகிறார்கள் புலவர் பெருமக்கள்.

மேலும், நற்றிணைப் பாடல்கள் அக்காலச் சமூகத்தை அறியப் பெரிதும் துணைபுரிகின்றன. மன்னர்களின் ஆட்சிச் சிறப்பும், கொடைத்தன்மையும், கல்வியாளர்களின் சிறப்பும், மக்களின் வாழ்க்கை முறையும், நம்பிக்கைகளையும், சடங்குகளையும், மனிதநேயத்தையும், செடிகளையும், கொடிகளையும், பறவை களையும், விலங்குகளையும் நேசித்து தன் அன்பை வெளிப்படுத்துகிற பாங்கைக் கொண்டவர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள் பண்டைய மன்னர்கள். குலத்தால் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்கிற ஏற்ற இறக்கம் பார்க்காமலும், சமயசார்பற்ற தன்மையையும், தன்னை நம்பி வந்தவர்களைக் கைவிடாதிருத்தலும், எடுத்துக் கொண்ட செயலை முடித்தே காட்டுகின்ற வீரத்தின் விளைநிலத்துக்கு இலக்கணமாகவும் விளங்கினர் என்பதை நற்றிணை அகப்பாடல்களில் பல்வேறு இடங்களில் இத்தகைய பெருமைகளைப்பற்றி பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பல்லி கத்தும் ஓசையை வைத்து சகுனம் பார்க்கும் வழக்கத்தை பின்பற்றியிருக்கிறார்கள். கால்பந்து விளையாட்டை பெண்களும் விளையாடியிருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரக் கூற்றுக்கள் இவற்றில் இடம்பெற்றிருக்கின்றன. பிற்காலத்தில் சிறந்து விளங்கிய தூது என்ற சிற்றிலக்கியத்திற்கு வழிகாட்டியாகக் குருகு (பறவை) கிளி, நாரை ஆகியவற்றைத் தூதுவிடும் பாங்கினையும் நற்றிணைப் பாடல்கள் வாயிலாக நிரம்பக் காணலாம். நற்றிணைப் பாடல்களை வாசிக்கும் போது, மனதில் ரீங்காரமிட்டு பறக்கும் பறவைகளின் சிறகுகளைப் பெற்று பறப்பதைப் போன்ற உணர்வுகள், நம் உள்ளத்தில் ஊடுருவும்.

நற்றிணையில் அகவாழ்வில் வரும் அகச்சிந்தனையின் பரிமாணம், புறவாழ்விலும் வெளிப்படுவது என்பது இயல்பான ஒன்றுதான். சிறந்ததொரு அக இலக்கியமான நற்றிணையில் ஆண், பெண் உறவுகளின் மேன்மைகளும், மென்மைகளும் பாத்திரப் படைப்புகளில் பற்றிப் படர்ந்து காதலாய் கசிந்துருகி ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்கின்ற இடங்கள் நிறைய உள்ளன. தலைவன் தலைவியாக, காதலன் காதலியாக, கணவன் மனைவியாக அன்பின் வயப்பட்டு வாழ்வின் திரும்பிய பக்கமெல்லாம் நெறி பிறழாத நிறை காதலை மையப் படுத்துகிறது இந்நூல்.

ஆணும் பெண்ணும் ஒருவர் மீது ஒருவர் காதல் வயப்பட்டிருந்தால் கைக்கிளை எனவும், இருவரும் ஒருவருக்கொருவர் காதல் பரிமாறி இல்வாழ்வு அமைப்பதை களவு எனவும், இருவரும் இணைந்து மணவாழ்வில் கலந்து மக்கள் பேறைப் பெற்று, விருந்தோம்பலில் சிறந்து விளங்கி, பொருளீட்டலில் வாழ்வை நிறைவு செய்து இறை அச்சத்தையும், வாழ்வின் மீதான உச்சத்தையும் தொடுவது கற்பு என்கிற நெறி சார்ந்த வாழ்வுதான் ஆதாரம் என்பதை நமக்கு பளிச்சென படம் பிடித்துக் காட்டினர்.

சங்ககாலத் தமிழர்கள் சாதி என்கிற கூட்டுக்குள் சிக்கி விடாமல், ஒருமைப்பாட்டு சமுதாயமாய் திகழ்ந்து மணவாழ்வில் கலந்து நிற்பதை பல காட்சிப் பாத்திரங்கள் நம் கண் முன்நின்று வியப்பு மேலோங்க விளக்குகின்றன. மணமான பின்பு கருத்தொற்றுமைப்பட்டு வாழ்க்கை நெறி பிறழாமல் வாழ்வதே கற்பு நெறி கொண்ட வாழ்வின் அடிப்படைக் கூறுகளாகும். இத்தகைய வாழ்வே பெருவாழ்வாக மலர்ந்து மணவாழ்க்கைக்கு செம்மையுறுகிற கீர்த்தியைப் பெற்றுத் தருகிறது. இதன் வாயிலாக அறம் வளர்கிறது. இன்பம் கிளை விட்டுப் பரவுகிறது. ஒன்றிய உணர்வும், ஒத்த கருத்தும் இல்லற வாழ்வின் அடித்தளம் என்பதை எடுத்துச் சொல்கிற சங்கப் புலவர்களின் பாடல்கள் நற்றிணையின் வாயிலாக நிறைந்து வழிகிறது.

காதலாய் கண்ணீர் மல்கி கசிந்து உருகுகிற, காதல் தேரில் ஏறி பவனி செல்லும் காதல் பாடல்களை நில ஊறித் ததும்பும் கண்களாய் காதல் வயப்படுகிறது. இக்காதல் ஒழுக்க நிகழ்வுகளை நமது முப்பாட்டன் தமிழ்ச் சான்றோன், அன்பினால் புணர்தல், அன்புடன் பிரிதல், கூடியும் பிரிந்தும் அன்புடன் இருத்தல், கூடி இருந்தால் அன்பால் ஊடுதல், பிரிந்திருந்தால் அன்பினால் இரங்கல் என ஐந்தாக வகுத்து இவை ஒவ்வொன்றையும் அடிப்படையாகக் கொண்டு அகப்பாடல்களாகப் பாடினர். அகப்பாடல் களுக்கு இவை ஐந்தும் உரிப்பொருள் எனப்பட்டன. பெரும்பிரிவுகளைத் திணை எனக் கூறும் தமிழ் மரபின் படி அன்பின் ஐந்திணைப் பெயர் எனக் குறிக்கப்பட்டுள்ளது.

சங்கத் தமிழர்கள் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்கிற பாகுபாட்டை உடைத்தெறிந்திருக்கிறார்கள். சமுதாயத்தின் ஒற்றுமையைப் பேணி வளர்த்தெடுத்திருக்கிறார்கள். ஒற்றுமை சமுதாயத்தில் ஆணும், பெண்ணும் மணவாழ்வின் ஒழுக்க நெறிகளை வரையறுத்து மகிழ்ந்திருக்கிறார்கள். மணவாழ்வின் இன்பம் என்பது இருவர் உள்ளம் ஒன்றாகக் கலந்து காதலால் அன்பின் நெருக்கத்தையும், அரவணைப்பின் குறுக்கத்தையும் பல்வேறு பாடல்கள் வெளிப்படுத்தி இருக்கின்றன.

நீரின்றமையாவுலகு, பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர், விருந்தோம்பல் போன்ற வள்ளுவப் பேராசானின் கருத்துகள் பலவற்றிற்கு நற்றிணைப் பாடல்களே ஆதாரமாக இருக்கின்றன. அத்துடன் உவமைத்திறம், உள்ளுறை, இறைச்சிப் பொருள்களின் அமைப்பு என இலக்கியச் சுவையும் மிகுந்ததாக நற்றிணைப் பாடல்கள் திகழ்கின்றன.

தாவரங்களுக்கு ஓர் அறிவாகிய தொடு உணர்வு உண்டு என்பது தொல்காப்பியர் கூற்று. ஆனால் அதற்கு மேலேயும், பேச்சுகளை உணரும் தன்மையும், சூழலை உணரும் தன்மையும், செயல்களை உணரும் தன்மையும் தாவரங்களுக்கு உண்டு என்கிறது நற்றிணை. அதனாலேயே நற்றிணைப் பெண் ஒருத்தி தாவரத்தைத் தன்னுடைய மூத்த சகோதரி என்கிறாள். உடன்பிறந்தோரையே உதறித்தள்ளும் இன்றையக் காலச்சூழலில், தன் தாய் வளர்த்த புன்னை மரத்தைத்கூடத் தன் உடன்பிறந்தோராக எண்ணும் உயரிய பண்பினை நற்றிணை காட்டும் பாங்கு ஆகச்சிறப்பு.

அரசிற்குப் பொருள் ஈட்டும் வழிகளில் ஒன்று வரிவிதித்தல் என்பது. இந்த வரிவிதித்தல், மக்களின் வாழ்க்கைத் தரத்தினைக் கருத்தில்கொண்டு அமைய வேண்டுமே அன்றி, அரசிற்கு வரும் வருவாயின் அளவைக் கணக்கில் கொண்டு அமைந்து விடுதல் கூடாது.

வருவாய் ஒன்றையே நோக்கமாகக் கொண்டால் அவ்வரசு நல்லரசாக அமையாது. மக்களும் நல்வாழ்வு வாழ முடியாது. இக்கருத்தை, மூலிகை மருத்துவத்தை மேற்கொள்ளும் மக்கள் மூலிகையைப் பறிக்கும்பொழுது மரமே இறந்துவிடும்படி வேரோடு பறிக்க மாட்டார், தவம் மேற்கொள்ளும் மக்கள் உயர்தவமே ஆயினும் தம் வலிமை முழுதும் கெட்டு உயிர் போகும் அளவிற்கு அதனை மேற்கொள்ள மாட்டார் அதுபோல, நல்லாட்சி செய்யும் மன்னர் குடிமக்கள் வளம் கெட்டு வருந்தும்படி வரி வாங்க மாட்டார் என்கிறது நற்றிணை.

மரங்களையும், விலங்குகளையும் உடன் பிறந்தோராகவும், பிள்ளைகளாகவும் எண்ணிப் போற்றிய காரணத்தால்தான், தென்னை மரத்திற்குத் தென்னம்பிள்ளை என்றும் அணிலுக்கு அணிற்பிள்ளை என்றும் கீரிக்குக் கீரிப்பிள்ளை என்றும் பெயர்களை வைத்தனர் தமிழர். மேலும், உயிரிரக்கம் என்பது அனைத்து உயிர்களிடத்தும் இரக்கம் கொள்வதுதானே. அதனால்தான் பழந்தமிழர் பறவைகளிடத்தும் இரக்கம் கொண்டிருந்தனர். பறவைகளுக்கும் கருணை காட்டினர். இதனை நற்றிணைப் பாடல்களில் நன்றாகவே அறியலாம்.

-தொடரும்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு