பங்குகளாக மாறாத கடன்பத்திரங்கள் என்பது கடன் சார்ந்த ஆவணங்கள் ஆகும். இந்த ஆவணங்களை பங்குகளாக மாற்ற இயலாது. இந்த கடன்பத்திரங்களுக்கு பொதுவாக அதிக வட்டி வருவாய் கிடைக்கிறது. எனவே முதலீட்டாளர்களில் பலர் இந்த வகை கடன்பத்திரங்களை வாங்க ஆர்வம் காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
நிறுவனங்கள் பொது வெளியீட்டில் இறங்கும்போது, தேவையான விவரங்களை பூர்த்தி செய்து ஆவண வடிவில் இந்த கடன்பத்திரங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் டீமேட் கணக்கு வாயிலாகவும் விண்ணப்பிக்க முடியும். பட்டியலிடப்பட்டு இருந்தால் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளிலும் வாங்கிக் கொள்ளலாம்.
இந்நிலையில், கடன் சார்ந்த முதலீட்டுத் திட்டம் ஒன்றின் மொத்த மதிப்பில் 10 சதவீதம் வரை, சந்தைகளில் பட்டியலிடப்படாத, பங்குகளாக மாறாத கடன்பத்திரங்களில் (என்.சி.டீ) பரஸ்பர நிதி துறையினர் படிப்படியாக முதலீடு செய்து கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது. முதலீட்டு வரம்பு 2020 மார்ச் 31 முதல் 15 சதவீதமாகவும், ஜூன் முதல் மீண்டும் 10 சதவீதமாகும் என்றும் செபி கூறி உள்ளது.