மனிதர்களின் செவிக்கு புலனாகாத அக ஒலி அலைகளை பரப்பி ஒன்றுக்கொன்று அவை பேசிக்கொண்டிருக்கின்றன. ஆங்காங்கே நிற்கும் யானைகள் எல்லாமே ஒரே நேரத்தில் தங்கள் காதுகளால் உன்னிப்பாக கவனித்துச் சில வினாடிகளுக்கு பிறகு ஒன்றன் பின் ஒன்றாக தங்கள் வழியை பின்பற்றி செல்வது, எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல் கண்ணுக்கெட்டாத தொலைவுக்கு ஓட்டமெடுப்பது போன்ற சம்பவங்கள் ஒரே நேரத்தில் நடக்கின்றன.
யானைகள் முணுமுணுத்தல், ஊதுதல், எக்காளமிடுதல், இருமுதல் ஆகிய ஒலிகளுடன் கமுக்கமான சத்தங்களையும் எழுப்புகின்றன. இந்த ஒலியை யானைகளால் மட்டுமே கேட்க முடியும். மனிதர்களால் கேட்க முடியாது. அதிர்வெண் மிகமிக குறைந்த இந்த ஓசையை, அகவொலி என்று கருதலாம். இடி சத்தத்தின் அதிர்வலைகளை போன்ற அகவொலிகளை யானைகள் மிக குறைவான அதிர்வு கொண்ட ஓசையாக வெளிப்படுத்துகின்றன. அவை காற்றில் கலந்து புல், புதர், மரங்களை கடந்து தொலைவில் இருக்கும் மற்ற யானைகளை சிதையாமல் சென்றடைந்து, தகவல் தொடர்பை ஏற்படுத்த வல்லதாய் இருக்கிறது.
வறட்சி நிலவும் காலங்களில் ஓடைகளின் நீரெல்லாம் சிறுசிறு பள்ளங்களில் அசையாது நிற்கும். தேடினாலும் பசுமை கிடைக்காது. இருந்தாலும் யானைகள் மட்டும் பிழைப்பதற்கான வழியை புரிந்து கொள்கின்றன. கடும் வறட்சியில் புதிய நீரூற்றுகளை கண்டறிதல், நீரைப் பருகுதல், அதனால் கிடைக்கும் திருப்தியைக்கூட அகவொலி மூலம் தொலைவிலுள்ள யானைகளுடன் ஒரு யானை பகிர்ந்துகொள்ளும்.
சில வேளைகளில் யானைகள் எல்லாமே தனித்தனியாக பிரிந்துவிடும். தனித்தனியாக திரிந்த 200 யானைகள் திடீரென ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்துப் போகும். எவ்வளவு தூரம்வரை சுற்றித் திரிய வேண்டும்? ஒரு குடும்பக் கூட்டம் ஒன்றன்பின் ஒன்றாக எப்படி வழியைப் பின்பற்ற வேண்டும் என்பது போன்ற சங்கதிகளை அகவொலி மூலமாகவே அவை கடத்துகின்றன.
சில நேரம் 5 கி.மீ. அல்லது அதற்கும் அப்பாற்பட்ட தொலைவில் உள்ள கூட்டங்கள், தண்ணீர் கிடைக்குமிடத்தை நோக்கி மிகவும் விரைவாக வந்து கூடுகின்றன. யானைகள் அபார மோப்ப சக்தி கொண்டவை என்றாலும், மோப்பத்தை உணர்ந்துகொள்ள முடியாதபடி எதிர்க்காற்று வீசும் நேரத்தில்கூட, எங்கோ தனித்து திரியும் யானைகள், வியக்கத்தக்க முறையில் ஒரே நேரத்தில் தங்களுடைய போக்கை ஒன்றுபடுத்தி கொள்கின்றன.