மும்பை
செவ்வாய்க்கிழமை அன்று தொடர்ந்து நான்காவது நாளாக பங்கு வியாபாரம் பின்னடைவை சந்தித்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 161 புள்ளிகள் சரிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 53 புள்ளிகளை இழந்தது.
பங்குகள் விற்பனை
தொலைத் தொடர்பு, உலோகம், வாகனம் போன்ற துறை சார்ந்த பங்குகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டன. மற்ற நாடுகளில் பங்கு வியாபாரம் சரிவு கண்டது இந்திய சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அந்த நிலையில், மும்பை பங்குச்சந்தையில் நேற்று தொலை தொடர்பு துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 4.23 சதவீதம் சரிந்தது. அடுத்து மோட்டார் வாகன துறை குறியீட்டு எண் 1.08 சதவீதம் இறங்கியது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனப் பங்குகளில் 10 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது. 20 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தது.
இந்தப் பட்டியலில் பாரத ஸ்டேட் வங்கி, இன்போசிஸ், பவர் கிரிட், டெக் மகிந்திரா, டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், எல் அண்டு டி உள்ளிட்ட 10 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. அதே சமயம் பார்தி ஏர்டெல், இண்டஸ் இந்த் வங்கி, மாருதி சுசுகி, ஹீரோ மோட்டோகார்ப், டாட்டா ஸ்டீல், எச்.டீ. எப்.சி., நெஸ்லே இந்தியா, எச்.சி.எல். டெக் னாலஜிஸ், ஏஷியன் பெயிண்ட் உள்பட 20 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது.
சென்செக்ஸ்
மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 161.31 புள்ளிகள் சரிவடைந்து 40,894.38 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 41,042.46 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 40,610.95 புள்ளிகளுக்கும் சென்றது.
இந்தச் சந்தையில் 884 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,613 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 157 நிறுவனப் பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.2,538 கோடியாக உயர்ந்தது. கடந்த திங்கள்கிழமை அன்று அது ரூ.1,731 கோடியாக இருந்தது.
தேசிய பங்குச்சந்தை
தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 53.30 புள்ளிகள் குறைந்து 11,992.50 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 12,030.75 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 11,908.05 புள்ளிகளுக்கும் சென்றது.
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு