மும்பை
3 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியாக புதன்கிழமை அன்று சென்செக்ஸ் 29,000 புள்ளிகளுக்கு கீழ் சென்றது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,710 புள்ளிகள் சரிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 498 புள்ளிகளை இழந்தது. எனவே, நேற்று அனைத்து நிறுவனப் பங்கு களின் ஒட்டுமொத்த மதிப்பு ஒரே நாளில் சுமார் ரூ.5 லட்சம் கோடி குறைந்தது.
எண்ணெய் விலை
அன்னிய செலாவணி சந்தையில் நேற்று டாலருக்கு நிகரான ரூபாயின் வெளிமதிப்பு 74.36-ஆக சரிவடைந்தது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு உலக பங்குச் சந்தைகளை உலுக்கி வரும் நிலையில் நடப்பு 2020-ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.2 சதவீதமாக குறையும் என எஸ் அண்டு பி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனம் மதிப்பீடு செய்தது. இது பற்றிய ஐயப்பாட்டால் முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை விற்றுத்தள்ளினர். எனவே நேற்று சென்செக்ஸ் 3 ஆண்டுகளில் இல்லாத சரிவை சந்தித்து 29,000 புள்ளிகளுக்கு கீழ் சென்றது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 17 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்து ஒரு பேரல் சுமார் 25 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பங்கு வியாபாரம் வீழ்ந்த நிலையில், மும்பை பங்குச்சந்தையில் நேற்று தொலைத் தொடர்பு துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 9.48 சதவீதம் குறைந்தது. அடுத்து நிதிச்சேவை துறை குறியீட்டு எண் 7.65 சதவீதம் சரிந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனப் பங்குகளில் 2 பங்குகளின் விலை உயர்ந்தது. 28 பங்குகளின் விலை சரிவடைந்தது.
இந்தப் பட்டியலில் ஓ.என். ஜி.சி., ஐ.டி.சி. ஆகிய 2 பங்குகளின் விலை ஏற்றம் கண்டது. அதே சமயம் இண்டஸ் இந்த் வங்கி, பவர் கிரிட், கோட்டக் மகிந்திரா வங்கி, பஜாஜ் பைனான்ஸ், எச்.டீ. எப்.சி. வங்கி உள்பட 28 பங்குகளின் விலை குறைந்தது.
சென்செக்ஸ்
மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 1,709.58 புள்ளிகள் சரிவடைந்து 28,869.51 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 31,101.77 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 28,613.05 புள்ளிகளுக்கும் சென்றது.
இந்தச் சந்தையில் 385 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,997 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 150 நிறுவனப் பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த் தகம் ரூ.3,365 கோடியாக உயர்ந்தது. கடந்த செவ்வாய்க் கிழமை அன்று அது ரூ.2,902 கோடியாக இருந்தது.
தேசிய பங்குச்சந்தை
தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 498.25 புள்ளிகள் இறங்கி 8,468.80 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 9,127.55 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 8,407.05 புள்ளிகளுக்கும் சென்றது.
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு