போலந்து நாட்டிலுள்ள வார்சா நகரத்தில் 1867-ம் ஆண்டு நவம்பர் 7-ந் தேதி புரோனிஸ்லாவா விலாடிஸ்லாவ், ஸ்க்லோடோவ்ஸ்கி என்ற தம்பதிக்கு மகளாக பிறந்தார் மேரி கியூரி. மேரிக்கு மூன்று சகோதரிகளும், ஒரு சகோதரரும் உண்டு. பெற்றோர்கள் இருவருமே பள்ளி ஆசிரியர்கள். தாய் எந்தப் பள்ளியில் பணிபுரிந்தாரோ அந்தப் பள்ளியின் மாடியில்தான் அவர்களுடைய வீடும் இருந்தது.
அவர் பிறந்த காலகட்டத்தில் பெண்களுக்கு ஆரம்பக்கல்வி மட்டுமே அளிக்கப்பட்டது. உயர் கல்வி கற்க அவர்களுக்கு அனுமதி கிடையாது. முடிந்தால் வீட்டிலேயே படித்துக்கொள்ள வேண்டியதுதான். யாரும் கற்றுக்கொடுக்காமலே மேரி, அவருடைய ஆர்வத்தின் அடிப்படையில் சகோதரிகளின் படிப்பைக் கவனித்து ஆரம்பக்கல்வியை சிறிது சிறிதாகப் பெற்றார்.
மேரிக்குப் பத்து வயதிருக்கும்போது அவருடைய தாயார் எலும்புருக்கி நோய்க்கும், சகோதரி ஸோபி என்பவர் டைபாய்டு காய்ச்சலுக்கும் பலியானார்கள். குடும்பத்தில் வறுமைச் சூழ்நிலை வேறு வாட்டியது. இதனால் மனம் பேதலித்தாலும், அவர் தன்னுடைய படிப்பை விட்டுவிடவில்லை. பெண்களுக்கு கல்வி கற்க அனுமதி இல்லை என்றாலும், அவர்களுக்காக ரகசியமாகப் பள்ளிகள் நடத்தப்பட்டன. அப்படி மேடம் சிக்கோர்ஸ்தா என்பவர் நடத்திய ரகசியப் பள்ளியில் மேரி சேர்ந்து கல்வி கற்றார். அங்கு படிப்பு முடிந்ததும், மற்றொரு ரகசியப் பள்ளியில் அறிவியலில் மேற்படிப்பைத் தொடங்கி முடித்தார்.
அவருடைய சகோதரி பிரான்யா என்பவர் மேற்படிப்பும், பட்டமும் பெறுவதற்கு இவர் உதவினார். வீட்டில் பாடம் கற்றுத்தரும் தனி ஆசிரியர் தொழிலைத் தொடங்கி அதன் மூலம் கிடைத்த வருமானத்தைத் தமக்கையின் மேற்படிப்புக்கு அனுப்பி உதவினார். பிரான்யாவின் படிப்பு முடிந்ததும், மீண்டும் மாணவியாக மாறினார். பாரீஸ் நகரத்திற்குச் சென்று அங்குள்ள சோர்போன் கல்விக் கழகத்தில் சேர்ந்து இயற்பியலை சிறப்பு பாடமாக மேற்கொண்டு கல்வி பயின்றார். வறுமை அவரைத் தாக்கியது. சத்துணவுப் பற்றாக்குறையால் அவரின் உடல் நலிவடைந்தது. ஆனாலும் அவர் படிப்பை விடவில்லை. பல்வேறு சிரமங்களுக்கு இடையில் நான்கு ஆண்டுகளில் இரண்டு எம்.ஏ. பட்டங்கள் (இயற்பியல், கணிதம்) பெற்றார்.
அந்த நகரத்திலிருந்த ஒரு வர்த்தகச் சங்கம் காந்தத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யும்படி மேரியைக் கேட்டுக்கொண்டது. அவ்வாறு ஆய்வில் ஈடுபட்டபோது அவருக்குச் சில சந்தேகங்கள் தோன்றின. அதை யார் மூலம் போக்கிக்கொள்ளலாம் என்ற முயற்சியில் அவர் ஈடுபட்டபோது பியரி கியூரி என்ற அறிவியல் மேதையைப் பற்றி அறிந்தார். அவரிடம் சென்று கலந்துரையாடினார். தன் ஐயங்களுக்குரிய தீர்வுகளைப் பெற்றார். பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்துப் பல அறிவியல் தகவல்களைப் பரிமாறிக்கொண்டனர். அவர்களுடைய நட்பு தீவிரமானதும் அதுவே காதலாக மாறியது. 1895 ஜூலை மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். மேரி, மேடம் கியூரி ஆனார்.
பதப்படுத்தப்பட்ட இரும்பின் காந்தமாதல் தன்மைகள் பற்றிய ஆய்வுக்கட்டுரை ஒன்றைத் தயாரித்தார். அடுத்து முனைவர் பட்டம் பெற வேண்டி உழைக்கத் தொடங்கினார்.
அச்சமயம் பிரான்சு நாட்டைச் சார்ந்த அறிவியலறிஞர் ஹென்றி பெக்குரல் என்பவர் எழுதியிருந்த கதிர் வீச்சு பற்றிய கட்டுரையைக் கண்டார். அதையே ஒரு முயற்சியாக எடுத்துக்கொண்டு அதில் ஆய்வுகளைத் தொடங்கினார். பியரி கியூரியும், அவருக்குத் தூண்டுகோலாக நின்று ஊக்கமூட்டி உதவினார். பெக்குரல் கண்டுபிடித்தபடி, யுரேனிய உப்புகளிலிருந்து ஒரு வகையான கதிர்கள் தாமாகவே வெளிப்படுவதை உணர்ந்த மேரி கியூரி அவற்றிற்குக் கதிரியக்கம் என்று பெயரிட்டார்.
அவருடைய ஆய்வுகளின்போது தோரியச் சேர்மங்களிலிருந்தும், கதிரியக்கம் வெளிப்படுவதைக் கண்டுபிடித்தார். பியரி தன் சொந்த ஆய்வுகளைக் கைவிட்டுத் தன் துணைவியாருக்கு உதவினார். அவரும் கதிரியக்க ஆய்வுகளில் ஈடுபட்டார்.
யுரேனியத்தின் கனிமமான பிட்ச் பிளெண்ட் என்ற பொருளைப் பகுப்பாய்வு செய்தனர். 1898-ம் ஆண்டில் அதிலிருந்து ஒரு புதிய கதிரியக்கத் தனிமத்தைப் பிரித்தெடுத்தனர். தன்னுடைய தாய் நாட்டின் நினைவைப் போற்றும் வகையில், மேரி கியூரி, அதற்குப் போலோனியம் என்று பெயரிட்டார். இதை அவர் அறிவித்தபோது, அறிவியல் உலகம் முதலில் அந்த உண்மையைக் காது கொடுத்துக் கேட்க மறுத்துவிட்டது.
அதே ஆண்டில் டிசம்பர் மாதத்தில் அவர்கள் மேலும் ஒரு கதிரியக்கத் தனிமத்தைப் பிரித்தெடுத்தனர். அதன் மகத்தான கதிர்வீச்சுத் திறன் காரணமாக அதற்கு ரேடியம் எனப் பெயரிட்டனர். அப்போது மேரியின் வயது 32.
போலோனியம், ரேடியம் ஆகிய தனிமங்களின் பண்புகளைக் கண்டுபிடித்த கியூரி தம்பதிகள் நான்காண்டுகள் உழைத்தனர். பிட்ச் பிளெண்டிலிருந்து யுரேனியத்தைப் பிரித்தெடுத்த பிறகு மிச்சமிருக்கும் கழிவுப்பொருளை ஆஸ்திரிய அரசிடமிருந்து மலிவு விலைக்கு வாங்கி, அதிலிருந்து போலோனியம், ரேடியம் ஆகியவற்றைப் பிரித்தெடுக்கும் முயற்சியில் 1902-ம் ஆண்டில் அவர்கள் வெற்றி பெற்றனர்.
கியூரி தம்பதிகளின் புகழ் உலகமெங்கும் பரவியது. லண்டன் ராயல் கழகம் அவர்களுக்கு டேலி பதக்கம் என்ற உயரிய விருதை வழங்கியது. 1903-ம் ஆண்டில் ஹென்றி பெக்குரல், மேரி கியூரி, பியரி கியூரி ஆகிய மூவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்தப் புகழ், கியூரிகளின் மனப்பாங்கை மாற்றவில்லை. ஆனால், கியூரி தம்பதிகளின் வாழ்க்கை, வறுமையும், உழைப்பும், நோய்களும் நிறைந்ததாகவே இருந்தது. அவர்கள் கண்டுபிடித்த கதிரியக்கத் தன்மையுள்ள போலோனியமும், ரேடியமும் அவர்களுடைய உயிரைச் சிறிது, சிறிதாக உறிஞ்சிக் கொண்டிருந்தது.
1906, ஏப்ரல் மாதம் 19-ந் தேதி, பியரி கியூரி மீது ஒரு சரக்கு வண்டி மோதி அவருடைய உயிரைப் பறித்தது. அதிர்ச்சி அடைந்த மேரி, தன் இரு புதல்விகளுக்காக வாழ வேண்டி மனம் தேறினார். கணவரை இழந்துவிட்ட துயரத்தை தன்னுடைய ஆராய்ச்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டதன் மூலம் மறக்க முயன்றார்.
எக்ஸ்ரே எடுப்பதற்கும், உடலில் இறந்துபோன செல்களை அழிப்பதற்காகவும், ரேடியக் கதிர்களைப் பயன்படுத்தலாம் என்பதே முதன் முதலில் கியூரி கண்டுபிடித்ததாகும். ரேடியத்தின் வேதியியல் குணங்களைக் கண்டுபிடித்ததற்காக இரண்டாவது முறை 1911-ல் கியூரிக்கு வேதியியலில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இரண்டு முறை நோபல் பரிசு பெற்றவர் அதுவும் ஒரு பெண் அறிவியலறிஞர் வேறு எவருமில்லை என்ற சிறப்பும் இவருக்குக் கிடைத்தது.
1910-ல் சோர்போன் பல்கலைக்கழகத்தில் முதல் பெண் பேராசிரியையாகப் பதவி ஏற்றார். இப் பல்கலைக்கழகமும், பாஸ்டர் பல்கலைக்கழகமும் ரேடிய ஆராய்ச்சி நிலையம் ஒன்றைக் கியூரியின் பெயரில் நிறுவி அதன் ஒரு பகுதிக்கு மேரியைத் தலைவியாக நியமித்தன.
இவருடைய தொண்டினைப் பாராட்டிய அமெரிக்க அரசாங்கம் நூறாயிரம் டாலர் மதிப்புள்ள ரேடியத்தை இவருக்கு அன்பளிப்பாகத் தந்தது. இவர், அதைத்தான் ஏற்றுக்கொள்ளாமல், தான் தலைவியாக இருந்த ஆராய்ச்சிக்கழகத்திற்கு அதை மாற்றிக்கொடுக்கச் செய்தார். அப்போது அமெரிக்க நாடு சென்று திரும்பிய பின் மேரி ஆய்வகத்தில் இருந்த நேரம் போக மற்ற நேரங்களில் அறிவியல் கருத்தரங்குகளுக்கும், ஆய்வு மாநாடுகளுக்கும் சென்றுவரத் தொடங்கினார்.
புகழையும், பொன்னையும் ஒதுக்கிவிட்டு, அறிவையும், பண்பையும் சேர்த்துக்கொண்ட இந்த அறிவியலறிஞர், உலகம் மூடத்தனமான பெரும் போரை நடத்திக்கொண்டிருந்தபோது போர் முனையில் தங்கி வீரர்களுக்குத் தொண்டு செய்தார்.
1914-ல் மேரியின் முயற்சியால் ரேடியம் இன்ஸ்டிடியூட் என்று ஒன்று பாரீசில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், அதே சமயத்தில் மேரியின் உடல்நிலை மோசமாகிக்கொண்டே போனது. உடல்நிலையைப் பொருட்படுத்தாமல், அவரும் ஆராய்ச்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். மேரியின் உடல்நிலை சீர்கெட்டது. அவர் கண்டுபிடித்த ரேடியமே அதன் கதிர்வீச்சின் மூலம் அவருடைய ரத்தத்தைக் கெடுத்தது. 1934-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ந் தேதி மேரி மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு ரேடியம் இன்ஸ்டிடியூட், கியூரி இன்ஸ்டிடியூட் என்று பெயர் மாற்றம் பெற்றது. இந்நிறுவனத்தில் மேரி பயன்படுத்திய பொருட்கள் மற்றும் ஆராய்ச்சிக் குறிப்பேடுகள் இன்றும் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
நா.சு.சிதம்பரம், இயற்பியல் ஆசிரியர்
(அறிவியல் விழிப்புணர்வு பணிக்குத் தேசிய விருது பெற்றவர்)