மகாராஷ்டிராவின் டென்கன்மல் என்ற மலைக்கிராமத்தில் வாழ்ந்து வரும் பகத், மூன்று மனைவிகளை திருமணம் முடித்ததற்கு தண்ணீர் பஞ்சத்தை காரணமாக்குகிறார்.
பகத்தின் முதல் மனைவி பெயர், டூக்கி. இவருக்கும் பகத்திற்கும் 6 குழந்தைகள். டென்கன்மல் கிராமம் தண்ணீர் பஞ்சத்திற்கு பெயர்போன கிராமம். அதனால் பகத்தின் மனைவி டூக்கியால், 6 குழந்தைகளையும் சமாளித்தபடி, தண்ணீர் தூக்கி வர முடியவில்லை. அதனால் டூக்கியின் சம்மதத்தோடு, சாக்கிரி மற்றும் பாக்கி என்ற இரு விதவைகளை பகத் திருமணம் முடித்து கொண்டார்.
டென்கன்மல் கிராமத்தில் விதவைகள் மிகமோசமான நிலையில் நடத்தப்படு கிறார்கள். அதாவது கோவில் திருவிழாக்கள், நல்ல விசேஷங்கள், பண்டிகை கொண்டாட்டங்கள், ஏன் குடும்ப விழாக்களில் கூட விதவைகள் ஒதுக்கிவைக்கப்படுவதால், அத்தகைய கட்டுப் பாடுகளில் இருந்து தங்களை விடுவிப்பதற்காக, விதவை பெண்களும் பகத்தை திருமணம் முடித்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு இவர்களது பணி என்ன தெரியுமா...? குடும்பத்திற்கு தேவையான தண்ணீரை வெகு தூரம் சென்று சுமந்து வருவதுதான். அதிகாலை இரண்டு குடங்களுடன், தண்ணீரை தேடி கிளம்பினால், அவர்கள் தண்ணீரோடு வீடு வந்து சேர மாலை நேரம் ஆகிவிடுமாம். அதற்காக முதல் மனைவியான டூக்கி, இவர்களுக்கு மதிய உணவையும் சமைத்து கொடுத்து அனுப்புகிறார்.
முதல் மனைவி குழந்தைகளையும், சமையல் வேலைகளையும் கவனித்து கொள்ள, 2-வது மற்றும் 3-வது மனைவிகள் குடும்பத்திற்கு தேவையான தண்ணீரை சுமந்து வருகிறார்கள். இரவு நேர சமையல் வேலைகளை மூவருமாக பகிர்ந்து கொள்கிறார்கள்.
மனைவிகள் மூவருக்குள்ளும் இதுவரை சண்டை ஏற்பட்டதே இல்லையாம். அது எப்படி சார்..? என்று பகத்திடம் கேட்டால், தண்ணீர் பஞ்சத்தை வெகு சுலபமாக சமாளிக்க தெரிந்த எனக்கு, குடும்ப பிரச்சினைகளை சமாளிக்க தெரியாதா..! என்கிறார், வெகு சுலபமாக.