ஒரு மொழிக்காகப் போராடி மாண்டு போனவர்களின் வரலாறு தமிழுக்கு மட்டுமே உண்டு. மொழியை உயிராக நினைத்து வாழ்ந்து மறைந்ததும் நம் தமிழ்த் தலைமுறைகள் என்பதனையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
காலத்தால் அழியாத காவியங்களையும், பண்பாட்டு அடிச்சுவடுகளையும் கற்றுக் கொடுத்த தமிழ்மொழி இன்றைக்கு அந்நிய மொழியைப் போல் அந்நியப்பட்டு நிற்கிறது. நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசினால் கைத்தட்டி, முதுகை தட்டிக் கொடுத்து ஆராவரிக்கும் சமூகம், தமிழில் பேசினால் ஏளனமாக ஏற இறங்கப் பார்க்கிறது. இது எவ்வளவு பெரிய வெட்கக்கேடான செயல் என்பதனை மறந்துபோய் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதனை நாம் காலம் கடந்து நிச்சயமாக உணர்ந்துகொள்வோம்.
பள்ளியில் ஒரு பிள்ளைக்கு பாடத்தை கற்றுக்கொடுப்பதை விட நல்ல ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும். அந்த ஒழுக்கத்தை யார் கற்றுக்கொடுப்பது? இங்கு தான் மிகப் பெரிய கேள்வி எழுகிறது. அது யாரும் இல்லை. தமிழ்மொழியும், இலக்கியமும் தான் ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கும். தமிழ்மொழியையும், இலக்கியத்தையும் புறந்தள்ளிவிட்டு வேறு எந்த மொழியாலும், பாடத்தாலும் ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க முடியாது. அப்படி நாம் புறந்தள்ளி பயணித்த காரணத்தில்தான் நாம் வன்மங்களின் பிடியில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறோம் என்பதனை மறந்துவிடாதீர். முப்பது ஆண்டுகளுக்கு முன் பின்னோக்கிப் பாருங்கள். பள்ளியில் எந்த மாணவன் கத்தியை எடுத்தான்? எந்த மாணவன் போதைக்கும், புகைக்கும் அடிமையானான்? யோசித்துப் பாருங்கள் இல்லவே இல்லை. காரணம் என்ன அவன் அறம் செய்ய விரும்பு, எனும் அவ்வையின் ஆத்திசூடியை அகரம் பழகிய காலத்திலேயே படித்துத் தெளிந்தவன்.
ஆனால் இன்றைக்கு அப்படி அல்ல அவ்வையார் யார் என்றால் கூடத்தெரியாது. பிறகு எங்கே ஆத்திசூடி படிப்பது. இதனால் தான் ஒழுக்கம் தடம்மாறிப் போகிறது. தமிழை ஒதுக்கி வாழ்வில் உயர முடியாது என்பதனை எடுத்துச்சொல்ல நாம் தவறிவிட்டோமா? அல்லது இன்றைய தலைமுறை எடுத்துக்கொள்ள தவறி விட்டதா என்பதனை யோசிக்கவேண்டி தான் இருக்கிறது.
மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம். பண்பாட்டின் குறியீடு. வாழ்வியலுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம். ஒழுக்கத்தை சொல்லிக் கொடுக்கும் ஆசான். இத்தனையும் இன்று விலகி நின்று வேடிக்கை பார்க்கிறது. தடம் மாறிப்போன தமிழரைப் பார்த்து, கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுப் பெருமை உடைய ஒரு மொழி இவ்வுலகில் உண்டென்றால் அது தமிழைத் தவிர வேறொன்றும் இல்லை. இவ்வளவு பெருமையும், பழமையும் உடைய ஒரு மொழியை பேசக்கூடத் தயங்குவது ஏன் எனத் தெரியவில்லை.
அந்நிய மொழியில் உள்ள அனைத்துச் சொற்களுக்கும் தமிழில் வார்த்தைகள் உண்டு. ஆனால் அந்த வார்த்தைகளை ஏன் நாம் பயன்படுத்த மறுக்கிறோம். அதையும் மீறிப் பயன் படுத்தினால் ஏற இறங்கப்பார்க்கிறோம். ஏன் இந்த நிலை? உதாரணமாக பேருந்துப் பயணத்தில் பயணச்சீட்டு எனக்கேட்க முடிவதில்லை. மாத்திரை வாங்க மருந்தகம் எங்கே இருக்கிறது எனக்கேட்டால் அர்த்தம் புரிவதில்லை. பயணம் செய்ய மகிழுந்து இருக்கிறது என்றால் அது என்ன என்று கேட்கிறோம். வளைவு பக்கத்தில் நிற்கிறேன் என்றால் இடத்தை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆர்ச் பக்கத்தில் என்று சொன்னால் அடையாளம் காண முடிகிறது. உணவகத்தில் அமர்ந்து கொண்டு சோறு என்று கேட்க வெட்கப்படுகிறோம். ரைஸ் என்று கேட்டால் மதிக்கப்படுகிறோம். டிபன் முடிச்சாச்சா, லன்ச் சாப்பிட்டாச்சா இப்படி எல்லாம் கேட்டால்தான் பல பேருக்கு அர்த்தமே புரிகிறது.
இப்படியாக உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரைக்கும், வீடு தொடங்கி வீதிகள் வரைக்கும், அனைத்து இடங்களிலும் ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் புரிகிறது. ஆனால் தாய்மொழியாம் தமிழ் சொற்களுக்கு பொருள் புரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது இன்றைய தலைமுறை. இதற்கு பெற்றோரும் ஆதரவு, மற்றோரும் ஆதரவு என்பது தான் வேதனையிலும் வேதனை. என் பிள்ளைக்கு தமிழ் பேசத் தெரியாது என்று சொல்வதில் எத்தனை பெருமைகொள்கின்றனர் பெற்றோர்கள். அதுவா பெருமை? அது ஒரு மொழியின், ஒரு இனத்தின் மீதான அபாயத்தின் தொடக்கப்புள்ளி என்பதனை மறந்துவிடாதீர்கள். இதுபோன்ற அபாயத்தை அறுத்தெரிந்து ஆளுமையை உயர்த்திக்காட்ட தமிழ் மொழியை தாங்கிப் பிடிப்போம். தலைமுறைக்கும் சொல்லிக்கொடுப்போம்.
- மு.ஜெயமணி, உதவிப் பேராசிரியர், காரைக்குடி.