* உங்களை பற்றி கூறுங்கள்?
புதுச்சேரி என் சொந்த ஊர். பயோமெடிக்கல் என்ஜினீயரிங் முடித்திருக்கிறேன். சில காலம் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு, இப்போது உயர் படிப்பிற்காக அமெரிக்கா சென்றிருக்கிறேன்.
* நடனக் கலையில் ஆர்வமானது எப்படி?
சிறுவயதிலிருந்தே நடனக் கலையில், தனி ஆர்வம் உண்டு. நிறைய மேடைகளில் நடனமாடியிருக்கிறேன். நடிப்பு பயிற்சியும் பெற்றிருக்கிறேன். தமிழகத்தின் மிக பிரபலமான டி.வி. நடன நிகழ்ச்சி களிலும் பங்கேற்றிருக்கிறேன். அதன் தொடர்ச்சியாகவே தற்போது அமெரிக்கா வில் நடனமாடி வருகிறேன்.
* அமெரிக்காவிலும், நடன ஆர்வத்தை தொடர்ந்தது எப்படி?
படிப்பிற்காக அமெரிக்காவில் செட்டிலாகிய பிறகு, கிடைக்கும் ஓய்வு நேரங்களில், நடனமாடுவது உண்டு. அது சமூக ஊடகங்கள் வழியாக, அமெரிக்க வாழ் தமிழர்களையும், இந்தியர்களையும் சென்றடைய, நடனக் கலையில் ஆர்வமுள்ள நண்பர்கள் கிடைத்தனர். அவர்களை ஒருங்கிணைத்து விடுமுறை நாட்களில், நடன பயிற்சி மேற்கொண்டோம். அமெரிக்காவில் இயங்கும் தமிழ் சங்கம் நடத்தும் நிகழ்ச்சிகளில் நடனமாடுவது, தமிழ் பிரபலங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி களுக்கு நடன பயிற்சி வழங்குவது, ஒருசில நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக செல்வது என... அமெரிக்க நாட்கள் இசையோடும், நடனத்தோடும் நகர்ந்தன.
* அமெரிக்கா பல கலைகள் சங்கமிக்கும் நாடு. ஒரு நடன கலைஞராக உங்களுடைய பார்வையில் அமெரிக்கா எப்படி தெரிந்தது?
பொதுவாக அமெரிக்கர்கள், எல்லா வகையான நடனத்தையும் ரசிக்கிறார்கள். இங்கு ஹிப்-ஹாப் பிரபலம். கூடவே ஜாஸ், பால்ரூம், டேப் டான்ஸ், ஐரீஷ் டான்ஸ், மார்டன் டான்ஸ்... என கலை பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். மெலடி பாடல்களை இசைக்கவிட்டு, மெதுவாக நடனமாடினாலும் அமெரிக்கர்கள் ரசிப்பார்கள். நம்ம ஊர் குத்துப் பாடல்களை இசைக்கவிட்டு, எனர்ஜியோடு குத்தாட்டம் போட்டாலும் ரசிப்பார்கள்.
* அமெரிக்காவில், தமிழ் குத்துப் பாடல்கள் பிரபலமானது எப்படி?
அமெரிக்காவில் நிறைய நடன போட்டிகள், அரங்கேறிக்கொண்டே இருக்கும். அதில் பங்கேற்க, சிறப்பாக நடனமாடக்கூடிய 8 நபர்களை, ஆடிஷன் வாயிலாக தேர்ந்தெடுத்து, ஒருங்கிணைத்து டீம் கிரவுண்ட் ஜீரோ என்ற நடன குழுவை உருவாக்கினேன். சின்ன நடன போட்டிகள் தொடங்கி, பெரிய மேடை வரை நடனமாடினோம். அமெரிக்கர்களுக்கு பிடித்தமான ஹிப்-ஹாப் இசையில் தொடங்கி, பாலிவுட் பாடல், நம் ஊர் தமிழ் குத்துப் பாடல்... என இசைக் கோர்வையில் மாயாஜாலம் நிகழ்த்தினோம். மற்ற இசையைவிட, அமெரிக்கர்களுக்கு தமிழ் குத்துப் பாடல்களும், குத்தாட்டமும் ரொம்ப பிடித் திருந்தது. அதனால், அதையே எங்களுக்கான அடையாளமாக மாற்றிக்கொண்டோம். தமிழ் குத்துப்பாடல்களில், நிறைய குத்தாட்டம் போட்டோம்.
* இதுவரை எத்தகைய நடனப் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறீர்கள்?
கனடா மற்றும் அமெரிக்கர்கள் கலந்து கொள்ளும், டான்ஸ் யு.எஸ்.ஏ. டான்ஸ் சர்வதேச போட்டியில் கலந்து கொண்டோம். டாலஸ், நியூ ஜெர்ஸி, லாஸ் ஏஞ்சல்ஸ்... என பல இடங்களில், பல சுற்றுகளாக நடந்த போட்டியின், இறுதிப்போட்டி வரை முன்னேறி, நடுவர்களின் பாராட்டு களையும், ரசிகர்களின் கொண்டாட்டத்தையும் பரிசாக பெற்றோம். அதேபோல, அமெரிக்காவின் மிக பிரபலமான பிராட்வே ஷோ நிகழ்ச்சியிலும், எங்களுடைய குழு குத்தாட்டம் போட்டு, அமெரிக்கர்களை குதூகலப்படுத்தியது. மேலும் உதான், டான்ஸ் கொஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளேன். அரிசோனா மாகாணத்தில் நடந்த பீனிக்ஸ் நடன நிகழ்ச்சியில், நடுவராக அமர்ந்திருக்கிறேன்.
* அமெரிக்கர்கள் குத்துப் பாடலையும், குத்தாட்டத்தையும் ரசிக்கிறார்களா?
எனர்ஜியான பாடலும், ஆட்டமும் அமெரிக்கர்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. ரிதம் ஆப் சென்னை என்ற வாசகத்தோடுதான், தமிழ் குத்துப்பாடல்கள் இடம்பெறும். அதனால் நடனத்திற்கு நடுவே ரிதம் ஆப் சென்னை என்று ஒலிக்கும்போதே, ரசிகர்கள் எழுந்து ஆரவாரம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இதை பார்க்கும்போது, எங்களுக்குள் கூடுதலான உற்சாகம் பெருக்கெடுக்கும். அதனால் ஆட்டம், வேற லெவலில் இருக்கும்.
* அமெரிக்காவில் நிறைய போட்டிகளில் பங்கேற்றிருக்கிறீர்கள். உங்களுக்கு கிடைத்த பாராட்டுக்களை பற்றி கூறுங்கள்?
2018-ம் ஆண்டு டான்ஸ் யு.எஸ்.ஏ. டான்ஸ் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இறுதிவரை சிறப்பாக ஆடினோம். வெற்றியாளர் அறிவிப்பின்போது, ரசிகர்கள் எங்களது குழு பெயரை தொடர்ச்சியாக கூறி, அரங்கத்தையே தெறிக்கவிட்டனர். அது வெற்றியைவிட, சிறப்பான பரிசாக அமைந்தது. அதேபோல மற்றொரு நிகழ்வில், நடுவர்களின் மைக்- டிராப் கவுரவம் கிடைத்தது. நடுவர்கள் எழுந்து நின்று பாராட்டும் கவுரவத்திற்கு இணையானதுதான், இந்த மைக்-டிராப். இதுவும் எங்களது குழுவிற்கும், நம் ஊர் குத்தாட்டத்திற்கும் கிடைத்தது.
* நடனக் கலையில் சாதிக்க நினைப்பது?
தமிழ்நாட்டு நடனக் கலைகளை, உலக மேடைகளுக்கு கொண்டு செல்ல ஆவலாய் இருக்கிறேன். நம் ஊர் தெருக்கூத்தும், ஹிப்-ஹாப் கலையும் அடிப்படையில் ஒன்றுதான். மக்களின் உணர்ச்சி வெளிப்பாடாகவே இவ்விரு கலைகளும் பிறந்திருக்கின்றன. ஆனால் நாட்டிற்கு ஏற்ப வெவ்வேறு கலையாக வெளிப்பட்டிருக்கிறது. இப்படி நடனம் சம்பந்தமான ஆய்வுகளில் ஆர்வமாய் பங்கேற்கிறேன்.
கலைவடிவம் என்பதை தாண்டி, நடனத்தின் தனி சிறப்பு என்ன?
நடனம், சுறுசுறுப்பின் தந்திரம். உடல் இளமையின் மந்திரம். அதனால்தான், நடனத்தை அடிப்படையாக கொண்ட பல உடற்பயிற்சிகள், உலகளவில் டிரெண்ட் ஆகி இருக்கின்றன.