சிறப்புக் கட்டுரைகள்

பண மசோதா மூலம் நிறைவேற்றிய ஆதார் அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்ற நீதிபதி சந்திரசூட் தீர்ப்பு சரியே

மத்திய அரசின் ஆதார் அட்டை திட்டம் அரசியல் சாசன சட்டப்படி செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது. தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா மற்றும் நீதிபதி ஏ.எம்.கன்வில்கர், ஏ.கே.சிக்ரி ஆகிய மூவரின் தீர்ப்பும் ஒரேமாதிரியாக இருந்தது.

நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண் ஆகியோர் தனித்தனியாக தங்கள் தீர்ப்பை அறிவித்தனர்.

இதில் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வழங்கிய தீர்ப்பு மட்டும் சில இடங்களில் மற்றவர்கள் வழங்கியதில் இருந்து மாறுபட்டு இருந்தது.

எனினும் பெரும்பான்மையான நீதிபதிகள் கூறிய தீர்ப்பை ஏற்பதாக மற்றொரு நீதிபதி அசோக்பூஷண் அறிவித்தார்.

நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தனது தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

நாடாளுமன்றத்தில் நிதி மசோதா என்ற பெயரில் ஆதார் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி இருக்க கூடாது. இதை ஒரு மோசடி செயலாகவே கருத வேண்டும். ஆதார் சட்டம் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படாமல் பண மசோதாவாகவே நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள ஆதார் சட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டது என்று கூறமுடியாது.

இது அரசியலமைப்பு சட்டத்தின் 110-வது விதிக்குப் புறம்பானதாகும். ஒன்றை பண மசோதாவாக தாக்கல் செய்ய வேண்டுமென்றால், அதன் கீழ் வழங்கப்படும் மானியமோ அல்லது உதவித்தொகையோ இந்திய ஒருங்கிணைந்த நிதியிலிருந்து செலவிடப்பட வேண்டும். ஆகவே இது பண மசோதாவே இல்லை.

அதுமட்டுமல்லாது, ஒரு தனி நபரின் அடையாளத்தை ஆதார் என்ற 12 எண்களில் அடக்கிவிட முடியாது. ஒரு நபரின் அடையாளம் என்பது பல வகைப்பட்டது. ஒருவர் தன்னை எப்படி அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறாரோ, அப்படி அடையாளப்படுத்திக்கொள்ளும் உரிமை அவருக்கு இருக்கிறது. ஆக, ஆதார் என்ற ஒற்றை அடையாளம் ஒரு தனி நபரின் அடிப்படை வாழ்வுரிமைக்கே எதிரானது.

அனைத்து தேவைகளையும் இணையதளத்தின் வழியாக அவரவரே நிறைவேற்றிக்கொள்ளும் தொழில்நுட்ப காலத்தில், ஒருவரின் இணைய நடவடிக்கையைக் கொண்டே அந்நபரின் வாழ்க்கை முறையை, தற்போதைய செயல்பாடுகளை சேகரித்துவிட முடியும். இந்த சூழ்நிலையில், ஆதாருக்காக சேகரிக்கப்படும் தகவல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறியே!

செல்போன் பயன்பாடு தனிநபர்களின் அந்தரங்கமாகிவிட்ட நிலையில், செல்போன் எண்களை ஆதார் தகவல்களுடன் இணைப்பது தனிநபர் உரிமை, அந்தரங்கம், சுயஉரிமை உள்ளிட்ட அனைத்து அடிப்படை உரிமைகளுக்கும் பெரும் ஆபத்தை உருவாக்க வாய்ப்பு உள்ளது. இந்த தகவல்கள் மூன்றாவது நபர்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றால் உரியவர்களின் அனுமதியின்றி தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. ஆதார் தகவல்களைச் சேரிகத்து வைத்துள்ள நிறுவனம் அவற்றைப் பாதுகாக்க போதுமான சட்டப்பூர்வமான அம்சங்களை பெற்றிருக்கவில்லை. கண்காணிப்பு நடைமுறைகளும் இல்லை. இது நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளையும் மீறுவதற்கு எளிதான வாய்ப்பை ஏற்படுத்தி விடக்கூடும்.

ஆதார் சட்டத்தை அமல்படுத்துவதால் மத்திய அரசின் ஆதார் திட்டம் காப்பாற்றப்பட்டதாக கருதிவிட முடியாது. இந்திய அடையாள ஆணையத்திடம் குடிமக்களின் ஆதார் தகவல்களை பாதுகாப்பதற்கு முறையான வசதி இல்லை.

இவ்வாறு அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து வழக்கறிஞர் கிருபா முனுசாமி கூறிய விவரம் பின்வருமாறு:-

ஆதார் அட்டை இல்லாததற்காக அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க மறுப்பது குடிமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாகும். இருப்பினும் இந்தியாவில் ஆதார் அட்டையின்றி வாழ முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. எந்த ஒரு அரசு திட்டமும் குடிமக்களை கட்டாயப்படுத்தக்கூடாது.

ஆதார் என்பது தனிநபர் உரிமைகளுக்கு எதிராக திணிக்கப்படுகிறது. ஒரு அரசு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியமோ, உதவித்தொகையோ அல்லது ஓய்வூதியமோ குடிமக்களின் உரிமையாகும். அவற்றை ஆதார் இருந்தால் மட்டுமே வழங்குவோம் என்று அரசு கூறுவது அதன் அடிப்படை கடமையில் இருந்து தவறுவதாகும்.

இந்திய அரசாங்கமும் கூட எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்தும், விளம்பரப்படுத்தியும் வந்தது.

ஆனால் அதையே ஒரு தனிநபர் எனக்கு அந்த மானியங்களோ, அரசு திட்டத்தின் கீழான எந்த உதவிகளோ பெற்றுக்கொள்ள விருப்பமில்லை. அதனால், ஆதாரை நான் எடுக்க விரும்பவில்லை என்று கூறினால் அது ஏற்கப்படாமல் ஆதார் கட்டாயமாக்கப்படுகிறது.

இதில் குடிமக்களின் தனி உரிமையை கடந்து அவர்களின் விவரங்கள் குறித்த பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

ஏற்கனவே கூட ஒரு அரசு அதிகாரி இணையதளத்தில் தனது ஆதார் எண்ணை வெளியிட்டு, ஆதார் பாதுகாப்பு இல்லை என்று கூறுபவர்கள் அதை நிரூபித்துக்காட்டுமாறு சவால்விடுத்தார். உடனே, அவருடைய தகவல்களை வைத்து பிரான்சில் இருந்த ஒரு இணையதள வல்லுநர், அந்த அதிகாரியின் வங்கி கணக்கு, குடும்ப விவரங்கள் மற்றும் அவர் தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை முகநூலில் பதிவிட்டார். இது ஆதார் பற்றிய அச்சத்தை இரட்டிப்பாக்கியது.

தொழில்நுட்ப வளர்ச்சியில் யார் வேண்டுமானாலும் எந்த ஒரு இணையதளத்திலும் சர்வசாதாரணமாக எந்த விவரத்தையும் திரட்டலாம் என்ற சூழ்நிலையில் ஆதார் விவரங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா? என்று மக்கள் கேட்கும் பட்சத்தில் அதனை முறையாக எதிர்கொள்ள வேண்டியது அரசின் கடமையாகும்.

நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியபடி, ஒரு நபரின் அடையாளத்தை 12 எண்கள் கொண்ட ஆதாரில் அடக்கிவிட முடியாதுதான்.

மாற்றுப்பாலினத்தவரின் மூன்றாம் பாலின அங்கீகார தீர்ப்பில் கூட ஒருவர் தன்னை எப்படி அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறாரோ அவ்வாறே அடையாளப்படுத்திக்கொள்ளும் உரிமை அந்நபருக்கு இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் கூறி இருக்கிறது.

சமீபத்தில் வழங்கப்பட்ட ஓரின சேர்க்கை தீர்ப்பில் கூட பாலியல் அடையாளம் என்பது ஒரு தனிநபர் அடையாளமாக அங்கீகரிக்கப்பட்டது.

திருநங்கைகளுக்கு அரசு பணிகள் வழங்கிய தீர்ப்பில் கூட அவர்களின் பெயரையோ, அடையாளத்தையோ வெளிப்படையாக பயன்படுத்தாமல் புனைப்பெயர்களை கொண்டே வெளிப்படுத்த வேண்டும் என்று தீர்ப்புகளும் இருக்கின்றன.

இந்தியாவில் தன்னுடைய அடையாளத்தை மறைக்கும் உரிமையை கோரிய ஒரு மனுவில் கூட ஒருவர் அவருடைய அடையாளத்தை மறைக்கும் உரிமை இருக்கிறது என்ற நீதிமன்ற தீர்ப்பு இருக்கிறது. இத்தகைய சூழலில் ஒருவரின் அடையாளத்தை ஆதார் என்ற ஒற்றை அடையாளமாக கருத முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சொன்னது ஏற்றுக்கொள்ள கூடியதே!

- வழக்கறிஞர் கிருபா முனுசாமி, உச்சநீதிமன்றம், புதுடெல்லி

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு