சிறப்புக் கட்டுரைகள்

ராஜ நாகத்தின் ஆச்சரியமான வாழ்க்கை...

குட்டீஸ் நீங்க எல்லோரும் பாம்புகள் பற்றி நிறைய படித்திருப்பீர்கள். நம்ம நாட்டில் இருக்கும் பெரும்பாலான பாம்புகளுக்கு விஷம் கிடையாது.

நாகம், விரியன் போன்ற சில வகை பாம்புகளுக்குத்தான் மனிதர்களை பாதிக்கும் விஷம் உண்டு.

ஆனால், விஷம் என்பது பாம்புகள் அவற்றின் உணவான எலி, தவளை போன்ற சிறிய பிராணிகளை பிடித்து உண்பதற்கு பயன்படும் வகையில் இயற்கையாக அமைந்ததாகும். பாம்புகள் இரையை பிடிக்க அல்லது ஆபத்து காலத்தில்தான் விஷத்தை பயன்படுத்துகின்றன. எல்லா நேரமும் விஷத்தை பயன்படுத்துவதில்லை. ஏன்னா பாம்புக்கு விஷம் என்பது மிகவும் முக்கியமான ஒண்ணு.

எப்பவுமே மனிதர்களை கண்டால் பாம்புகள் தப்பித்து ஓடவே முயற்சிக்கின்றன. நம்மால ஏதாவது ஆபத்து வந்தால்தான் அவை கடித்து விஷத்தை உடம்புக்குள் செலுத்திவிடுகின்றன. நாம நாகப்பாம்பு பற்றி நெறைய கதைகள் படிச்சிருப்போம். இங்க, பாம்புகள் பற்றிய அறிவியல்பூர்வமான தகவல்களை பார்க்கலாம்...

சுமார் 12 வகையைச் சேர்ந்த நாகப்பாம்புகள், ஆஸ்திரேலியாவிலிருந்து, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் வெப்பமண்டலப் பிரதேசங்களின் வழியாக, அரேபியா மற்றும் மிதவெப்ப மண்டலப் பிரதேசங்கள் வரையிலும் பரவியுள்ளன.

நாகப்பாம்புகள் வகையில் கடுமையான விஷம் கொண்டது ராஜநாகம் ஆகும். அதை கிங் கோப்ரா என்று ஆங்கிலத்தில் சொல்வாங்க. இது, மூன்றிலிருந்து ஐந்து மீட்டர் நீளமாக வளரும். ஆம், உலகத்திலேயே மிகவும் நீளமான விஷப்பாம்பும் இதுதான்.

அதிக அளவில் மழை பெய்யும் இடங்கள், அடர்ந்த புதர்ச்செடிகளைக் கொண்ட காடுகள், சதுப்பு நிலங்களில் இவை வாழ்கின்றன. சீனா, பிலிப்பைன்ஸ் தீவுகள், இந்தோனேஷியா, மலேசியா, மியான்மார் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைக் காடுகளில் இவை வாழ்கின்றன.

அடர்ந்த கறுப்பு நிற வாலும், பசுமை கலந்த மஞ்சள் நிற உடலும், அதில் உள்ள வரிகளும், படத்தின் மீது உள்ள சிறு புள்ளிகளும் அவற்றுக்கு அழகு தருவதாக இருக்கும்.

நாகப்பாம்புகள் அதிகமான குடும்ப பற்று கொண்ட விஷயம் ஆச்சரியமானது. அவை, ஆணும் பெண்ணும் சேர்ந்தே வாழ்கின்றன. பெண் ராஜ நாகம் சருகுகளைச் சேகரித்து சுமார் 30 சென்டிமீட்டர் உயரமுள்ள ஒரு மேடாகச் செய்து கூடு தயார் செய்கிறது. பாம்புகளில் கூடுகட்டி வசிக்கும் ஒரே பாம்பினம் ராஜநாகம்தான்.

தனது கூட்டில் 20 முதல் 50 வரை முட்டைகளை இடுகிறது. பிறகு தன் உடலை அந்த மேட்டைச் சுற்றி வளைத்துக்கொண்டு குஞ்சுகள் பொறிக்கும் வரை அங்கேயே இருந்து அடைகாக்கிறது. அப்போது கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வரை உணவு உட்கொள்வதில்லை. ஆண் பாம்பும் அதற்கு அருகிலேயே இருக்கும். ஒரு ராஜ நாகம் உணவு ஏதும் சாப்பிடாமல் அதன் உடலில் உள்ள கொழுப்பை பயன்படுத்தி மாதக் கணக்கில் உயிர்வாழ முடியும் என்பது பிரமிப்பா இருக்கு இல்ல..!

முட்டையில் உள்ள பாம்புக் குஞ்சுகள் மூக்கின் நுனியிலுள்ள ஒரு தற்காலிகப் பல்லைக் கொண்டு ஓட்டை பிளந்து தாமாகவே வெளிவருகின்றன. அவ்வாறு வெளிவரும்போது முழு வளர்ச்சியுற்ற விஷ சுரப்பி, விஷ பற்கள் இருக்கும். அவை நாக்கை அடிக்கடி நீட்டுவதன் மூலம், சுற்றுப் புறத்தில் உள்ள சூழல் மற்றும் சுவை ஆகியவற்றை உணர்கின்றன. வாயின் மேற்பகுதியில் அமைந்துள்ள ஒரு விஷேசமான உறுப்பு மணத்தை உணரும் திறன் கொண்டது. அதன் மூலம் பாம்பு தன் இரையின் மணத்தை அறிந்து செல்லும்.

ராஜ நாகம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்துகொண்டே இருக்கும். அதனால், தோலையும் அவ்வப்போது உரித்துவிடும். தோலை உரிப்பதற்கு அதன் தலையைக் கற்களில் வைத்துத் தேய்க்கிறது. அப்போது, பழைய தோல் அதன் வாய்ப்பகுதியில் கிழிகிறது. அப்புறம், கண்களுக்கு மேலே கண்ணாடி போன்ற மூடிப்பகுதியிலிருந்து வால் வரைக்கும் உள்ள தோல் பகுதியை, உள்ளிருந்து வெளிப்புறமாக கழற்றி விடுகிறது. அப்புறமா, புதிய தோற்றத்துடன் இரை தேட செல்லும்.

இரையைப் பிடித்த பிறகு, விஷத்தை செலுத்துவதன் மூலம், அதை அசையாமல் செய்துவிடுகிறது. நாகப்பாம்பு களின் தாடை விரியும் தன்மையும், தோலின் நெகிழ்வு தன்மையும், அதன் தலையைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு பெரிதாக உள்ள இரையை விழுங்குவதற்கு துணை செய்கிறது.

அந்த இரை மெதுவாக செரிக்கும்படி, அமைதியான இடத்திற்கு சென்று பல நாட்களுக்கு உணவு உட்கொள்ளாமல் ஓய்வெடுக்கிறது. ராஜ நாகம் உள்ளிட்ட நாகப்பாம்புகள் எலிகளையும், தீங்கு விளைவிக்கும் பிற விலங்குகளையும் கொல்லுவதன் மூலம் டன் கணக்கான தானியங்கள் சேதம் ஆகாமல் காக்கப்படுகின்றன.

நாகங்களின் விஷம், விஷத்தை முறிக்கும் மருந்து மற்றும் பிற மருந்து களைத் தயாரிப்பதற்கு பயன்படுகிறது. மும்பையில் உள்ள டாடா நினைவு புற்றுநோய் மையம் புற்று செல்களின்மீது நாகப்பாம்பின் விஷம் ஏற்படுத்தும் விளைவைக் குறித்து ஆய்வு செய்து வருகிறது என்பது ஆச்சரியமான தகவல்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை