* உங்களை பற்றிய சிறு அறிமுகம் கூறுங்கள்?
பி.எஸ்சி கெமிஸ்டிரி படித்திருக்கிறேன். புதுக்கோட்டை மாவட்டம் அகரபட்டி என் சொந்த ஊர். விவசாய பின்னணி உள்ள குடும்பம் என்பதால், சிறுவயதில் இருந்தே விவசாய துறையில் ஆர்வம் உண்டு. அதன் காரணமாக, இளங்கலை பட்டப்படிப்பிற்கு பிறகும், விவசாய பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தேன்.
* இயற்கை விவசாயத்தில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
கல்லூரி படிப்பிற்கு பிறகு, இயற்கை விவசாயத்தை அடிப்படையாக கொண்ட தொண்டு நிறுவனத்தில் பணியாற்றினேன். அப்போது பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாட்டினால், மோசமான விளைவுகளை எதிர்கொண்ட குடும்பங்களை சந்திக்க நேரிட்டது. குறிப்பிட்ட பூச்சிக்கொல்லி மருந்தினை பயன்படுத்தி, அதன் மூலம் வளர்ந்த காய்கறிகள், பால் (மாட்டு தீவனமாக உட்கொள்ளப்பட்ட இலை, தழைகள்) உட்கொண்டதால், மிருதுவான தோல் அமைப்பு மரக்கட்டை போல கடினமானதாக மாறிவிட்டது. இந்த சம்பவத்திற்கு பிறகு, என்னுடைய வயலில் எந்தவிதமான உர ரசாயனமும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் பயன்படுத்தவே இல்லை. நம்மாழ்வாரின் அறிவுரைப்படி, இயற்கை விவசாய யுக்திகளையும், பாரம்பரிய நெல் விதை களையும் பயன்படுத்தி, விவசாயம் செய்ய தொடங்கினேன்.
* இயற்கை விவசாயம் ஏன் அவசியமாகிறது?
நஞ்சில்லா காய்கறிகளை விளைவிக்கவும், ஆரோக்கியமாக வாழவும் இயற்கை விவசாயம் அவசியமாகிறது. இயற்கை விவசாய முறையில்தான், உணவே மருந்து என்ற அடிப்படையும் பிறந்தது.
* பாரம்பரிய நெல் விதைகளை சேமிக்கத் தொடங்கியது எப்போது?
2006-ம் ஆண்டு முதல் பாரம்பரிய நெல் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறேன். தூய மல்லி, பாசுமதி, மிளகி, இலுப்பைப்பூ சம்பா, ஆடுதுறை சம்பா... ஆகிய 5 நெல் ரகங்களை வாங்கி, என்னுடைய விவசாய நிலத்தில் பயிரிட்டேன். நல்ல விளைச்சல் கிடைத்தது. இதில் சாதம் வடித்து, பிள்ளை களோடு சாப்பிட்டபோதுதான் அதன் தனிச் சுவையை உணர்ந்தனர். அன்றிலிருந்து இன்று வரை என்னுடைய வயல்வெளிகளில், பாரம்பரிய நெல் ரகங்களே விளைகின்றன. என் வீட்டு சமையல் அறையிலும், பாரம்பரிய அரிசி ரகங்களே உணவாக பரிமாறப்படுகின்றன.
* இப்போது என்னென்ன பாரம்பரிய நெல் ரகங்களை வைத்திருக்கிறீர்கள்?
மாப்பிள்ளை சம்பா, கிச்சடி சம்பா, தங்க சம்பா, பூங்கர், கருடன் சம்பா, கருங்குறுவை, தாய்லாந்து கவுனி, நாட்டு கவுனி, கருத்தக்கார், குழியடிச்சான் (குழி வெடிச்சான்), குள்ளங்கார், வெள்ளைக்கார், மட முழுங்கி, நொறுங்கன்... இப்படி 19 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை விளைவித்து, பாதுகாத்து வருகிறேன். கூடவே, பாரம்பரிய நெல் ரகங்கள் மீது ஈடுபாடு காட்டும் இளம் விவசாயிகள், ஐ.டி.துறையில் இருந்து விவசாயத்துறைக்கு வரும் இளைஞர்களுக்கு இலவசமாக பாரம்பரிய நெல் விதைகளை வழங்கி வருகிறேன்.
* பாரம்பரிய நெல் வகைகளின் நன்மைகள் என்ன?
கருப்பு கவுனி இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும். இலுப்பைப்பூ சம்பா பித்த நீர் சுரப்பை அதிகரிக்கும். பக்கவாதத்தையும் விரட்டும். மாப்பிள்ளை சம்பா, புதுமாப்பிள்ளைகள் சாப்பிடக்கூடிய ரகம். தங்க சம்பா, மேனி பள பளப்பிற்கும் உதவும். கிச்சடி சம்பா உணவின் சுவை, மணம் கூட்டும். கருடன் சம்பா, கண் பார்வை திறனை அதிகரிக்கும். காட்டுயானம் நெல், புயல் மழைகளை தாங்கி வளரக்கூடியது. உடலுக்கு யானை பலம் தரக் கூடியது. நொறுங்கன் அரிசி, நொறுங்கிய எலும்புகளை சீராக்கக்கூடியது.
* பாரம்பரிய நெல் ரகம் மற்றும் இயற்கை விவசாயம் குறித்த விழிப் புணர்வுகளை எப்படி ஏற்படுத்துகிறீர்கள்?
குழந்தை நல அறக்கட்டளை என்ற அமைப்பை உருவாக்கி, புதுக்கோட்டையை சுற்றியிருக்கும் எல்லா விவசாயிகளையும் சந்திக்கிறோம். விரும்பியவர்களுக்கு எங்களது சேமிப்பில் இருக்கும் பாரம்பரிய நெல் ரகங்களை வழங்கி, விளைவிக்க ஊக்கம் கொடுக்கிறோம். இதற்காக வருடத்தில் இருமுறை பாரம்பரிய நெல் திருவிழாக்களை நடத்தி, விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்குகிறோம்.
* உங்களுடைய இலக்கு எது?
எதிர்கால சந்ததியினரை நோயில்லா சமுதாயமாக மாற்றுவதே என்னுடைய இலக்கு. இதற்கு வழிவகை செய்யும் இயற்கை விவசாயத்தையும், உணவே மருந்து என்பதை நிரூபிக்கும் பாரம்பரிய நெல் ரகங்களையும், எதிர்கால சந்ததியினருக்கு கற்றுக்கொடுக்க முயல்கிறேன்.
இயற்கை விவசாயத்தில் செடிகளுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்குமா?
முட்டை கரைசல், பஞ்ச கவ்யம், மண் புழு உரம், அமிர்த கரைசல், மீன் அமிலம், தேமூர் கரைசல்.... என இயற்கை பொருட்களை கொண்டு பயிர்களை உரமூட்ட முடியும். இவை மற்ற செயற்கை உர செலவைவிட, மிக குறைவானதே.