படுக்கை அறை என்பது மகிழ்ச்சிக்கான இடம். அங்கு கணவனும், மனைவியும் கூடிவிட்டால் மகிழ்ச்சி ஏற்படத்தான் செய்யும். அந்த மகிழ்ச்சிக்குள் காதலை வளர்ப்பது இயல்பான விஷயம்தான். ஆனால் மனைவி சிரமப்படும் இடம் சமையல் அறை. அங்கு மனைவி சிரமப்பட்டு சமையல்வேலையை செய்யும்போதெல்லாம் படுக்கை அறையில் பயன்படுத்திக்கொள்ளும் கணவர், சமையல் அறையில் நாம் கஷ்டப்படும்போது கண்டுகொள்ளாமல் இருக்கிறாரே என்ற எரிச்சல் உருவாகும். அந்த நேரத்தில் கணவர் கைகொடுத்து, சில உதவிகளை செய்தால் கணவர் மீதான அன்பு பெருகி காதல் வளரும் என்று விளக்கம் தருகிறார்கள்.
இன்றைய பெண்களின் நிலையை புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவ முன்வரும் ஆண்கள் குடும்பத்திற்கே ஒரு வரப்பிரசாதம் தான். வெளியிலும் போய் வேலை செய்துவிட்டு களைத்து வீட்டிற்கு வரும் பெண்களுக்கு, வீட்டில் தனக்கு உதவ ஒருவர் இருக்கிறார் என்ற நினைப்பே நிம்மதியை தரும். அதை விடுத்து, வீட்டு வேலை பெண்களுக்கானது. வேலைமுடிந்து எப்போது வீட்டுக்கு வந்தாலும் அவர்கள்தான் அதை செய்ய வேண்டும் என்ற வாதம் பெண்களை மன அழுத்தத்தில் கொண்டு விட்டுவிடும்.
அந்த உண்மையை ஆண்கள் இப்போது உணர்ந்துகொள்ளத் தொடங்கிவிட்டார்கள். சமையல் அறைக்குச் சென்று பெண்களுக்கு கைகொடுத்து உதவுகிறார்கள். பல ஆண்கள் சமைக்கவும் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள். இது மிகவும் நல்ல விஷயம். இது மனைவிக்கு உதவுவதற்கு மட்டுமல்ல. அவர்களுக்கும் சமயத்தில் பயன்படும். வெளியூர்களில் சென்று தங்கும் நிலைமை ஏற்பட்டால் வாய்க்கு ருசியாக சாப்பிட இந்த சமையல் கைகொடுக்கும்.
ஆனாலும் சில ஆண்கள் மாறாமல் இப்போதும் அதிகாரபிரியர்களாகவே இருந்துகொண்டிருக்கிறார்கள். டிபன் ரெடியா, என்னோட சாக்ஸ் எங்கே? டவல் எங்கே? சாவியை எடு... என்றெல்லாம் நிமிடத்துக்கு நிமிடம் கட்டளைகளை பிறப்பித்துக்கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்ட ஆண்கள், மனைவியின் எரிச்சலுக்கு ஆளாகி குடும்பத்தின் நிம்மதிக்கு உலை வைத்து விடுகிறார்கள்.
சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு செயல்படும் மனிதனால்தான் வெற்றிகரமான ஒரு வாழ்க்கையை வாழ முடியும். குடும்பத்தினரின் மன மகிழ்ச்சிக்கும், உடல் நலத்திற்கும் இதுவே ஆதாரமாக இருக்கிறது. வெளிநாடுகளில் மக்கள் இதை உணர்ந்து செயல்படுகிறார்கள். பெண்களின் மன உளைச்சலுக்கு காரணமாக இருப்பது வேலைப்பளு தான் என்பதை கண்டறிந்து அதற்கு தீர்வாக அவர்களது வேலைகளை பகிர்ந்துகொள்கிறார்கள்.
குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்த பெண்கள் முன் வந்திருக்கும் இந்த தருணத்தில், ஆண்களும் அவர்களுக்கு அனுசரணையாக வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்வது தான்முறை. இதற்காக ஒரு சட்டமோ, உத்தரவோ போட முடியாது. இது ஒரு மனிதாபிமான அடிப்படையிலான செயல். குடும்ப நலனுக்காக ஆண்கள் தங்களை மாற்றிக்கொள்வது ஆரோக்கியமான குடும்ப வளர்ச்சிக்கு மிக அவசியம்.